தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

புதுடெல்லியில் உணவுத்துறைக் கண்காட்சி: ‘சிக்கி’ பேராளர்கள் பங்கேற்பு

2 mins read
c4f9a718-1703-433b-9bca-6a71be0e1914
‘இன்டஸ்ஃபுட் 2025’ உணவுத்துறைக் கண்காட்சியில் ‘சிக்கி’ எனப்படும் சிங்கப்பூர் இந்திய வர்த்தக, தொழிற்சபையைச் சேர்ந்த 12 பேராளர்கள் பங்கேற்கின்றனர். - படம்: சிங்கப்பூர் இந்திய வர்த்தக, தொழிற்சபை

இந்தியாவின் துடிப்புமிக்க உணவுச்சந்தையை எடுத்துக்காட்டும் ‘இன்டஸ்ஃபுட் 2025’ அனைத்துலக உணவு வர்த்தகக் கண்காட்சி புதுடெல்லியில் நடைபெற்று வருகிறது. 

அதில் பங்கேற்பதற்காக ‘சிக்கி’ எனப்படும் சிங்கப்பூர் இந்திய, வர்த்தக தொழிற்சபையைச் சேர்ந்த 12 பேராளர்கள் இந்தியா சென்றுள்ளனர்.

இந்தியாவின் வர்த்தக மேம்பாட்டு மன்றம் ஏற்பாடு செய்துள்ள இந்தக் கண்காட்சி, ‘இந்தியன் எக்ஸ்பொசிஷன்’ மாநாட்டு அரங்கில் ஜனவரி 10ஆம் தேதிமுதல் 12ஆம் தேதிவரை நடைபெறுகிறது.

எட்டாவது முறையாக நடைபெறும் இந்த நிகழ்ச்சி, கடந்த ஆண்டு முதல் அனைத்துலகப் பங்கேற்பாளர்களை வரவேற்கத் தொடங்கியது. 123க்கும் அதிகமான நாடுகளைச் சேர்ந்த 4,500க்கும் அதிகமான பேராளர்களும் பங்கேற்பாளர்களும் இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்கின்றனர்.

உணவுத் தயாரிப்புகள், பொட்டலமிடும் முறைகள், உணவுப் பதனீட்டுத் துறைப் புத்தாக்கங்கள் என உணவுத் துறையுடன் தொடர்பான பல்வேறு கூறுகளை உள்ளடக்கியுள்ள இந்நிகழ்ச்சி, அனைத்துலக உலகத் தயாரிப்புச் சந்தையில் இந்தியாவிற்கான இடத்தை வலுப்படுத்த முனைவதாக ஏற்பாட்டாளர்கள் கூறுகின்றனர்.

“15 வகையான விவசாயச் சூழல்களைக் கொண்டுள்ள இந்தியா, பன்முகத்தன்மை வாய்ந்த விளைபொருள்களை அறுவடை செய்யும் ஆற்றலைக் கொண்டுள்ளது. அனைத்துலக உணவுத் துறையின் வருங்கால உந்துசக்தியாக இந்தியா திகழ்கிறது,” என்று இந்திய உணவுப் பதனீட்டுத்துறை அமைச்சு தெரிவித்தது.

இதற்கிடையே, உணவுப் பதனீட்டுத் துறை அமைச்சர் சிராக் பஸ்வானை ‘சிக்கி’யின் அனைத்துலகமயமாதல் குழுவிற்கான தலைவர் மனீஷ் திரிபாதி, இணைத்தலைவர் ஜெக்தீஷ் பிரசாத் ஜெய்ஸ்வால் ஆகியோர் சந்தித்ததாக ‘சிக்கி’ அமைப்பு கூறியது.

அத்துடன், அந்தப் பேராளர்கள் இருவரும் இந்தியாவின் வர்த்தக மேம்பாட்டு மன்றத்தின் தலைவர் மோஹித் சிங்லாவையும் சந்தித்தனர். கொள்கை வகுப்பு குறித்த கருத்துகளை வழங்குவதற்கும் வர்த்தகச் சூழலை மேம்படுத்துவதற்கான வழிகளை ஆராய்வதற்கும் இந்தச் சந்திப்பு வாய்ப்பு அளித்ததாக ‘சிக்கி’ குறிப்பிட்டது.

“தகவல் பரிமாற்றம், தொடர்பு விரிவாக்கம், புதிய வாய்ப்புகளுக்கான ஆய்வு ஆகியவற்றுக்கு இந்நிகழ்ச்சி நல்ல தளத்தை ஏற்படுத்தித் தந்துள்ளது,” என்று ‘சிக்கி’ தெரிவித்துள்ளது. 

‘இன்டஸ்ஃபுட் 2025’ நிகழ்ச்சியில் சிங்கப்பூர்ப் பேராளர்கள் பங்கேற்றது குறித்து மகிழ்ச்சி அடைவதாக ‘சிக்கி’ தலைவர் நீல் பரேக், தமிழ் முரசிடம் தெரிவித்தார். 

“உணவுத் துறையைப் பொறுத்தவரையில் சிங்கப்பூருக்கும் இந்தியாவுக்குமான வாய்ப்புகள் அதிகரித்து வருகின்றன. இந்தப் பங்கேற்பின்மூலம் உணவு ஏற்றுமதியில் சிங்கப்பூருக்குள்ள நிபுணத்துவத்தை எடுத்துக்காட்ட முற்படுகிறோம். இந்தியாவின் முக்கிய வர்த்தகப் பங்காளி என்ற நிலையை வலுப்படுத்துவதுடன் இரு நாட்டு வர்த்தகத்திற்கான புதிய வழிகளை ஏற்படுத்தவும் முனைகிறோம்,” என்று திரு பரேக் கூறினார்.

குறிப்புச் சொற்கள்