தைப்பூசத் திருநாளுக்கு முந்தைய நாள், சிங்கப்பூர் தேங் ரோடு அருள்மிகு தெண்டாயுதபாணி கோயில் முருகனின் உற்சவத் திருவுருவம், மின்னும் வெள்ளி ரதத்தில் சிங்கப்பூரின் மத்திய நகர்ப்பகுதியை வலம்வருவது வழக்கம்.
திங்கட்கிழமை (பிப்ரவரி 10ஆம் தேதி) காலை 5 மணியளவில் வெள்ளி ரதம் அருள்மிகு தெண்டாயுதபாணி கோயிலிலிருந்து புறப்பட்டது.
வார நாள் காலைப் பொழுதிலும் திரண்டிருந்த அன்பர்களில் சிலர் ரதத்தைப் பின்தொடர்ந்தனர். போக்குவரத்துக் கட்டுப்பாட்டுகளுக்கு இடையே ஆலயத் தொண்டூழியர்கள் ரதத்தை வழிநடத்தினர்.
காலை வேளையில் கிட்டதட்ட 6.30 மணிக்கு சவுத் பிரிட்ஜ் ரோடு ஸ்ரீ மாரியம்மன் கோயிலுக்குமுன் வெள்ளி ரதம் சற்று நேரம் நின்றது. பக்தர்கள் முருகனின் திருவுருவத்தை வழிபட்டுக் கொண்டிருக்கும்போதே இருள் அகன்று காலைப் பொழுது மெல்லப் புலர்ந்தது.
வெள்ளி ரதம் பின்னர், கியோங் செய்க் சாலையில் அமைந்துள்ள ஸ்ரீ லயன் சித்தி விநாயகர் ஆலயத்தைச் சென்றடைந்தது. அது கிட்டதட்ட ஐந்து கிலோமீட்டர் தொலைவு ஊர்வலமாகச் சென்றது. தவில், நாயன ஒலி கோயிலை நிரப்ப, வேலேந்திய பெருமானைப் பல்லக்கில் சுமந்த பக்தர்கள், விநாயக மூலவர்முன் ஆடி மகிழ்ந்தனர்.
பிற்பகல் நான்கு மணி அளவில் உற்சவம் முடிந்து வெள்ளி ரதம் தெண்டாயுதபாணி கோயிலுக்குத் திரும்பும் என்று கூறப்பட்டது.
ரதத்துடன் நடந்து சென்ற ஏறத்தாழ 50 பேரில் ஒருவரான இல்லத்தரசி சரஸ்வதி ராமசாமி, 60, மூன்றாவது ஆண்டாக இவ்வாறு செய்வதாகக் கூறினார்.
“பராசக்தியான தாயாரையும் விநாயகப் பெருமானான அண்ணனையும் காண முருகன் செல்லும்போது அவரைப் பின்தொடர்வதில் எனக்கு மிகுந்த நிம்மதியும் மனநிறைவும் ஏற்படுகிறது,” என்று சிராங்கூனில் வசிக்கும் திருவாட்டி சரஸ்வதி கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
பகுதிநேரப் புகைப்படக்காரர் யுவராஜா ராமகிருஷ்ணன், “காலை நேரத்தில் காண்பது இதமாக உள்ளது. மாலை நேரக் கூட்டத்தைத் தவிர்த்துக் காலையிலேயே வரலாம் என நினைத்தேன்,” என்றார்.
தெண்டாயுதபாணி உற்சவரை ஸ்ரீ மாரியம்மன் கோயிலுக்கு வந்து தரிசனம் செய்த விஜயராஜ், 25, தைப்பூசத்தைச் சிறப்பான திருநாளாகக் கருதுகிறார். அனைவரும் நன்றாக, வளமாக இருக்கவேண்டும் என்பது அவரது பிரார்த்தனை.
இதே பிரார்த்தனையுடன் எல்லாரையும் வாழ்த்த விரும்பினார் சுபாஷ் கோவிந்த பிள்ளை, 79. சிறு வயதில் லயன் சித்தி விநாயகர் கோயிலருகே வசித்த இவர், ஒரு காலத்தில் வெள்ளி ரதம் காளை மாடுகளால் இழுக்கப்பட்டதை நேரில் கண்டவர். ரத உலாவைப் பல காலமாகப் பார்த்து வந்தாலும் ஒவ்வோர் ஆண்டும் மனநிறைவு பெருகிவருவதாக இவர் கூறினார்.
மாலை நான்கு மணிக்கு பக்தர்களின் காவடிகளுக்கு வழிபாடு செய்யப்பட்டு, முருகப்பெருமானின் உற்சவ மூர்த்தி, அலங்கரிக்கப்பட்ட வேல் ஆகியவை ரதத்தில் ஏறின. கியோங் செய்க் சாலையில் அமைந்துள்ள ஸ்ரீ லயன் சித்தி விநாயகர் ஆலயத்திலிருந்து மாலை ஐந்து மணியளவில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் காவடியேந்தி ஆடியபடி முன்செல்ல உலா தொடங்கியது.
நியூ பிரிட்ஜ் ரோட்டின் சந்திப்பில் ரதம் கடந்து செல்ல ஏதுவாக சரிவுப்பாதை அமைக்கப்பட்டது. மொத்தம் 40 தொண்டூழியர்கள் இதில் பணியாற்றினர்.
ஏறத்தாழ 6.6 மீட்டர் உயரமுள்ள ரதம், மின்னிலக்கச் சாலைக் கட்டணப் பகுதியைக் கடந்து செல்ல இயலாததால் இந்த ஏற்பாடு செய்யப்படுவதாக 25 ஆண்டுகள் தைப்பூசத் திருவிழாவில் தொண்டாற்றும் தொண்டூழியர் ராமநாதன் தெரிவித்தார்.
தங்களின் சிறு வயதிலிருந்து தைப்பூசத் திருவிழா காணவரும் மூத்தோரின் முகங்களில் புன்னகையைக் காண முடிந்தது. அவர்களில் ஒருவரான 70 வயது அம்மாப்பொண்ணு, தமக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து தைப்பூசத் திருவிழாவைக் கண்டு வருவதாகக் கூறினார்.
“என் அம்மாவுடன் தைப்பூசம் காண வருவேன். அப்போது சிறு சன்னதியாக இருக்கும். காவடியாட்டம் களைகட்டும். கடைகள் இருக்கும். தைப்பூசம் என்றாலே வளையல் வாங்குவேன். அந்த நினைவுகளை அசைபோடவே இப்போதும் வருகிறேன். அதற்கான உடல் வலிமை இருப்பது மகிழ்ச்சி,” என்றார் ஜுரோங் பகுதிவாசியான அவர்.
“கிட்டத்தட்ட 65 ஆண்டுகளாக இத்திருவிழாவைப் பார்க்கிறேன். ஒவ்வொரு முறையும் அதே பரவசம். என் மகளுடன் வந்ததில் மகிழ்ச்சி,” என்றார் செம்பவாங் பகுதியைச் சேர்ந்த ராணி அருணாச்சலம்.
நகரின் மையப்பகுதியை வலம்வந்த வெள்ளி ரதம் இரவு 8.30 மணிக்கு தேங் ரோடு அருள்மிகு தெண்டாயுதபாணி கோயிலை வந்தடைந்தது.