ஐந்தாண்டு ஆய்விற்குப்பின் மலர்ந்த ‘சிலம்பு’

ஐந்தாண்டு ஆய்விற்குப்பின் மலர்ந்த ‘சிலம்பு’

படம்: சக்தி நுண்கலைக் கழகம்

27 Sep 2026 - 7:30 am

3 mins read

பதினொரு வகையான ஆடல்களைச் சிலப்பதிகார மாதவி, ஏழாண்டுகளாகக் கடுமையாகக் கற்று அரசர் முன்னிலையில் பிழையின்றி ஆடிப் பெற்ற மாலை, கோவலனைக் காதலனாகப் பெற்றுத்தந்தது.

கண்ணகியிடமிருந்து கணவனைப் பிரித்தவள் என்ற அவப்பெயருக்கு நிகராக மாதவியின் நடனப் புலமை பற்றிய புகழ் பரவவில்லை. அதனைப் பேசுபொருளாக்கும் சக்தி நுண்கலைக் கழகத்தின் ‘சிலம்பு’ பரதநாட்டிய நாடகம் போன்ற படைப்புகள் அரிதானவை.

வாட்டர்லூ ஸ்திரீட்டிலுள்ள ‘பிளாக் பாக்ஸ்’ அரங்கில் செப்டம்பர் 12 ஆம் தேதி பரதநாட்டிய ஆசிரியர் தேவி வீரப்பனின் இயக்கத்தில் இந்நாடகம் கிட்டத்தட்ட 155 பேர்முன் படைத்துக் காட்டப்பட்டது. 

‘கோவலன் - கண்ணகி’ திருமணம்.
‘கோவலன் - கண்ணகி’ திருமணம். - படம்: சக்தி நுண்கலைக் கழகம்

சிலப்பதிகாரக் கதையைக் கண்ணகி - கோவலன் திருமணம் முதல் மதுரை எரிக்கப்பட்டதுவரை நடனமணிகள் மேடையில் நிகழ்த்திக்காட்டினர்.

இரண்டு மணி நேர நாடகத்தில் சோழ நாட்டின் தலைநகரான புகார் நகரில் மாதவி அரங்கேற்றிய 11 ஆடல்கள், கிட்டத்தட்ட  30 நிமிடங்கள் நிமிடங்களுக்கு நீடித்தன.

சிவபெருமானின் கொடுகொட்டி, பாண்டரங்கம், திருமாலின் அல்லியம், மல்லாடம், குடக்கூத்து, முருகனின் குடைக்கூத்து, துடிக்கூத்து, காமனின் பேடிக்கூத்து, கொற்றவையின் மரக்கால் கூத்து, திருமகளின் பாவைக்கூத்து, இந்திராணியின் கடையக்கூத்து ஆகியவற்றை நடனமணிகள் வண்ணமயமாக நிகழ்த்திக் காட்டினர். 

சிவபெருமானின் ‘அர்த்தநாரி’ திருக்கோலம்.
சிவபெருமானின் ‘அர்த்தநாரி’ திருக்கோலம். - படம்: சக்தி நுண்கலைக் கழகம்

கடந்த 2020ஆம் ஆண்டு கொவிட்-19 பெருந்தொற்றால் எந்தவொரு கலை நிகழ்ச்சியும் நடைபெறாத காலகட்டத்தில், சிங்கப்பூரின் தேசிய கலை மன்றம் வழங்கிய மானியத்தின் உதவியுடன் இந்தத் தயாரிப்புக்கான விதைகள் தூவப்பட்டதாகத் திருவாட்டி தேவி நினைவுகூர்ந்தார் 

“இதற்கு முன்பு சிலப்பதிகாரத்தை ‘வர்ணம்’ வடிவத்தில் மட்டுமே மேடையேற்றியிருந்தோம். தமிழ் இலக்கியத்தில் நாட்டிய வரலாறு குறித்து முனைவர் பட்டம் பெற்றவரான டாக்டர் எம்.எஸ். சரளாவின் ஆலோசனையும் வழிகாட்டுதலும் இந்தத் தயாரிப்புக்கு வலுவான சிந்தனை அடித்தளமாக அமைந்தன,”  என்று அவர் கூறினார். 

