சிறந்து விளங்கும் மாணவர்களுக்கு சிங்கப்பூர் இந்தியர் மேம்பாட்டுச் சங்கம் (சிண்டா) ஆண்டுதோறும் வழங்கும் உன்னத விருதை இதுவரை இல்லாத அளவு ஆக அதிகமாக 859 பேர் இந்த ஆண்டு பெற்றனர்.
மொத்தம் 859 பேருக்கு 861 விருதுகள் வழங்கப்பட்டன. இருபது வயதுக்கு உட்பட்டோருக்கான 400 மீட்டர் ஓட்டத்தை 54.66 நொடிகளில் ஓடி 50 ஆண்டுகால தேசிய சாதனையை முறியடித்த லாவண்யா ஜெய்காந்த் சிறப்பு விருது வழங்கிச் சிறப்பிக்கப்பட்டார்.
கல்வி, கலை, விளையாட்டு உள்ளிட்ட பல துறைகளில் சிறப்பாகச் செயலாற்றியவர்களுக்கு வழங்கப்படும் இந்த விருது சனிக்கிழமை (செப்டம்பர் 14) சிங்கப்பூர் பலதுறைத் தொழிற்கல்லூரியில் இரண்டு அமர்வுகளாக வழங்கப்பட்டது. சிறப்பு விருந்தினரான போக்குவரத்து அமைச்சர் சீ ஹொங் டாட்டும் சிண்டா தலைவரும் பிரதமர் அலுவலக அமைச்சருமான இந்திராணி ராஜாவும் விருதுகளை வழங்கினர்.
“கல்வி அமைச்சின் அண்மைய ஆய்வின் மூலம் 2022ஆம் ஆண்டின்படி இந்திய சமூக மாணவர்கள் கடந்த பத்தாண்டுகளில் தொடர்ந்து சிறப்பாக செயலாற்றி வருவது தெரிய வந்துள்ளது. இது சமூகத்துக்கே பெருமை,” என்றார் அமைச்சர் இந்திராணி.
ஒவ்வொரு சமூகத்தின் சிறப்பான செயலாற்றலும் நாட்டு நலனுக்கு முக்கியம் என்று சொன்ன அவர், பள்ளிப் பாடங்களைத் தாண்டி, பல்வேறு திறன்களுடன் ஒருங்கிணைந்த வெற்றியை அடைவது முக்கியம் என்று வலியுறுத்தினார். மேலும், கல்வியை மேம்படுத்த மாணவர்களுக்கு தொடர்ந்து அரசாங்கம் ஆதரவளித்து வருவதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
கடந்த 1992ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வரும் இவ்விருதுகளைப் பெறும் மாணவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதைச் சுட்டிக்காட்டிய சிண்டாவின் தலைமை நிர்வாக அதிகாரி அன்பரசு ராஜேந்திரன், “பொதுவாக இந்தியச் சமூக மாணவர்கள் தொடர்ந்து நன்கு செயலாற்றி வருகின்றனர். கல்வியில் மட்டுமின்றி பல துறைகளிலும் சாதிக்கும் மாணவர்களை ஊக்குவிப்பது அவசியம்,” என்றார்.
மேலும், “முன்னேறும் மாணவர்கள், அவர்களுக்கு அடுத்து வரும் மாணவர்களுக்குத் துணைப்பாட வகுப்புகள் எடுப்பது, வழிகாட்டிகளாகச் செயல்படுவது உள்ளிட்டவற்றில் ஈடுபடுகின்றனர். அதுவும் பாராட்டத்தக்கது,” என்றும் அவர் சொன்னார்
கடந்த பத்தாண்டுகளில் இவ்விருதினைப் பெறும் மாணவர்களின் எண்ணிக்கை 107 விழுக்காடு அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தொடர்புடைய செய்திகள்
இவ்விழாவில் ‘ஏ’ நிலைப் பிரிவில் சிறந்து விளங்கிய அஸ்லாம் அப்துல்லா இதிரிஸ் விருது பெற்றார். தன் தந்தைக்கு விரைவில் மோசமடையும் வகையிலான மறதிநோய் இருப்பது கண்டறியப்பட்டதும் அவர் இடிந்துபோனார். ஆனாலும், கல்விதான் தனக்கும் ஏறத்தாழ ஒற்றைப் பெற்றோரைப்போல குடும்பத்தைத் தனியொருவராய் தாங்கும் தன் தாயாருக்கும் குடும்பத்துக்கும் முன்னேற்றம் தேடித் தரும் ஒரே வழி என்பதை உணர்ந்தார் இதிரிஸ்.
சோகத்தில் ஆழ்ந்து விடாமல், அதனையே வெறியாக மனத்திற்கொண்டு நன்கு படித்து தற்போது சிங்கப்பூர்த் தேசிய பல்கலைக்கழகத்தில் மருந்தியல் பிரிவில் சேர உள்ளார் இதிரிஸ். தற்போது தேசிய சேவையில் ஈடுபட்டு வரும் அவர், “பொதுச் சுகாதாரத் துறையில் பணிக்கு அமர்ந்து என் தாயாரைப் பெருமைப்படுத்துவேன். அவர் படும் சிரமங்களிலிருந்து மீட்பேன்,” என்று நம்பிக்கையுடன் சொன்னார்.
போதிய மதிப்பெண் இல்லாததால் வேறு வழியின்றி இயந்திரவியல் பிரிவில் ஈராண்டுகள் படித்த மாணவர் நந்தகிஷோர் புவனேஸ்வரன், வேதியியல்மீது கொண்ட பேரார்வத்தால், நீ ஆன் பலதுறைத் தொழிற்கல்லூரியில் வேதியியல் மற்றும் உயிர்மூலக்கூறுப் பொறியியல் துறையில் சேர்ந்துள்ளார்.
இதய அறுவை சிகிச்சை, சர்க்கரை நோயினால் கால் அகற்றம் உள்ளிட்ட காரணங்களினால் பாதுகாப்புத் துறை ஊழியரான அவருடைய தந்தையால் பணிக்குச் செல்ல இயலாமல் போனது. இதனை அடுத்து, அரசு, சமூக அமைப்புகளின் ஆதரவில் கிடைக்கும் உதவித்தொகையில் குடும்பச் செலவுகள், கல்விச் செலவுகள் என அனைத்தையும் சமாளித்து, கடும் சிரமத்துக்கிடையிலும் சிறப்பாக செயல்பட்டுள்ளார் இவர்.
சிரமங்களைப் புறந்தள்ளி, இலக்கை மட்டுமே குறியாகக் கொண்டு படித்து வருவதாகக் கூறும் இவர், பிடித்த பாடத்தைத் தேர்ந்தெடுத்துப் படித்தால் செயல்திறனும் பன்மடங்காக இருக்கும் என்றும் சொன்னார்.