வெட்டுக்கத்தி, போதைப்பொருள், கள்ள சிகரெட்: அதிகாலையில் அட்மிரல்டியில் சிக்கிய ஆடவர்

வெட்டுக்கத்தி, போதைப்பொருள், கள்ள சிகரெட்: அதிகாலையில் அட்மிரல்டியில் சிக்கிய ஆடவர்

1 mins read
352457a1-3bfa-446d-8ec0-848f238c5d24
பிடிபட்ட வேனிலிருந்த கள்ள சிகரெட் பெட்டிகளை ஆராயும் அதிகாரிகள். - படம்: எஸ்பிஎச் மீடியா

அட்மிரல்டியில் வியாழக்கிழமை (பிப்ரவரி 27) அதிகாலை 37 வயது ஆடவர் ஒருவரைக் காவல்துறை காரில் துரத்திப் பிடித்துக் கைதுசெய்தது.

வெட்டுக்கத்தி, போதைப்பொருள் எனச் சந்தேகிக்கப்படும் பொருள்கள், அதுதொடர்பான துணைப்பொருள்கள், 660 பெட்டி கள்ள சிகரெட்டுகள் ஆகியவை அந்த ஆடவரின் வேனிலிருந்து கைப்பற்றப்பட்டதாகக் காவல்துறை தெரிவித்தது.

செம்பவாங் டிரைவில் அதிகாலை 4.20 மணியளவில் சுற்றுக்காவலில் ஈடுபட்டிருந்த காவல்துறை அதிகாரிகள், சோதனை செய்யும் பொருட்டு வாகனம் ஒன்றை நிறுத்தும்படி சமிக்ஞை காட்டினர்.

ஆனால், நிறுத்தாமல் தமது வாகனத்தை ஓட்டிச் சென்றார் அந்த ஆடவர். ஆயினும், அவரது கட்டுப்பாட்டை இழந்த வாகனம், அட்மிரல்டி டிரைவில் சறுக்கியது.

அதனால், வாகனத்தைக் கைவிட்டு, அங்கிருந்து தப்பியோட முயன்ற அந்த ஆடவரைக் காவல்துறை விரட்டிப் பிடித்தது. அவர் பிடிபட்டபோது, அவரது வேனிலிருந்த சட்டவிரோதப் பொருள்களும் கண்டுபிடிக்கப்பட்டுவிட்டன.

பின்னர், அந்த ஆடவர் சுயநினைவுடன் மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்டார். அதன்பிறகு, ஓட்டுநர் உரிமமின்றி வாகனம் ஓட்டியது, பொது இடங்களில் பயங்கர ஆயுதங்களை வைத்திருந்தது, போதைப்பொருள் சார்ந்த குற்றங்களில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படுவது ஆகியவற்றின் தொடர்பில் அவரைக் காவல்துறை கைதுசெய்தது.

அத்துடன், போக்குவரத்து சார்ந்த மற்ற குற்றச்செயல்களுக்காகவும் அவர் விசாரிக்கப்படுகிறார்.

சம்பவம் தொடர்பான காணொளி காலை 11 மணியளவில் ஃபேஸ்புக் பக்கத்தில் பகிரப்பட்டது.

குறிப்புச் சொற்கள்