சிங்கப்பூருக்கு 2வது திரவஎரிவாயு முனையக் கட்டுமானப் பணி தொடங்கியது

சிங்கப்பூருக்கு 2வது திரவஎரிவாயு முனையக் கட்டுமானப் பணி தொடங்கியது

2 mins read
f289a125-8738-4e1a-bae0-34795d993935
சிங்கப்பூரின் 2வது திரவ எரிவாயு முனையம் கட்டுவது குறித்து 2023 அக்டோபர் மாதத்தில் அப்போதைய துணைப் பிரதமரும் நிதி அமைச்சருமான லாரன்ஸ் வோங் அறிவித்திருந்தார். - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூரின் 2வது திரவ எரிவாயு முனையம் விரைவில் கட்டப்படுகிறது. அதனை நிர்வகிக்கும் எஸ்எல்என்ஜி கார்ப்பரேஷன் (SLNG), அதற்கான உடன்பாட்டை செய்து கொண்டதைத் தொடர்ந்து கட்டுமானப் பணி அடுத்த கட்டத்திற்கு முன்னேறுகிறது.

சிங்கப்பூரில் புதிய வீடுகளும் வர்த்தக நிறுவனங்களும் அதிகரித்து வருவதாலும் தூய்மையான எரிபொருளுக்கு சிங்கப்பூர் முயற்சிகளை எடுத்து வருவதாலும் மின்சாரத்திற்கான தேவை கூடி வருகிறது. இதற்கு ஈடுகொடுக்கும் வகையில் எஸ்எல்என்ஜி நடவடிக்கை இடம்பெறுகிறது.

மரினா பே சேண்ட்ஸ் கண்காட்சி, மாநாட்டு மண்டபத்தில் புதிய முனையத்திற்கான திட்டத்தைத் தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது புதிய முனையம் கட்டுவதற்கு மிட்சுய் ஓ.எஸ்.கே லைன்ஸ் (எம்ஓஎல்), ஜூரோங் துறைமுகம் மற்றும் பொறியியல் நிறுவனம் ஆகியவற்றுடன் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளதாக எஸ்எல்என்ஜி அறிவித்தது.

இதன் அடிப்படையில் மிதக்கும் சேமிப்பு வசதியை எம்ஒஎல் வழங்கும். கப்பல் போன்ற இந்த வசதி எரிபொருளை சேமித்து வைக்கவும் ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு எரிபொருளை எடுத்துச் செல்லவும் பயன்படுத்தப்படும்.

இதனால், ஒட்டுமொத்த திரவ இயற்கை எரிபொருள் ஆற்றல் ஆண்டுதோறும் பத்து மில்லியன் டன்னிலிருந்து 15 மில்லியன் டன்னுக்கு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த மிதக்கும் கப்பல் போன்ற வசதி புதிய முனையம் கட்டப்படவிருக்கும் ஜூரோங் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்படும்.

இதற்கிடையே உள்கட்டமைப்பு வசதிகளுடன் குழாய்களை இணைக்கும் பணி மேற்கொள்ளப்படும்.

நிகழ்ச்சியில் பேசிய எஸ்எல்என்ஜி தலைமை நிர்வாகியான லியோங் வெய் ஹங், சிங்கப்பூரின் எரிபொருள் பாதுகாப்பை உறுதி செய்வதில் எஸ்எல்என்ஜி தொடர்ந்து பங்காற்றி வருவதை சுட்டிக்காட்டினார்.

“சிங்கப்பூர் தொடர்ந்து வளர்ச்சி அடைந்து வரும் சூழலில் எதிர்கால வாய்ப்புகளை தொடர்ந்து கைப்பற்றி முன்னேறுவதற்கான ஆற்றலை உறுதி செய்ய இந்த முதலீடு உதவும்,” என்றும் அவர் தெரிவித்தார்.

இரண்டாவது திரவ இயற்கை எரிபொருள் முனையம் கட்டுவதற்கான அறிவிப்பு 2023 அக்டோபர் மாதம் அப்போதைய துணைப் பிரதமரும் நிதி அமைச்சருமான லாரன்ஸ் வோங் அறிவித்தார்.

குறிப்புச் சொற்கள்