இளையர்களிடையே நேரும் மரணங்களில் உயிரை மாய்த்துக்கொள்ளல் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது

சிங்கப்பூர்: 2024ல் உயிரை மாய்த்துக்கொண்ட 314 சம்பவங்கள் பதிவு

2 mins read
3521f772-32b1-473b-a56d-9b70122f33bc
சிங்கப்பூரில் உயிரை மாய்த்துகொண்டோர் விகிதம் 100,000 குடியிருப்பாளர்களுக்கு 5.91ஆகப் பதிவானது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூரில் கடந்த ஆண்டு உயிரை மாய்த்துக்கொண்ட 314 சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

அதில் 30 வயதிலிருந்து 39 வயதுக்கு இடைப்பட்ட பெரியவர்களின் எண்ணிக்கை ஆக அதிகமாக அதிகரித்தது.

தொடர்ந்து ஆறாவது ஆண்டாக 10 வயதிலிருந்து 29 வயதுக்கு உட்பட்ட இளையரிடையே ஏற்படும் மரணங்களில் உயிரை மாய்த்துக்கொள்ளல் முதலிடம் வகிக்கிறது.

குடிநுழைவு, சோதனைச் சாவடி ஆணையத்தின் பிறப்பு, இறப்பு பதிவுகள் ஜூலை மாதம் வெளியிட்ட 2024ஆம் ஆண்டுக்கான அறிக்கை அதை குறிப்பிட்டது.

கடந்த ஆண்டு உயிரை மாய்த்துக்கொண்டோரில் 64.3 விழுக்காட்டினர் அதாவது 202 பேர் முந்திய ஆண்டைப் போல ஆண்கள்.

30லிருந்து 39க்கு இடைப்பட்ட வயதுடைய பெரியோரில் இத்தகைய மரணங்கள் 2023ஆம் ஆண்டுடன் ஒப்புநோக்க கடந்த ஆண்டு அதிகரித்தது. 2023ஆம் ஆண்டு 43ஆக இருந்த எண்ணிக்கை கடந்த ஆண்டு 75ஆனது.

சிங்கப்பூரில் உயிரை மாய்த்துக்கொண்டோர் விகிதம் 100,000 குடியிருப்பாளர்களுக்கு 5.91ஆகப் பதிவானது.

குடிநுழைவு, சோதனைச் சாவடி ஆணையத்தின் அறிக்கையில் உள்ள எண்ணிக்கை குத்துமதிப்பானது.

அவை தொடக்கக் கட்டத்தில் பதிவான எண்ணிக்கை அல்லது இன்னும் உறுதிப்படுத்தப்படாத எண்ணிக்கை.

அந்த அடிப்படையில் 2023ஆம் ஆண்டு சிங்கப்பூரில் மொத்தம் 322 மரணங்கள் பதிவானதாகத் தொடக்கக் கட்டத்தில் 2024 அறிக்கை குறிப்பிட்டது.

அது பின்னர் 434 என உறுதிப்படுத்தப்பட்டது. அதாவது உயிரை மாய்த்துக்கொண்டோர் விகிதம் 34.8 விழுக்காடு அதிகரித்தது.

சிங்கப்பூர் அபய ஆலோசனைச் சங்கம் சனிக்கிழமை (ஜூலை 19) வெளியிட்ட அறிக்கையின்படி 30லிருந்து 39க்கு இடைப்பட்ட வயதுடைய பெரியவர்கள் பெரும்பாலும் குடும்பப் பிரச்சினைகள், வேலை நிலைத்தன்மை, மனநலச் சவால்கள் போன்ற சிக்கலான அழுத்தங்களை எதிர்நோக்குவதாகக் குறிப்பிட்டது.

சிங்கப்பூர் அபய ஆலோசனைச் சங்கத்தின் புரவலரும் கல்விக்கான மூத்த துணையமைச்சருமான டாக்டர் ஜனில் புதுச்சேரி, “உயிரை மாய்த்துக்கொள்ளும் சம்பவங்களின் எண்ணிக்கையைக் குறைக்க தொடர்ந்து உறுதியுடன் போராடுகிறோம்,” என்றார்.

2024ஆம் ஆண்டு சங்கம், உயிரை மாய்த்துக்கொள்ளும் எண்ணம் கொண்ட, அதற்கு முயன்ற 1,112 தனிநபர்களுக்கு நேரடி ஆலோசனைச் சேவை, ஆதரவுக் குழுக்களின் சேவை ஆகியவற்றை வழங்கியது.

குறிப்புச் சொற்கள்