மின்னிலக்கமயமாக்கப்பட்ட உலகில் பலதரப்பட்ட புதிய சவால்களை இன்றைய இளையர்கள் எதிர்கொள்கின்றனர் என்றும் முந்தைய தலைமுறையினர் சந்தித்த சவால்களிலிருந்து இவை முற்றிலும் மாறுபட்டவை என்றும் பிரதமர் அலுவலக அமைச்சர் இந்திராணி ராஜா தெரிவித்துள்ளார்.
சிங்கப்பூர் இந்தியர் மேம்பாட்டுச் சங்கத்தின் (சிண்டா) இளையர் மன்றத்தின் 15ஆம் ஆண்டுநிறைவு விழா சனிக்கிழமை (ஆகஸ்ட் 15) ‘ஒய்டபிள்யூசிஏ ஃபோர்ட் கேனிங்’ (YWCA Fort Canning) ஹோட்டல் அரங்கில் நடைபெற்றது. சிண்டா தலைவருமான குமாரி இந்திராணி ராஜா அதில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.
வெஸ்ட் கோஸ்ட் - ஜூரோங் வெஸ்ட் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரும் சிண்டா நிர்வாகச் செயற்குழு உறுப்பினருமான டாக்டர் ஹமீது ரசாக் உட்பட கிட்டத்தட்ட 150 இளையர்கள், முன்னாள் உறுப்பினர்கள், தொண்டூழியர்கள், சமூகப் பங்காளிகள் ஆகியோர் விழாவில் கலந்துகொண்டனர்.
சிறப்புரையாற்றிய அமைச்சர் இந்திராணி, இளையர்கள் ஒரு குறிப்பிட்ட தருணத்தால் மட்டும் வெற்றி பெறுவதில்லை என்பதைச் சுட்டினார்.
“அவர்கள்மீது நம்பிக்கை வைக்கும் மனிதர்கள், வளர்ச்சிக்கான வாய்ப்புகள், தொடர்ந்து முன்னேற ஊக்கமளிக்கும் சமூகம் இருக்கும்போதே அவர்கள் வெற்றி பெறுகிறார்கள். அதனால்தான் இளையர்களிடம் முதலீடு செய்வது தேசிய அளவில் முதன்மைப் பணியாகக் கருதப்படுகிறது,” என்று அவர் கூறினார்.
விழாவின் சிறப்பம்சமாக இடம்பெற்ற ‘நாளைய தலைவர்கள் – இந்தியச் சமூகத்தின் எதிர்காலத்தை வடிவமைத்தல்’ என்ற தலைப்பிலான குழுக் கலந்துரையாடலிலும் அவர் பங்கேற்றார்.
சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஆரன் மணியம், செக்வோயா குழுமத்தின் பங்குதாரரும் முதன்மை ஆலோசகருமான துர்கா ராஜேந்திரன், பொது சுகாதார மருத்துவர் டாக்டர் மா. பிரெமிக்கா ஆகிய முன்னாள் மன்ற உறுப்பினர்களும் அதில் கலந்துகொண்டனர். மன்றத்தின் தற்போதைய தலைவர் தஷினி ஷன்முகம் அதனை வழிநடத்தினார்.
இக்கலந்துரையாடலின்போது, அன்றாட வாழ்வில் தொழில்நுட்பம் இரண்டறக் கலந்துவிட்ட இக்காலத்தில், இளையர்கள் மனிதநேயத்தையும் மனித உறவுகளையும் தக்கவைத்துக்கொள்வதே ஆகப்பெரிய சவால் என்று அமைச்சர் குறிப்பிட்டார்.
உலகளாவிய சிக்கல்களில் இளையர்கள் எவ்வாறு சிக்கிக்கொள்கிறார்கள் என்பதைப் பற்றிப் பேசிய அவர், இணையம்வழி பரவும் போலிச் செய்திகள், தீவிரவாதப் போக்குகள், வேலைவாய்ப்பு குறித்த நிச்சயமற்ற தன்மை ஆகியவற்றுக்கு இன்றைய இளையர்கள் ஆளாகின்றனர் என்று கூறினார்.
குறிப்பாக, இணையத்தளங்களில் ‘அல்காரிதம்’ எனப்படும் தொழில்நுட்பக் கட்டமைப்பு இளையர்களைத் தீவிரவாதச் சிந்தனைகளுக்குத் தள்ளும் அபாயம் நிலவுவதையும், செயற்கை நுண்ணறிவை உற்ற நண்பராகக் கருதி அதனுடன் வழக்கமாகப் பேசுவதால் உண்மையான மனிதர்களுடனான தொடர்பு குறைந்துபோவதையும் அவர் சுட்டினார்.
“இத்தகைய சவால்களை எதிர்கொள்ள, இளையர்கள் தங்கள்மீது தாங்களே நம்பிக்கை வைக்க வேண்டும். அவர்களுக்குத் தகுந்த வாய்ப்புகளையும் ஊக்கத்தையும் வழங்கிச் சமூகம் அரவணைக்க வேண்டும்,” என்று அவர் கூறினார்.
