தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

‘சமூகத்திலும் வேலையிடத்திலும் பெண்களுக்குக் கூடுதல் ஆதரவு தேவை’

3 mins read
cbfc881b-966e-4a94-b82f-2ebd024167f6
குழு உரையாடலில் பங்கேற்ற பெண்களுடன் அமைச்சர் இந்திராணி ராஜா. - படம்: த. கவி
multi-img1 of 2

பிள்ளைகளைப் பெற்று வளர்க்க சமூகத்திலும் வேலையிடத்திலும் பெண்களுக்குக் கூடுதல் ஆதரவு தேவைப்படுவதாக பிரதமர் அலுவலக அமைச்சர் இந்திராணி ராஜா தெரிவித்துள்ளார்.

சிங்கப்பூரில் குழந்தை பிறப்பு விகிதம் மிகவும் குறைவாக உள்ள நிலையில், பிள்ளைகளை வளர்க்கும் பொறுப்புடன், பெண்கள் எவ்வாறு பணியிலும் சிறந்து விளங்க முடியும் என்பதில் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும். வேலையில் முன்னேற்றம் அடையும்போது குடும்பத்தைக் கவனிக்க நேரம் குறைந்துவிடுமோ என்ற அச்சம் பெண்களுக்கு இருக்கும் நிலையில், இரண்டிலும் சரிசமமாக விளங்க குடும்பம், பணியிடம், சமுதாயத்தின் உதவி அவர்களுக்குத் தேவைப்படுகிறது என்றார் அமைச்சர் இந்திராணி.

சிங்கப்பூர் இந்தியர் மேம்பாட்டுச் சங்கத்தின் (சிண்டா) தலைவருமான குமாரி இந்திராணி, சனிக்கிழமை (ஜூன் 22) நடைபெற்ற பெண்களின் உயர்வுக்கான ‘லெட் ஹெர் ஷைன்’ எனும் முதல் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றினார்.

ஈராண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட ‘லெட் ஹெர் ஷைன்’ திட்டம், ஏழு முதல் 35 வயதுக்கு உட்பட்ட இந்தியப் பெண்களுக்கு அதிகாரமளிக்கும் நோக்கில் செயல்பட்டு வருகிறது.

வழிகாட்டுதல், திறன் வளர்ப்பு, பயிலரங்குகள் போன்ற ஆதரவுத் திட்டங்கள் மூலம் பெண்கள் தங்கள் குறிக்கோளை அடைய ஊக்குவிக்கும் விதத்தில் இத்திட்டம் வழிவகுத்து வருகிறது.

நிதி, தேசிய வளர்ச்சி இரண்டாம் அமைச்சருமான இந்திராணி, “இதுபோன்ற மாநாடுகளால் பெண்களால் இதர பெண்களுக்கு தோள்கொடுக்க முடியும். உங்களால் செய்ய முடியாத ஒன்றை, இத்திட்டத்தில் உள்ள மற்ற பெண்களின் ஆதரவோடு செய்ய முடியும்,” என்றார்.

“அனைவருக்கும் சமமான வாய்ப்புகளை வழங்குவதில் சிங்கப்பூர் தொடர்ந்து முன்னேற்றம் கண்டு வருகிறது. அதிக பெண்கள் பணியிடங்களில் உயர் பதவிகளில் உள்ளனர். ஆண், பெண் சமத்துவத்தில் அரசாங்கம் எப்போதும் கவனம் செலுத்தி வருகிறது.

“இந்த மாநாட்டில் பேசப்பட்ட சில அம்சங்கள், வீடுகளில் அதிகம் பேசப்படாமல் இருந்திருக்கலாம். பரபரப்பான வாழ்க்கை முறையால் வீட்டில் செலவிடும் நேரம் குறைவாக உள்ளது. ஆனால், குடும்பத்தின் பங்கு மிக முக்கியம். ஒருங்கிணைப்பை வலுப்படுத்தி, குடும்பப் பிணைப்பை அதிகரித்து, அடுத்த தலைமுறையினரை உருவாக்க இது சிறந்த தளம்,” என்று குமாரி இந்திராணி விவரித்தார்.

சன்டெக் சிங்கப்பூர் மாநாட்டு, கண்காட்சி நிலையத்தில் இடம்பெற்ற மாநாட்டில் வெவ்வேறு துறைகளைச் சேர்ந்த 25 பெண்கள் உரையாடினர். பதினைந்து விதமான உரையாடல்களில் பெண்கள் பங்கேற்று பலனடைந்தனர்.

முழுமையான நல்வாழ்வு, தனிப்பட்ட வளர்ச்சி, தேர்ச்சி, தொழில் நிபுணத்துவப் பாதைகளை ஒட்டிய உரையாடல்கள் இடம்பெற்றன. தங்களது தனிப்பட்ட பயணம், அனுபவம், சவால்கள் ஆகியவற்றை பங்கேற்பாளர்கள் மனம்விட்டு பகிர்ந்தனர்.

இந்தியப் பெண்களுடன், மற்ற இனங்களைச் சேர்ந்த ஆண்களும் பெண்களும் மாநாட்டில் பங்கேற்றனர்.

“பெண்கள் ஒன்றுகூடுவதற்கான இடமாக இந்த மாநாடு விளங்குகிறது. ‘லெட் ஹெர் ஷைன்’ திட்டம் தொடங்கப்பட்டதில் இருந்து நான் அதில் பங்கேற்று வருகிறேன். முன்பு வழிகாட்டுதல் திட்டம் மூலம், ஒரு மருத்துவர் எனக்கு பல ஆலோசனைகளை வழங்கினார். இந்தியச் சமூகத்தைத் தாண்டி மற்ற பெண்களையும் இத்திட்டம் சென்றடைகிறது,” என்றார் ஸ்ருதி முரளிகிருஷ்ணா, 21.

“பணியில் சிறந்து விளங்கும் பெண்களையும் அவர்கள் சந்திக்கும் சாவல்களை அறியவும் இந்த நிகழ்ச்சி ஒரு சிறந்த வாய்ப்பு. குழு உரையாடலில் பங்கேற்ற நான் மற்றவர்களின் அனுபவங்கள் மூலம் பலவற்றைக் கற்றுக்கொண்டேன்,” என்று பவித்ரா வெங்கடேசன், 33, கூறினார்.

குறிப்புச் சொற்கள்