கேளிக்கைப் பூங்கா மேம்பாட்டாளரும் நடத்துநருமான சிம் லெய்ஷர் குழுமம் உள்ளூரில் இரண்டு புதிய கேளிக்கைப் பூங்காக்களுக்கான யோசனைகளை அறிமுகப்படுத்தத் திட்டமிடுகிறது.
அக்குழுமத்துக்குச் சொந்தமான ‘எஸ்கேப்’ கேளிக்கைப் பூங்கா, உயர்-தொழில்நுட்பத் திரைப்படக் கதை சொல்லும் அனுபவமான ‘ஹேவன் எக்ஸ்ஆர்’ ஆகியவையே அவை.
ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸுடன் நடத்தப்பட்ட சிறப்பு நேர்காணலில், இரண்டு யோசனைகளிலும் விருப்பம் தெரிவித்திருப்பவர்களுடன் நிறுவனம் பேச்சு நடத்திவருவதாக அதன் நிர்வாகத் தலைவர் சிம் சூ கெங் கூறினார்.
செந்தோசாவின் பலவான் கடற்கரையில் ஜூலை மாத இறுதியில் நடைபெற்ற சிங்கப்பூர் கிட்ஸேனியா இடத்தின் ஒப்படைப்பு நிகழ்வின்போது டாதுக் சிம் பேசினார். அந்த இடத்தில் மேற்கொள்ளப்படும் புதுப்பிப்புப் பணிகளுக்குப் பிறகு, புதுப்பொலிவுடன் கிட்ஸேனியா 5.0 உருவாக்கப்படும் என்றார் அவர்.
இந்நிலையில், மலேசியாவில் ஏற்கெனவே ‘எஸ்கேப்’ கேளிக்கைப் பூங்காக்கள் இருப்பதை திரு சிம் சுட்டினார். பெட்டாலிங் ஜெயாவில் ‘பேரடைம்’ பேரங்காடியில் ‘எஸ்கேப் சவால்’ எனும் உள்ளரங்குக் கேளிக்கைப் பூங்கா இருப்பதாக அவர் சொன்னார். அதோடு, பினாங்கில் ‘எஸ்கேப் அட்வெஞ்சர்’ எனும் வெளிப்புற கேளிக்கைப் பூங்கா இருப்பதாகவும் அவர் கூறினார்.
சிங்கப்பூரில் சில இடங்களை ஆராய்வதாகவும் அவற்றை இன்னும் உறுதிசெய்யவில்லை என்றும் திரு சிம் தெரிவித்தார்.
வரவிருக்கும் கேளிக்கைப் பூங்காக்கள் 15 முதல் 35 வயது வரையில் உள்ளவர்களுக்கானவை என்று கூறிய அவர், அவை நிறுவனச் சந்தைக்கும் பொருத்தமானவை என்றும் தெரிவித்தார்.

