கடந்த 25 ஆண்டுகளாக சிங்கப்பூரில் வேரூன்றி இருக்கும் அண்ணாமலைப் பல்கலைக்கழக முன்னாள் மாணவர் சங்கம், ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 15) வெள்ளிவிழா கொண்டாடியது.
வாழ்வாதாரம் தேடி சிங்கப்பூருக்கு வரும் அண்ணாமலைப் பல்கலைக்கழகப் பட்டதாரிகளுக்குப் பேராதரவாகத் திகழ்ந்து வரும் இச்சங்கம், இந்தியாவுக்கு அப்பாற்பட்டு சிங்கப்பூரில் ஒரு குடும்பமாகவே இயங்கி வருகிறது.
சமூக சேவையில் ஈடுபடுதல், மாணவர்களுக்கிடையே தமிழ் மொழி ஆர்வத்தைத் தூண்டும் முயற்சிகளை எடுத்தல், ஒன்றுகூடல்களுக்கு ஏற்பாடு செய்தல், வாழ்க்கைத்தொழில் வழிகாட்டுதல்களை அளித்தல் எனப் பலதரப்பட்ட நடவடிக்கைகளைச் சங்கம் எடுத்து வருகிறது.
ஆயிரத்திற்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் கொண்டுள்ள இச்சங்கம், அடுத்து இளைய தலைமுறையினர் சங்கத்தை முன்னெடுத்துச் செல்வதற்கான முனைப்பில் இறங்கியுள்ளது.
காத்திப்பில் அமைந்துள்ள உள்துறைக் குழுவின் தேசிய சேவையாளர் வளாகத்தில் இடம்பெற்ற வெள்ளி விழா நிகழ்ச்சியில் வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.
சிறப்புரையாற்றிய அவர், “அண்ணாமலைப் பல்கலைக்கழக முன்னாள் மாணவர் சங்கம் மேற்கொண்டுவரும் பல்வேறு சமூகப் பணிகளும் சிங்கப்பூரில் இருக்கும் இதர அமைப்புகள், இனத்தவர் ஆகியோருடன் ஒரு வலுவான பிணைப்பை உருவாக்க வழிவகுத்துள்ளது. குறிப்பாக, மக்கள் கழகம், சிண்டா போன்ற அமைப்புகளுடன் அவர்கள் கைகோத்துள்ளது, அண்ணாமலைப் பல்கலைக்கழக நிறுவனரின் கொள்கைகளை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது,” என்று தெரிவித்தார்.
சங்கத்தின் முன்னாள் தலைவர் இளங்கோவன், அமைச்சர் விவியனுடன் ஒரு சிறிய கலந்துரையாடல் அமர்வை வழிநடத்தினார்.
அமர்வில் தமது கருத்துகளைப் பகிர்ந்துகொண்ட அமைச்சர், “அண்ணாமலைப் பல்கலைக்கழக முன்னாள் மாணவர் சங்கம் தொடர்ந்து சிண்டா போன்ற அமைப்புகளுக்கு உதவிக்கரம் நீட்ட கடப்பாடு கொண்டிருக்க வேண்டும். பல்கலைக்கழகத்தில் படித்த நீங்கள் பலருக்கும் சிறந்த முன்மாதிரியாக விளங்க வேண்டும். இந்தியா கண்டுள்ள பெருவளர்ச்சி சிங்கப்பூருக்கும் சிறந்த தாக்கத்தை அளிக்கிறது,” என்று குறிப்பிட்டார்.
தொடர்புடைய செய்திகள்
“இந்த 25 ஆண்டுகளில் எங்கள் சங்கம் பல வழிகளில் முன்னேற்றம் கண்டுள்ளது. எங்கள் சங்கத்தை இன்னும் உச்சத்திற்குக் கொண்டுசெல்ல இளம் தலைமுறையினரை நாங்கள் தயார்செய்து கொண்டிருக்கிறோம். சிங்கப்பூருக்குப் புலம்பெயர்ந்தவர்களுக்கு வழிகாட்டி, அவர்களுக்குத் தேவையான ஆதரவை வழங்க நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்,” என்று சங்கத் தலைவர் பழனிசாமி கருணாநிதி கூறினார்.
அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவர் சங்கம் தமக்கு இரண்டாவது குடும்பம் போன்றது என்று சொன்ன சங்கச் செயலாளர் ராமசாமி குமரேசன், “இந்தச் சங்கத்தில் சேர்ந்த பிறகு பல்கலைக்கழகத்தின் மூத்த மாணவர்கள் எனக்கு அறிமுகமாகினர். எனக்குப் பல வாய்ப்புகளும் கிட்டின. ஒரு சங்கமாகச் சமூக நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு அப்பாற்பட்டு, நெருக்கமான பிணைப்புடன் செயல்படுவதுதான் எங்களது அடையாளம்,” என்றார்.
“1990களில் நான் இந்த சங்கத்தில் உறுப்பினராக இருந்தேன். எனக்கு அண்ணாமலைப் பல்கலைக்கழக நண்பர்கள் பலர் இருக்கிறார்கள். இந்த நிகழ்ச்சி மூலம் என்னால் பல பழைய நண்பர்களுடன் இணைய முடிந்தது,” என்று கொண்டாட்ட நிகழ்ச்சியில் கலந்துகொண்ட திருமகள் செல்வகுமார், 64, சொன்னார்.

