சின் மிங், தோ பாயோவில், குறைந்த காத்திருப்பு நேரத்துடன், தேவைக்கேற்ப கட்டப்படும் (பிடிஓ) நூற்றுக்கணக்கான வீடுகள் தொடங்கப்படவுள்ளன. இந்தப் புதிய வீடுகளின் கட்டுமானப் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. மேலும் 2030ஆம் ஆண்டின் மத்தியில் அவை கட்டி முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
பீஷான் நகரின் ஒரு பகுதியான சின் மிங் ஸ்திரீட்டில், 984 வீடுகளுடன் நிறைவடையும் தருவாயில் உள்ள வீடமைப்பு வளர்ச்சிக் கழக (வீவக) திட்டத்தின் சின் மிங் ரெசிடென்சுக்கு எதிரே, 1,076 வீடுகளைக் கொண்ட ஒரு திட்டம் தற்போது கட்டப்பட்டு வருகிறது.
மேலும், தோ பாயோவின் லோரோங் 4ல், 193 வீடுகளைக் கொண்ட 40 மாடி வீவக கட்டடத்தின் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இவற்றுடன், மொட்டை மாடித் தோட்டத்துடன் கூடிய பல மாடி வாகன நிறுத்துமிடம், ஒரு வளாகக் கூடம், பிற சமூக வசதிகளும் அமைக்கப்படும்.
குடியிருப்புகளின் தொடக்கத் தேதிகள், உத்தேச காத்திருப்பு நேரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என்று வீவக, ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழுக்கு அளித்த அறிக்கையில், கூறியுள்ளது. இருப்பினும், அவற்றின் உத்தேச நிறைவுத் தேதியின்படி, இரண்டு திட்டங்களும் மிக விரைவில் 2027ஆம் ஆண்டின் மத்தியில் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
குறைந்த காத்திருப்பு நேரம் கொண்ட வீடுகளுக்கு மூன்று ஆண்டுகளுக்கும் குறைவான காத்திருப்பு நேரம் உள்ளது. வாங்குபவர்கள் தங்கள் வீடுகளில் விரைவில் குடியேறுவதற்காக, இந்த வீடுகள் விற்பனைக்குத் தொடங்கப்படுவதற்கு முன்பே கட்டுமானப் பணிகள் பொதுவாக ஆரம்பிக்கப்படுகின்றன.
அதிகரித்த தேவையைப் பூர்த்தி செய்வதற்காக வீடுகளின் விநியோகத்தை அதிகரித்து வருவதாக வீவக கூறியுள்ளது. மேலும், சின் மிங், தோ பாயோ ஆகிய இரண்டு திட்ட இடங்களும் ஏற்கெனவே மேம்படுத்தப்பட்டு, பயன்படுத்தப்படாத நிலங்கள் என்றும் அது குறிப்பிட்டுள்ளது.
சின் மிங் இடம் முன்னர் ஒரு வீவக வாடகைக் கட்டடம் மற்றும் பல தொழிற்துறைக் கட்டடங்களைக் கொண்டிருந்தது. அவை பின்னர் இடிக்கப்பட்டுவிட்டன. அதேசமயம், லோரோங் 4 தோ பாயோவில் உள்ள திட்டமானது, லோரோங் 4 தோ பாயோவின் புளோக் 62B, புளோக் 66க்கும், லோரோங் 5 தோ பாயோவின் புளோக் 63க்கும் இடையில் அமைந்திருந்த ஒரு திறந்தவெளி வாகன நிறுத்துமிடத்தின் இடத்தில் அமையும்.


