தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சட்டவிரோத ஒளிபரப்புக் கருவிகளை விற்ற சிம் லிம் கடைக்காரருக்குச் சிறை

2 mins read
a1122dd1-4845-449f-90ac-1f3e981daaae
36 வயது வாங் யூவிற்கு ஆறு மாதச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சட்டவிரோத இணைய ஒளிபரப்புக் கருவிகளை விற்றதை ஒப்புக்கொண்ட சிம் லிம் ஸ்குவேர் கடைத்தொகுதியைச் சேர்ந்த கடை உரிமையாளருக்குச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

36 வயது வாங் யூவிற்கு வெள்ளிக்கிழமையன்று (மே 30) ஆறு மாதச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. அவர் நடத்தும் ‘ஏஸ் டெக்னாலஜிஸ்’ நிறுவனத்திற்கு 181,000 வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

திருடப்பட்ட திரைப்படங்களையும் ஊடகப் படைப்புகளையும் கொணரும் இத்தகைய கருவிகளை, 2021ல் திருத்தப்பட்ட காப்புரிமைச் சட்டம் தடை செய்கிறது. சட்டத் திருத்தத்திற்குப் பிறகு, அந்தக் கடைத்தொகுதியில் கைது செய்யப்பட்ட இரண்டாமவராக அவர் உள்ளார்.

காப்புரிமை மீறலின் தொடர்பாக விதிக்கப்பட்ட 17 குற்றச்சாட்டுகளை அந்தச் சீன நாட்டவர் ஒப்புக்கொண்டார்.

‘ஏஸ் டெக்னாலஜிஸ்’ நிறுவனத்துடன் தொடர்புடைய மேலும் 17 குற்றச்சாட்டுகளையும் அவர் ஒப்புக்கெண்டார்.

தண்டனை விதிப்பின்போது மேலும் 33 குற்றச்சாட்டுகள் கருத்தில் கொள்ளப்பட்டன.

2018க்கும் 2022க்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் ‘ஏஸ் டெக்னாலஜிஸ்’ நிறுவனம், சிம் லிம் ஸ்குவேர் கடைத்தொகுதியில் நான்கு கடைகளைக் கொண்டிருந்தது.

டிஸ்னி, வார்னர் பிரதர்ஸ், டிஸ்கவரி இன்கார்பரேட்டட், இங்கிலிஷ் பிரிமியர் லீக் ஆகியவற்றின் படைப்புகளை இந்தக் கருவிகள் காண்பிக்கின்றன.

வெளிநாட்டில் உள்ள, பெயர் குறிப்பிடப்படாத விநியோகிப்பாளர் ஒருவரைத் தேடி அவரிடம் அந்தக் கருவிகளை வாங்கி, அவற்றைத் தம் கடையில் விற்கும்படி வாங் தமது ஊழியர்களைப் பணித்தார்.

காப்புரிமையை மீறும் இந்தக் கருவிகளின் விற்பனையை நிறுத்தும்படி பிரிமியர் லீக் காற்பந்துச் சங்கம் அவருக்கு இரு முறை கடிதம் அனுப்பியபோதும் அதனை அவர் பொருட்படுத்தவில்லை.

2022 அக்டோபர் 4ஆம் தேதியன்று சிங்கப்பூர்க் காவல்துறையின் அறிவுசார் சொத்துரிமைக் கிளையைச் சேர்ந்த அதிகாரிகள் சோதனை நடத்தியதை அடுத்து வாங் கைது செய்யப்பட்டார்.

1,000க்கும் அதிகமான சட்டவிரோத ஒளிபரப்புக் கருவிகள் அவரது கடைகளிலிருந்து பறிமுதல் செய்யப்பட்டன.

குறிப்புச் சொற்கள்