பணப்புழக்க நெருக்கடியை எதிர்நோக்கும் சிறிய, நடுத்தர நிறுவனங்களுக்கு மானியம் அளிக்கும் முறை மேம்படுத்தப்பட வேண்டும் என்று நிதியியல் தொழில்நுட்பத் துறையைச் சேர்ந்த வர்த்தகர் ஜெயந்தி கேட்டுக்கொண்டுள்ளார்.
மின்னிலக்கமயமாதல், தொழில்நுட்ப மேம்பாடு ஆகியவற்றுக்காக அரசாங்கம் மானியங்களை வழங்கி வருகிறது.
ஆனால், கைக்காசைச் செலவு செய்த பின்னரே அந்த மானியத் தொகையைப் பெறக்கூடிய சூழல் உள்ளதாகப் பன்னாட்டு வர்த்தகப் பணப்பரிவர்த்தனையில் நிபுணத்துவம் பெற்றுள்ள ‘டிபிஎஸ் பேமண்ட்ஸ்’ (TPS Payments) நிறுவனத்தைச் சேர்ந்த திருவாட்டி ஜெயந்தி கூறுகிறார்.
“தேவைப்படும் மென்பொருளுக்காகவோ தொழில்நுட்பத்திற்காகவோ செலவு செய்த பிறகே, அதற்கான மானியத் தொகையை நிறுவனங்கள் பெற முடிகிறது. இத்தொகை கைக்குக் கிடைக்க ஏறத்தாழ ஆறு, ஏழு மாதங்கள் ஆகின்றன. போதிய நிதியாதாரம் உள்ள பெருநிறுவனங்களால் இதனைச் சமாளிக்க முடியும்.
ஆனால், பணப்புழக்கத் தட்டுப்பாடு உள்ள சிறிய நிறுவனங்களிடம், முதலில் செலவு செய்வதற்கான நிதிவளம் குறைவு,” என்று அவர் குறிப்பிட்டார்.
பிஎஸ்ஜி (PSG) எனப்படும் உற்பத்தித்திறன் தீர்வு மானியம், இடிஜி (EDG) எனப்படும் நிறுவன மேம்பாட்டு மானியம் உள்ளிட்ட முக்கிய சிங்கப்பூர் அரசாங்க மானியங்களைப் பயன்படுத்த விரும்பும் நிறுவனங்கள், முதலில் செலவு செய்த பிறகே அதற்கான தொகையைக் கோர (Reimbursement) முடியும்.
இதற்குத் தீர்வாக, மானியத் தொகையைச் சேவை வழங்கும் நிறுவனங்களுக்கு (Vendors) நேரடியாகச் செலுத்தும் முறையைச் செயல்படுத்தலாம்; அல்லது முன்கூட்டியே ஒப்புதல் அளிக்கலாம் என்றார் திருவாட்டி ஜெயந்தி.
சிறு நிறுவனங்களின் சவால்கள்
கள்ளப்பணத்தை நல்ல பணமாக்குவதற்கு எதிரான விதிமுறைகள், வாடிக்கையாளரை அறிந்துகொள்ளும் நடைமுறை (KYC) ஆகியவற்றின் அவசியத்தை ஒப்புக்கொள்வதாகத் திருவாட்டி ஜெயந்தி கூறுகிறார்.
தொடர்புடைய செய்திகள்
இருப்பினும், பெரிய அளவில் நடைபெறும் பண மோசடிகளைக் கையாள்வதற்காக வடிவமைக்கப்படும் கடுமையான விதிமுறைகளில், சட்டத்திற்கு உட்பட்டு நடக்கும் சிறிய நிறுவனங்களும் சிக்குவதாக அவர் கூறினார்.
குறிப்பிட்ட சில நாடுகளைச் சேர்ந்த வாடிக்கையாளர்களுடன் வர்த்தகம் செய்யும் சிறிய மொத்த விற்பனை நிறுவனங்கள், கடும் விசாரணைக்கு உட்படுத்தப்படுவதைத் திருவாட்டி ஜெயந்தி சுட்டிக்காட்டினார்.
“நிறுவனங்களின் அளவுக்குத் தகுந்த விதிமுறைக் கட்டமைப்பைக் கொண்டுவருவது நல்லது,” என்பது அவரது பரிந்துரையாகும்.

