செங்காங் ரிவர்வேல் வணிக வளாகத்தில் பெயர்ப்பலகை சரிந்து விழுந்ததில், சிறுவன் ஒருவனுக்கு அடிபட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டான்
ரிவர்வேல் வணிக வளாகத்திலுள்ள உணவு மையத்தில் சனிக்கிழமை (ஜூன் 20) காலை நிகழ்ந்த விபத்து குறித்து 10.30 மணியளவில் தகவல் அறிந்ததாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது. பாதிக்கப்பட்ட சிறுவனை கே.கே. மகளிர் குழந்தைகள் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றதாக அது கூறியது.
சிகிச்சை பெற்ற சிறுவன் தற்போது வீட்டில் ஓய்வெடுக்கிறான். டிக்டாக் சமூக ஊடகத்தில் பரவி வரும் காணொளியில், பெயர்ப்பலகை சரிந்து விழுந்ததில் ஏற்பட்ட இடிபாடுகள் நுழைவாயிலை முழுமையாக மூடியிருப்பதைக் காண முடிகிறது.
“இந்த துரதிர்ஷ்டவசமான சம்பவத்திற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம். பாதிக்கப்பட்ட வாடிக்கையாளருக்கு வணிக வளாக நிர்வாகத்துடன் இணைந்து உடனடியாக உதவிகள் வழங்கப்பட்டன,” ,” என்று உணவு மையத்தின் செய்தித் தொடர்பாளர் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் கூறினார்.
விபத்துக்கான காரணம் குறித்து முழுமையான விசாரணை நடத்தப்பட்டு, பாதுகாப்பு அம்சங்கள் பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
உணவு மையம் மீண்டும் செயல்பாட்டைத் தொடங்கியுள்ளது.

