சிங்கப்பூரிலிருந்து அமெரிக்காவின் நியூயார்க் நகரை நோக்கிப் புறப்பட்ட சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம், அதன் விமானிக்குத் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதாகக் கூறப்பட்டதைத் தொடர்ந்து, மீண்டும் சாங்கி விமான நிலையத்திற்குத் திருப்பி விடப்பட்டது. இந்தச் சம்பவம் திங்கட்கிழமை (செப்டம்பர் 14) நிகழ்ந்தது.
ஏர்பஸ் ஏ350-900 ரகத்தைச் சேர்ந்த எஸ்கியூ24 என்ற அந்த விமானத்தில் 144 பயணிகளும் 17 சிப்பந்திகளும் இருந்ததாகச் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் தெரிவித்தது. ‘ஃபிளைட் ரேடார் 24’ எனும் விமானக் கண்காணிப்பு இணையத்தளத்தின் தரவுகளின்படி, திங்கட்கிழமை (செப்டம்பர் 14) பிற்பகல் 12.24 மணியளவில் அந்த விமானம் சாங்கி விமான நிலையத்திலிருந்து புறப்பட்டது.
பயணம் தொடங்கி ஏறத்தாழ நான்கு மணி நேரம் கழித்து, ஃபிலிப்பீன்ஸ் கடல் பகுதி மற்றும் தைவானைக் கடந்து சென்றபோது, விமானம் மீண்டும் சிங்கப்பூர் நோக்கித் திரும்புவது பதிவானது. இறுதியில் அந்த விமானம் இரவு 9.11 மணியளவில் சாங்கி விமான நிலையத்தில் பாதுகாப்பாகத் தரையிறங்கியது.
விமானத்தில் அவசர மருத்துவ நிலைமை ஏற்பட்டதை உறுதிப்படுத்திய சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் செய்தித்தொடர்பாளர், தனிப்பட்ட விவரங்களைக் காக்கும் நோக்குடன் கூடுதல் விவரங்களை வெளியிட மறுத்துவிட்டார். இருப்பினும், விமானத்தில் இருந்த பயணிகள் சிலர் தங்களது சமூக ஊடகப் பக்கங்களில் விமானிக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதாகப் பதிவிட்டுள்ளனர்.
தரையிறங்கிய பயணிகளுக்குத் தேவையான சிற்றுண்டி உள்ளிட்ட அனைத்து உதவிகளும் வழங்கப்பட்டதாகச் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் கூறியது. விமானத்தில் மீண்டும் எரிபொருள் நிரப்பப்பட்டதைத் தொடர்ந்து, அது இரவு 11.58 மணிக்கு மீண்டும் நியூயார்க் நோக்கிப் புறப்பட்டு, உள்ளூர் நேரப்படி செவ்வாய்க்கிழமை காலை 9.38 மணிக்கு ஜான் எஃப் கென்னடி அனைத்துலக விமான நிலையத்தை அடையும் என அறிவிக்கப்பட்டது.
இந்தச் சம்பவத்தால் பயணிகளுக்கு ஏற்பட்ட சிரமத்துக்குச் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் மன்னிப்பு கேட்டுக்கொண்டுள்ளது.
