செல்லப் பிராணிகளைத் தத்தெடுப்பது முக்கால்வாசி சரிந்தது

2 mins read
cc56a258-001d-484e-899d-5be2718b2d9d
சிங்கப்பூரில் செல்லப்பிராணிகளைத் தத்தெடுக்கும் விகிதம் 2019ஆம் ஆண்டுக்குப் பின் சரிந்துவருவதாக விலங்குநல அமைப்புகள் கூறுகின்றன. - படம்: த நியூ பேப்பர்

சிங்கப்பூரில் செல்லப்பிராணிகளைத் தத்தெடுக்கும் விகிதம் 2019ஆம் ஆண்டிலிருந்து குறைந்து வருவதாகவும் சில இடங்களில் அது 75 விழுக்காடு வரை சரிந்துவிட்டதாகவும் ஒருசில விலங்குநல அமைப்புகள் தெரிவித்துள்ளன.

அதிகரிக்கும் செலவினங்கள், மாறிவரும் வேலைச்சூழல் ஆகியவற்றால் பெரும்பாலோர் செல்லப்பிராணிகளைத் தத்தெடுக்க முன்வருவதில்லை என்கின்றன அமைப்புகள்.

வீட்டிலிருந்து வேலை செய்வது குறைந்து, வேலையிடத்திற்குத் திரும்பும் நடைமுறையாலும் உருமாறிவரும் வாழ்க்கைமுறையாலும் செல்லப்பிராணிகளை வளர்ப்பதில் மக்கள் அதிகம் ஈடுபாடு காட்டுவதில்லை என்றும் அமைப்புகள் சுட்டின.

அதேவேளை, அமைப்புகளைத் தொடர்ந்து நடத்துவதற்கான செலவினங்களும் அதிகரிப்பதால் நிரந்தர இல்லம் கிடைக்காத செல்லப்பிராணிகளைப் பராமரிப்பது அமைப்புகளுக்குச் சிரமமாகிவருகிறது.

சுங்காய் தெங்காவில் உள்ள ‘ஆக்‌ஷன் ஃபார் சிங்கப்பூர் டாக்ஸ்’அமைப்பு 2019ஆம் ஆண்டுடன் ஒப்புநோக்க இவ்வாண்டு செல்லப்பிராணிகளைத் தத்தெடுக்கும் விகிதம் 60 விழுக்காடு குறைந்திருப்பதாகத் தெரிவித்தது.

இம்மாதம் 23ஆம் தேதி நிலவரப்படி இவ்வாண்டு 65 நாய்கள் மட்டும் அமைப்பிலிருந்து தத்தெடுக்கப்பட்டன. கொவிட்-19 தொற்றுக்குப் பின் வீட்டிலிருந்து வேலை செய்யும் நடைமுறையை நிறுவனங்கள் கைவிடுவதால் அத்தகைய நிலை ஏற்பட்டுள்ளதாக அந்த அமைப்பு கருதுகிறது.

அலுவலகத்திற்குச் செல்வோரில் பலர் செல்லப்பிராணிகளைக் கைவிடும் போக்கு அதிகரித்ததை அது சுட்டியது.

செல்லப்பிராணிகள் மூப்படைவதால் அவற்றைப் பராமரிப்பதற்கான செலவுகளும் அதிகரிப்பதாக விலங்குநல அமைப்புகள் கூறின. ஒவ்வோர் ஆண்டும் அவற்றுக்கான மருத்துவச் செலவுகள் மட்டும் $878,000 என்று அவைக் குறிப்பிட்டன.

செல்லப்பிராணிகளின் தத்தெடுப்பு விகிதம் கடந்த ஆறு ஆண்டுகளில் ஏறக்குறைய 75 விழுக்காடு சரிந்ததாக விலங்குநல அமைப்புகள் குறிப்பிட்டன.
செல்லப்பிராணிகளின் தத்தெடுப்பு விகிதம் கடந்த ஆறு ஆண்டுகளில் ஏறக்குறைய 75 விழுக்காடு சரிந்ததாக விலங்குநல அமைப்புகள் குறிப்பிட்டன. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

தேசியப் பூங்காக் கழகத்தின் விலங்கு, மருத்துவச் சேவை நடத்தும் ‘த அனிமல் லாட்ஜ்’ அமைப்பு ஐந்து இடங்களில் கிட்டத்தட்ட 80 நாய்களைப் பராமரிக்கிறது.

அதிகரிக்கும் செலவினங்களால் ஓரிரு பராமரிப்பு இடங்களைக் குறைத்துக்கொள்ள அது முற்படுகிறது.

ஒவ்வோர் இடத்துக்கும் எப்படியும் மாதந்தோறும் $10,000 வரை செலவிட வேண்டியிருப்பதாக அந்த அமைப்பு தெரிவித்தது.

சிங்கப்பூரின் ஆகப் பெரிய விலங்குநல அமைப்பான விலங்குவதைத் தடுப்புச் சங்கம், செல்லப்பிராணிகளின் தத்தெடுப்பு விகிதம் கடந்த ஆறு ஆண்டுகளில் ஏறக்குறைய 75 விழுக்காடு சரிந்ததாகக் குறிப்பிட்டது.

குறிப்புச் சொற்கள்