சாலைப் பாதுகாப்பை மேம்படுத்துதல், போதைப்பொருள் ஒழிப்பு, வட்டார நாடுகளுடனான உறவை வலுப்படுத்துதல் ஆகியவற்றைத் தமது முக்கிய முன்னுரிமைகளாக வெளியுறவு, உள்துறை இரண்டாம் அமைச்சர் திருவாட்டி சிம் ஆன் தெரிவித்துள்ளார்.
இவ்வாண்டு ஜூலையில் அவ்விரு பொறுப்புகளிலும் அவர் நியமிக்கப்பட்டார்.
வெளிநாட்டு சக்திகள் தங்கள்மீது தாக்கத்தை ஏற்படுத்த துணிவதையும் சமுதாயத்திற்குள் இருக்கும் வேறுபாடுகளைப் பிளவுகளாக மாற்ற முயற்சி செய்வதையும் குறித்து சிங்கப்பூரர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என அவர் எச்சரித்தார்
“உலகளாவிய அரசியல் நிச்சயமற்ற சூழலில், உலகம் முழுவதும் வெளிநாட்டுச் சக்திகள் ஆதிக்கம் செலுத்த முயற்சி செய்வதைச் சிங்கப்பூர்வாசிகள் தெளிவாக உணர வேண்டும். சிங்கப்பூரும் அதற்கு விதிவிலக்கன்று,” என சிஎன்ஏ செய்தி நிறுவனத்திற்கு அளித்த நேர்காணலில் அவர் குறிப்பிட்டார்.
குறிப்பாக, அத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் முயற்சிகளை எதிர்கொள்ளும்போது, சிங்கப்பூரின் பலங்களான பல்லின, பன்னாட்டுக் கலாசார அடையாளம், சமய நல்லிணக்கம் ஆகியவற்றின்மீது சிங்கப்பூர்வாசிகள் நம்பிக்கை கொள்ள வேண்டும் என அவர் கூறினார்.
உள்துறை அமைச்சின் பொறுப்பில், சாலைப் பாதுகாப்பிற்குத் திருவாட்டி சிம் தலையாய முன்னுரிமை அளிக்க உறுதிபூண்டுள்ளார்.
அண்மையில், திருத்தப்பட்ட சாலைப் போக்குவரத்துச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதோடு, மக்களின் மனப்போக்கை மாற்ற தீவிர பொதுக் கல்வி இயக்கம் முன்னெடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
மேலும், முன்னாள் கைதிகளுக்கு உதவும் மஞ்சள் நாடா திட்டம், போதைப்பொருள் ஒழிப்புப் பணிகளில் உள்துறை அமைச்சு கவனம் செலுத்தும் என்றார் திருவாட்டி சிம்.
வெளியுறவு விவகாரங்களில், சீனா உட்பட வடகிழக்காசியா, தென்கிழக்காசிய நாடுகளுடனான சிங்கப்பூரின் தொடர்புகளை வலுப்படுத்தும் முயற்சிகளுக்குத் தொடர்ந்து ஆதரவளிப்பதாக அவர் கூறினார்.
2027ஆம் ஆண்டில் ஆசியான் அமைப்பின் தலைமைப் பொறுப்பைச் சிங்கப்பூர் ஏற்க ஆயத்தமாகி வரும் வேளையில் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.