நடனமணிகளின் ‘வண்ண வளையம்’.
நடனமணிகளின் ‘வண்ண வளையம்’. - படம்: சக்தி நுண்கலைக் கழகம்

மாதவி எவ்வாறு தனது முதல் நடனத்தை அரங்கேற்றினாள், அவளது நாட்டிய மேடை எவ்வாறு அமைக்கப்பட்டிருந்தது, வாத்தியக் கலைஞர்கள் மேடையில் எந்தெந்த இடங்களில் அமர்ந்திருந்தார்கள் போன்ற நுணுக்கமான வரலாற்றுத் தகவல்கள் சிலப்பதிகாரத்தில் உள்ளவாறே இந்தத் தயாரிப்பில் காட்சிப்படுத்தப்பட்டன. 

காரைக்குடியைச் சேர்ந்த புலவர் ‘அனிச்ச அடி’ ஆ. பழநி என்பவர், வரலாற்றுச் சான்றுகளின் அடிப்படையில் இந்த ஆடல்களுக்கான பாடல்களை இயற்றியதாகவும் திருவாட்டி தேவி குறிப்பிட்டார். 

பாடல் வரிகளாக இல்லாமல், கதையோடு ஒன்றிணைந்து செல்லும் வகையில், இந்தியாவைச் சேர்ந்த இசையமைப்பாளர் ராமகிருஷ்ணன் நீலமணி நாடகத்திற்கு இசையமைத்தார். இந்த இசை உருவாக்கம் நிகழ்ச்சிக்கு ஈராண்டுகளுக்கு முன்பே தொடங்கப்பட்டது.

‘கண்ணகி’யாக நடித்து ஆடிய திருவாட்டி தேவி வீரப்பன் (நடுவில்).
‘கண்ணகி’யாக நடித்து ஆடிய திருவாட்டி தேவி வீரப்பன் (நடுவில்). - படம்: சக்தி நுண்கலைக் கழகம்

நாடகத்தில் மொத்தம் 40 நடனக் கலைஞர்கள் பங்கேற்றனர். மரக்கால் ஆடலுக்கு மட்டும் வெளியிலிருந்து நடனமணி ஒருவர் சிறப்பாக அழைக்கப்பட்டார். மற்ற அனைத்துக் கலைஞர்களுமே இந்தத் தயாரிப்பை ஒருங்கிணைத்த சக்தி நுண்கலைக் கழக மாணவர்களாகவும் ஆசிரியர்களாகவும் உள்ளனர். 

பழம்பெரும் நடனக் கலைஞர் பத்மா சுப்ரமணியத்தின் நாட்டியப் பரம்பரையில் வந்த தமக்கு டாக்டர் எம்.எஸ். சரளா, வைஷ்ணவி ஆனந்த் ஆகியோர் கற்பித்த பாணியை  இந்த நடனம் பின்பற்றியுள்ளதாகத் திருவாட்டி தேவி கூறினார்.

முனைவர் சுப. திண்ணப்பன் பரிந்துரையின்படி, இந்தியாவைக் கடந்த மற்ற கலை மரபுகளை இணைக்கும் விதமாக, குடை நடனத்தில் சீனக் கலையின் சாயலும், கடையம் எனப்படும் அறுவடைத் திருநாள் நடனத்தில் மேலைநாட்டு இசைக் கருவியான சாக்சபோனும் (Saxophone) பயன்படுத்தப்பட்டன.

ஐவகைப் பாதகங்களான பொய்யுரைத்தல், கொலை, களவு, கள், காமம் ஆகியவற்றை எதிர்த்து சிலப்பதிகாரம் போதிக்கும் அறத்திற்கு காலவரையறை இல்லை என்பதால் சிலப்பதிகாரம் பற்றிய இதுபோன்ற நிகழ்ச்சிகள் தொடர்ந்து வரவேற்கப்பட வேண்டும் என்று பார்வையாளர் பாலசுப்ரமணியன் ஷோபனா கூறினார்.

சிலப்பதிகாரக் கதை பலருக்குத் தெரிந்திருந்தாலும் இந்த நாட்டிய நிகழ்ச்சிவழி ஆழமாகவும் நுட்பமாகவும் தெரிந்துகொள்ளும் வாய்ப்பினைப் பெற்றதை நினைத்து மகிழ்வதாக 33 வயது சத்யசீலன் கூறினார்

2011ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட சக்தி நுண்கலைக் கழகம், தனது 15வது ஆண்டு கலைப் பயணத்தைக் குறிக்கும் விதமாக இத்தகைய கடினமான படைப்பை வெற்றிகரமாக மேடையேற்றியுள்ளதை எண்ணி மகிழ்வதாகத் திருவாட்டி தேவி கூறினார்.

குறிப்புச் சொற்கள்