சிங்கப்பூரில் உள்ள வாடகை கார்களின் எண்ணிக்கை இதுவரை இல்லாத உச்சத்தை எட்டியுள்ளது. நாட்டின் ஒட்டுமொத்த கார்களில் கிட்டத்தட்ட 15 விழுக்காடு, அதாவது 95,857 கார்கள் வாடகை கார்கள்.
வாகன உரிமச் சான்றிதழ் கட்டணம் கணிசமாக அதிகரித்துள்ளதால் அத்தகைய நிலை ஏற்பட்டுள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.
கொவிட்-19க்குப் பிந்திய காலகட்டத்தில் வாடகை கார்களின் எண்ணிக்கை ஏறக்குறைய 41 விழுக்காடு உயர்ந்தது. 2021ஆம் ஆண்டு அந்த எண்ணிக்கை 67,990ஆக இருந்தது.
வாடகை கார் உரிமையாளர்கள் மற்றவர்களின் தனிப்பட்ட பயன்பாட்டுக்காக வாடகைக்குத் தங்கள் கார்களைத் தரலாம் அல்லது வாடகை கார் சேவைகள் வழங்குவோருக்கு அதை வழங்க முடியும்.
அதேவேளை, கார்களை வாங்குவோரின் எண்ணிக்கை 2021ஆம் ஆண்டிலிருந்து கடந்த ஆண்டு நிலவரப்படி குறைந்துள்ளது.
2021ஆம் ஆண்டு 532,204 விற்பனையாகின. கடந்த ஆண்டு 524,312 கார்கள் விற்பனையாகின.
கடந்த ஆண்டிறுதி நிலவரப்படி சிங்கப்பூரில் ஒட்டுமொத்தமாக இருந்த கார்களின் எண்ணிக்கை 659,889.
வாகன உரிமச் சான்றிதழின் கட்டணம் அதிகரித்ததை முன்னிட்டு வாடகை கார்களின் எண்ணிக்கை கூடியது. பலர் சொந்தமாக கார்களை வாங்குவதற்குப் பதிலாக அவற்றை வாடகைக்கு எடுக்க முடிவெடுத்தனர்.
தொடர்புடைய செய்திகள்
கடந்த ஆண்டு ஏ பிரிவில், அதாவது சிறிய, ஆற்றல் குறைவான கார்களின் வாகன உரிமச் சான்றிதழ் கட்டணம் இதுவரை இல்லாத அளவில் $128,105 என்ற உச்சத்தைத் தொட்டது. 2021ஆம் ஆண்டு எட்டப்பட்ட $58,801 உச்சத்தை அது தாண்டியது.
கடந்த ஆண்டு இறுதியில் வாடகை கார் சேவைகளை வழங்க 61,001 ஓட்டுநர்களுக்கு உரிமம் வழங்கப்பட்டது. 90,853 பேருக்கு டாக்சி ஓட்டுவதற்கான உரிமம் கிடைத்தது.
கடந்த ஆண்டு தனிப்பட்ட தேவைகளுக்காக கார்களை வாடகைக்கு எடுத்தவர்களின் எண்ணிக்கையும் 2021ஆம் ஆண்டுடன் ஒப்புநோக்க கணிசமாக அதிகரித்தது.
2021ஆம் ஆண்டு 23,147 கார்கள் வாடகைக்கு எடுக்கப்பட்டன. அது கடந்த ஆண்டு 33,765 ஆக உயர்ந்தது.


