தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

விமானச் சேவைகளை விரிவாக்கும் எஸ்ஐஏ

2 mins read
f59d6b76-945a-402a-8b2d-302b986711f0
ஜூன் 2ஆம் தேதி முதல் சிங்கப்பூரிலிருந்து ஸ்பெயினின் பார்சிலோனா நகரத்திற்கு நேரடி விமானச் சேவையை வாரம் இருமுறை வழங்க சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் திட்டமிட்டுள்ளது. - கோப்புப்படம்:ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

2024ஆம் ஆண்டு மார்ச் மாதத்திலிருந்து அக்டோபர் வரை பெய்ஜிங், ஷாங்காய், ஹாங்காங், மெல்பர்ன் ஆகிய நகரங்களில் தன் சேவையைக் கணிசமாக அதிகரிக்க சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் (எஸ்ஐஏ) திட்டமிட்டுள்ளது. இதன்மூலம் பெருந்தொற்றுக்கு முந்தைய நிலையை மீட்டெடுக்க முடியும் என அது எண்ணுகிறது.

அடுத்த ஆண்டு ஜூன் 2ஆம் தேதி முதல் சிங்கப்பூரிலிருந்து ஸ்பெயினின் பார்சிலோனா நகரத்திற்கு நேரடி விமானச் சேவையை வாரம் இருமுறை வழங்கவும் அது திட்டமிட்டுள்ளது.

இந்த இடங்களுக்கான விமானச் சேவையைத் திறம்படப் பூர்த்திசெய்ய இந்தப் புதிய திட்டங்கள் உதவும் எனவும் சில வழித்தடங்களில், பெரிய ரக விமானங்களைப் பயன்படுத்தித் திறனை அதிகரிக்கவும் எஸ்ஐஏ திட்டமிட்டுள்ளதாகத் திங்கட்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.

மேலும், சிங்கப்பூரிலிருந்து ஆஸ்திரேலியாவின் கேர்ன்ஸ் பகுதிக்குச் செல்லும் 154 இருக்கைகளைக் கொண்ட போயிங் 737-8 ரக விமானம், 303 இருக்கைகளைக் கொண்ட ஏ350-900 நடுத்தர தூர விமானமாக மாற்றப்படும் என அது கூறியது.

இந்த வழித்தடத்தில் பெரிய ரக விமானங்கள் இருபது ஆண்டுகளில் இயக்கப்படுவது இதுவே முதல்முறை என எஸ்ஐஏ தெரிவித்தது.

சிங்கப்பூரிலிருந்து மாலத்தீவின் மாலேக்கும் செல்லும் விமானங்கள் அடுத்த ஆண்டு மார்ச் 31முதல் சிறிய ரகப் போயிங் 737-8 விமானங்களுக்குப் பதிலாக ஏ350-900 நடுத்தர ரக அதிகதூரம் செல்லும் விமானங்களைப் பயன்படுத்தும் எனவும் அது கூறியது.

சிங்கப்பூருக்கும் துபாய்க்கும் இடையேயான எஸ்ஐஏயின் விமானங்கள் மார்ச் 31, 2024 முதல் வாரத்திற்கு 11 முறை இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்