ஜப்பானிய விமான நிறுவனங்களான ஜப்பான் ஏர்லைன்ஸ் (ஜேஎல்), ஆல் நிப்பான் ஏர்வேஸ் (ஏஎன்ஏ) ஆகியவற்றுக்கு அடுத்த நிலையில் 2024ஆம் ஆண்டில் ஆசிய பசிபிக்கில் மிகவும் சரியான நேரத்தில் விமானங்களை இயக்கும் நிறுவனப் பட்டியலில் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் (எஸ்ஐஏ) மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது.
எஸ்ஐஏயின் நேரச் செயல்திறன் மதிப்பெண் 2024ல் 78.67 விழுக்காடாக இருந்தது. ஒப்புநோக்க, இது 2023ல் 78.57 விழுக்காடாக இருந்தது. அப்போது அது இவ்வட்டாரத்தில் ஏழாம் இடத்தைப் பிடித்தது.
இந்தத் தரவை ஜனவரி 1ஆம் தேதி அன்று விமானப் பகுப்பாய்வு நிறுவனமான ‘சிரியம்’ வெளியிட்டது.
ஒரு விமானம் அதன் திட்டமிடப்பட்ட வருகை அல்லது புறப்படும் நேரத்திலிருந்து 14 நிமிடங்கள், 59 வினாடிகளுக்குள் வர வேண்டும் அல்லது புறப்பட வேண்டும் என்று சிரியம் கூறியது.
ஆசிய பசிபிக்கின் வெற்றியாளரான ஜப்பான் ஏர்லைன்சின் நேர செயல்திறன் 80.9%. ஆல் நிப்பான் ஏர்வேஸ் 80.62 விழுக்காட்டுடன் இரண்டாம் இடத்தில் வந்தது.
ஜப்பானிய விமானங்களும் 2023ல், வட்டாரத் தரவரிசையில் முதலிடத்தைப் பிடித்தன. அதன்படி ஆல் நிப்பான் ஏர்வேஸ் 82.75 விழுக்காட்டையும் ஜப்பான் ஏர்லைன்ஸ் 82.58 விழுக்காட்டையும் பதிவு செய்தன.
“ஆசிய பசிபிக்கில் சரியான நேரச் செயல்திறன் ஒரு விழுக்காடு அல்லது அதற்கு மேல் குறைந்துள்ளது (அனைத்து விமான நிறுவனங்களையும் உள்ளடக்கியது). ஆனால், சிறந்த விமான நிறுவனங்களின் பட்டியல் நிலைகள் கிட்டத்தட்ட அதே நிலையில் கட்டிக்காக்கப்பட்டுள்ளது,” என்று சிரியம் நிறுவனத்தின் தலைமை சந்தைப்படுத்தல் அதிகாரி மைக் மாலிக், 2024 டிசம்பரில் ஒரு மெய்நிகர் செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.
மற்ற விமான நிறுவனங்களின் செயல்திறன் குறைந்துள்ளதால், சரியான நேரச் செயல்திறனில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைப் பதிவு செய்யாவிட்டாலும், சிங்கப்பூர் ஏர்லைன்ஸ், ஆசிய பசிபிக் தரவரிசையில் உயர்ந்துள்ளது என்றும் திரு மாலிக் கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
“சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் தனது செயல்திறனை நிலையாக வைத்திருக்கும் அதே வேளையில், அதன் தரத்தையும் கட்டிக்காத்து வருகிறது,” என்று அவர் மேலும் கூறினார்.
எஸ்ஐஏ குறைந்த விமான ரத்து விகிதமான 0.08 விழுக்காட்டைக் கொண்டிருந்தது. பெரும்பாலான விமான நிறுவனங்களின் விமான ரத்து விகிதம் சராசரியாக 1 விழுக்காடு அல்லது அதற்கும் அதிகமாக இருந்தது.
உலகளவில், 86.7 விழுக்காடு மதிப்பெண்களுடன், மெக்சிகோவின் தேசிய விமான நிறுவனமான ஏரோமெக்சிகோதான், மிகவும் சரியான நேரத்தில் செயல்படும் விமான நிறுவனம் என்ற சிறப்பைப் பெற்றது. அதற்கு அடுத்து இரண்டாம் நிலையில் 86.35 விழுக்காட்டு மதிப்பெண்களுடன் சவூதி அரேபியாவின் சவூதியா வந்தது. மூன்றாம் நிலையில், 83.46 விழுக்காட்டு மதிப்பெண்களுடன் அமெரிக்காவின் டெல்டா ஏர்லைன்ஸ் வந்தது.
சரியான நேரச் செயல்திறனுக்காக எந்த சிங்கப்பூர் விமானமும் உலகளவில் முதல் 10 இடங்களுக்குள் இடம்பெறவில்லை.