உலகம் எவ்வளவு மாறினாலும் நேர்மை, நம்பகத்தன்மை, பிறர் கூறுவதைக் காதுகொடுத்துக் கேட்கும் பண்பு ஆகியவையே ஒரு சிறந்த தலைவருக்கான அடையாளம் என்று அமைச்சர் கூறினார்.
மன்றம் கடந்துவந்த பாதையைக் குறிக்கும் வகையில், ‘15 ஆண்டுகள், ஒரே சிண்டா இளையர் மன்றம்’ எனும் சிறப்பங்கத்தின் கீழ் மன்றத்தின் முன்னாள், தற்போதைய உறுப்பினர்கள் தங்களின் எதிர்கால விருப்பங்களைப் பகிர்ந்துகொண்டு மேடையில் புதிர்த் துண்டுகளைப் பொருத்தி மன்றத்தின் சின்னத்தை முழுமைப்படுத்தினர்.
பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு இந்திய இளையர்களுக்குத் தங்களின் திறமைகளை வெளிப்படுத்த ஒரு தளம் தேவைப்பட்டதைச் சிண்டா தலைமை நிர்வாக அதிகாரி அன்பரசு ராஜேந்திரன் நினைவுகூர்ந்தார்.
“இளையர்களுக்குப் பாதுகாப்பான சூழலை ஏற்படுத்திக் கொடுப்பதே மன்றத்தின் அடிப்படை நோக்கமாக இருந்தது. தொடக்கத்தில் தயக்கத்துடன் வந்த பல இளையர்கள் இன்று தன்னம்பிக்கை மிக்க தலைவர்களாக உருவாகியிருப்பது இமாலயச் சாதனை,” என்று அவர் பெருமிதம் தெரிவித்தார்.
தற்போது, ஓராண்டில் சிண்டா இளையர் மன்றத்தின் தலைமைத்துவத் திட்டங்கள் வழியாக ஏறத்தாழ 1,000 இளையர்களும் ஒட்டுமொத்தமாகச் சிண்டாவின் இளையர் மேம்பாட்டுத் திட்டங்கள் வழியாக 3,200க்கும் மேற்பட்ட இளையர்களும் பயனடைந்து வருவதாக அவர் குறிப்பிட்டார்.
இன்றைய இளையர்களைத் தேசிய அளவிலான தலைமைத்துவப் பொறுப்புகளுக்கும் எதிர்கால வேலைவாய்ப்புகளுக்கும் தயார்படுத்துவது அவசியம் என்றும் அவர் கூறினார்.
“மன்றத்தின் மூலம் பயனடைந்த இளையர்கள், இன்று மற்றவர்களுக்கு வழிகாட்டும் தலைவர்களாகவும் சமூக நலன்களுக்காகச் செயல்படுபவர்களாகவும் மாறியுள்ளனர்,” என்றும் திரு அன்பரசு குறிப்பிட்டார்.
மன்றத்தின் எதிர்காலத் திட்டங்கள் குறித்துப் பகிர்ந்துகொண்ட மன்றத் தலைவர் தஷினி, தொடக்கத்தில் இளையர்களைத் தலைவர்களாக உருவாக்குவதில் மட்டுமே கவனம் செலுத்தியதாகக் கூறினார்.
“இப்போது அவர்கள் பெரியவர்களாகிவிட்டதால் வேலைவாய்ப்பு, நிதி நிர்வாகம், குடும்பம் என அவர்களின் ஒட்டுமொத்த வாழ்க்கைக்கும் வழிகாட்டும் வகையில் மன்றத்தின் திட்டங்கள் விரிவடைந்துள்ளன,” என்றார் அவர்.
இளையர்கள் எதிர்கொள்ளும் பல்வேறு சவால்களுக்கு மத்தியில், பல தலைமுறைகளைச் சேர்ந்த மூத்தோரின் வழிகாட்டுதல் அவர்களுக்குச் சிக்கலான உலகச் சூழலைப் புரிந்துகொண்டு, எதிர்காலப் பயணத்தைத் தெளிவாக அமைத்துக்கொள்ள உதவுகிறது என்று அவர் கூறினார்.
இந்த விழாவில் உறுப்பினர்கள் தங்களின் சமூகத் திட்டங்களைக் காட்சிப்படுத்த சிறப்பு தற்காலிகக் கூடங்கள் அமைக்கப்பட்டிருந்தன.
கடந்த 2023ஆம் ஆண்டு மன்றத்தில் இணைந்ததிலிருந்து தனது தலைமைத்துவத் திறன்கள் பெருமளவு வளர்ந்துள்ளதாக நிகழ்ச்சியில் வழிகாட்டியாகச் செயல்பட்ட தொழில்நுட்பக் கல்விக் கழகத்தில் செவிலியர் கல்வி பயிலும் 19 வயது மாணவி ரியா ரோஷினி குறிப்பிட்டார்.
“என்னைப் போன்ற பல மாணவர்களுடன் இணைந்து சேவையாற்றவும், அடுத்த தலைமுறை இளையர்களை நல்வழிப்படுத்தும் வழிகாட்டியாகச் செயல்படவும் இது ஒரு சிறந்த வாய்ப்பை எனக்கு வழங்கியுள்ளது,” என்று அவர் கூறினார்.


