குழிப்பந்துப் போட்டிவழி மாணவர்களுக்காக திரட்டப்பட்ட $500,000 நிதி

2 mins read
a4d80e9f-2d7e-4588-a052-bb99a519f6d0
குழிப்பந்து நிகழ்ச்சிக்குப் பிந்திய இரவு விருந்தில் சட்ட, போக்குவரத்துத் துணை அமைச்சர் முரளி பிள்ளை உரையாற்றுகிறார். - படம்: சிங்கப்பூர் இந்தியர் கல்வி அறக்கட்டளை

சிங்கப்பூர் இந்தியர் கல்வி அறக்கட்டளையும் (எஸ்ஐஇடி) சிங்கப்பூர் இந்திய மேம்பாட்டுச் சங்கமும் நடத்திய நன்கொடை குழிப்பந்தாட்டப் போட்டி, கிட்டத்தட்ட 500,000 வெள்ளி நிதியைத் திரட்டியுள்ளது.

இந்தப் பணம், மாணவர்களுக்கான கல்வி உதவி நிதிக்காகவும் கல்விக்கட்டணத்திற்கான கடனுக்காகவும் பயன்படுத்தப்படும்.

ஆகஸ்ட் 23ஆம் தேதியன்று செம்பவாங் ‘கண்ட்ரி கிளப்’பில் நடைபெற்ற நிதித்திரட்டு நிகழ்ச்சியில் 128 விளையாட்டளார்கள் பங்கேற்றனர். திரட்டப்பட்ட ரொக்கத் தொகைக்கு சிங்கப்பூர் ‘டோட்பார்ட்’ அமைப்பு, வெள்ளிக்கு வெள்ளி நிகராகத் தரும் என்றது எஸ்ஐஇடி.

தொடக்கக் கல்லூரிகள், பலதுறைத் தொழிற்கல்லூரிகள், 500க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு சிங்கப்பூர் இந்தியர் கல்வி அறக்கட்டளை ஒவ்வோர் ஆண்டுமே நிதியுதவியை அளித்து வருகிறது.

நேரடியான நிதி ஆதரவு தவிர, இந்த அறக்கட்டளை வட்டியில்லாக் கடன்களைத் தந்து வசதி குறைந்த குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களின் நிதிச்சுமையைக் குறைக்கிறது.

குழிப்பந்துப் போட்டிக்குப் பிறகு, பங்களிப்பாளர்களுக்கும் நன்கொடையாளர்களுக்கும் விருந்து நிகழ்ச்சி நடந்தேறியது. நிதி உதவி பெற்ற குறிப்பிட்ட மாணவர்கள் சிலரின் அனுபவங்கள் பகிரப்பட்டன.

சட்ட, போக்குவரத்துத் துணை அமைச்சர் முரளி பிள்ளை இந்நிகழ்ச்சியைச் சிறப்பித்தார்.

“இது போன்ற நிகழ்ச்சிகள் நிதித்திரட்டு நிகழ்ச்சிகள் மட்டும் அல்ல. அவை சமூக உணர்வின் ஆற்றலுக்குச் சான்றாக உள்ளன,” என்று திரு முரளி தெரிவித்தார்.

“நிதி நெருக்கடியால் சிரமப்படும் இளையர்களுக்கு இந்த நிதித்திரட்டு நிச்சயம் கைகொடுக்கும். இந்த மாணவர்களை ஆதரிப்பதன் மூலம் நாம், நம் சமூகத்திலும் நாட்டிலும் முதலீடு செய்கிறோம்,” என்றார் திரு முரளி.

கடந்த மூன்று முறை நடத்தப்பட்ட குழிப்பந்துப் போட்டிகளின்மூலம் அறக்கட்டளை 660,000 வெள்ளிக்கு மேல் திரட்டியதாகத் தெரிவித்துள்ளது. இந்தக் காலகட்டத்தின்போது 104 மாணவர்களுக்கு மொத்தம் 900,000 வெள்ளி பெறுமானமுள்ள வட்டியில்லாக் கடன்கள் தரப்பட்டன.

இதற்கான ஆதரவை மக்கள் திரளாக நல்குவதாக நிகழ்ச்சி ஏற்பாட்டுக்குழுவின் பொருளாளர் அபுதஹீர் அப்துல் கபூர் தெரிவித்தார்.

“ஆண்டுக்கு ஆண்டு தெரிந்த முகங்கள் பலர் மீண்டும் வந்து எங்களை ஆதரிக்கின்றனர்,” என்று அவர் கூறினார்.

நிகழ்ச்சியின்போது சிங்கப்பூர் இந்தியர் கல்வி அறக்கட்டளைக்கும் ஏடி கேப்பிட்டல் நிறுவனத்திற்கும் இடையிலான இணக்கக் குறிப்பு பற்றிப் பேசப்பட்டது. ஒரு மில்லியன் வெள்ளி மதிப்பிலான இது, இவ்வாண்டு மே மாதத்தின்போது கையெழுத்திடப்பட்டது. இந்த ஒப்பந்தம் இரண்டாவது முறையாக செய்யப்படுகிறது.

சிங்கப்பூர் இந்தியர் கல்வி அறக்கட்டளை மூலம் பயன்பெற்ற மாணவர்களில் ஒருவரான சல்மான் ஃபஸ்ருதீன் சாகுல் ஹமீது, 28, தெமாசிக் பலதுறைத் தொழிற்கல்லூரியில் மின்னணுவியல் பொறியியல் பயின்று சிறந்த மதிப்பெண் வாங்கியதும் நிகழ்ச்சியின்போது குறிப்பிடப்பட்டது.

“நிதி உதவி பெற்றது மட்டுமல்லாமல், அனுபவமிக்க பலரது தொடர்பும் வழிகாட்டுதலும் எனக்குக் கிடைத்தன. இந்த தொடர்பு வட்டத்தை அமைப்பதற்கான வாய்ப்பு மதிப்புமிக்கதாக உள்ளது,” என்று திரு சல்மான் கூறினார்.

குறிப்புச் சொற்கள்