செந்தோசாத் தீவில் பொதுமக்களுக்கு வான்குடை சாகச அனுபவங்களைத் தரும் ‘ஐஃபிளை’ (iFly) நிறுவனம், அதன் கட்டடத்தில் சிம்பா (SIMBA) தொலைத்தொடர்பு சேவை வழங்கும் நிறுவனத்தின் கருவிகள் ‘அத்துமீறி’ வர்த்தகத்தைப் பாதித்துள்ளதாக நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கின் விசாரணை நவம்பர் 21ஆம் தேதி முடிவுக்கு வந்தது.
ஸ்கைவென்ட்சர் வீடபள்யூடி (Skyventure VWT) நிறுவனம் அதன் கட்டடத்தின் மேல் வைக்கப்பட்டுள்ள தொலைத்தொடர்பு கம்பமும், முதல் மாடியில் இருக்கும் சாதனமும் வர்த்தகத்தை பாதித்துள்ளதாக சிம்பா தொலைத்தொடர்பு நிறுவனத்தின்மீது வழக்கு தொடர்ந்திருந்தது.
முதல் மாடியில் வைக்கப்பட்ட சிம்பாவின் சாதனம் அங்கு உணவு பான விற்பனை நடத்தும் வாடகைதாரரான ‘ஷேக் ஷாக்’ கடையின் வியாபாரத்தைப் பெரிதும் பாதித்துள்ளது என்று வழக்கில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கட்டடத்தின் உச்சியில் இருக்கும் சிம்பாவின் தொலைத்தொடர்பு கம்பம், அங்கு குளிர்சாதன கட்டுப்பாட்டுக்கான மின்இயந்திரங்களை பொருத்துவதைத் தடுப்பதாகவும் வழக்கில் ஸ்கைவென்ட்சர் தெரிவித்துள்ளது.
அதனால் பகல் நேரங்களில் பல நிகழ்ச்சிகளை நடத்தமுடியாமல் போனது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. தி பிஸ்னெஸ் டைம்ஸ் நாளிதழுக்குக் கிடைத்த நீதிமன்ற ஆவணங்களில் சிம்பா 4.51 சதுர மீட்டர் அளவு இடத்தை பயன்படுத்துகிறது என்பது தெரியவந்தது.
சிம்பா நிறுவனம் தொலைத்தொடர்பு சேவை வழங்குநர்களுக்கான அரசாங்க விதிமுறைகளுக்கு ஏற்ப தான் நடந்துள்ளதாக அதன் தற்காப்பு வாதத்தில் தெரிவித்துள்ளது.
தகவல்தொடர்பு ஊடக மேம்பாட்டு ஆணையம் 2018ஆம் ஆண்டு வெளியிட்டுள்ள கட்டடங்களில் உள்ள வசதிகளுக்கான தகவல் தொடர்பு செயல்முறைகளின் படி தாம் நடந்துள்ளதாக சிம்பா வாதாடுகிறது.
குறிப்பிடப்பட்ட அந்த நடைமுறைகளில், கட்டட உரிமையாளர்கள், தொலைத்தொடர்பு சேவை வழங்குநர்களுக்கு (MNOs) தேவையான சாதனங்களை வாடகையின்றி வைத்துக்கொள்ள வசதிகள் வழங்கவேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. அதன்வழியாக கட்டட உரிமையாளர்களுக்கும் அவர்களது வாடகைதாரர்களுக்கும் அருகில் உள்ள ஏனைய கட்டடங்களுக்கும் தொலைத்தொடர்பு இணைப்புகள் கிடைக்கும் என்பதே நோக்கம்.
தொடர்புடைய செய்திகள்
அதனை தகவல்தொடர்பு ஊடக மேம்பாட்டு ஆணைய இணையப் பக்கம் தெரிவிக்கின்றது.
நவம்பர் 21ஆம் தேதி நடந்த நான்காவது நாள் நீதிமன்ற விசாரணையில் சிம்பாவின் தொழில்நுட்ப அதிகாரி பெஞ்சமின் டான் சாட்சியமளித்தார். கட்டட உரிமையாளருக்கும் தொலைத் தொடர்பு சேவை வழங்குநருக்கும் நடக்கும் முதல் வழக்காக இருக்கலாம் என்றார் அவர்.
அந்த கட்டடத்தில் எம்1, ஸ்டார்ஹப், சிங்டெல் ஆகிய இதர சேவை வழங்குநர்களும் சாதனங்களை வைத்துள்ளனர். ஸ்கைவென்ட்சர், சிம்பா நிறுவனங்களின் வேறுபாடுகள், தகவல்தொடர்பு ஊடக மேம்பாட்டு ஆணைய கவனத்துக்கும் கொண்டுசெல்லப்பட்டது.
ஆணையம் 2021ஆம் ஆண்டு ஜூன் மாதம் சிம்பா அனைத்து சாதனங்களையும் அகற்ற வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளது. பேச்சுவார்த்தைகள் தொடர்ந்தபோதும் மீண்டும் ஆணையம் 2022ஆம் ஆண்டு ஏப்ரல் மாதமும் அதே முடிவை உறுதிசெய்தது என்று திரு பெஞ்சமின் கூறினார். பிறகு 2022ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சாதனங்களை வெளியேற்றும் காலக்கெடுவை 2023ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வரை நீட்டித்தது என்று நீதிமன்றத்தில் சிம்பா தெரிவித்தது.
கடந்த நவம்பர் 21ஆம் தேதி முடிவடைந்த விசாரணைக்குப் பிறகு, கூடுதல் ஆவணங்கள் 2026ஆம் ஆண்டு ஜனவரி 16ஆம் தேதி நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவேண்டும்.

