கணினி நிரலாக்கத் திட்டத்தில் சிங்கப்பூர் மாணவர்கள் விரைவுத் தேர்ச்சி

கணினி நிரலாக்கத் திட்டத்தில் சிங்கப்பூர் மாணவர்கள் விரைவுத் தேர்ச்சி

2 mins read
‘42 எஸ்ஜி’ பாடத்திட்டத்தை ‘எஸ்யுடிடி’ பல்கலைக்கழகம் வழங்குகிறது
ab537265-526c-4f8f-8572-9d51576cae73
திரு ஜெஃப்ரி கோ, 34, திருவாட்டி வெண்டி ஹுவாங் இருவரும் ‘42 எஸ்ஜி’ பாடத்திட்டத்தை விரைவாக முடித்தோரில் அடங்குவர். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
multi-img1 of 2

சிங்கப்பூர் தொழில்நுட்ப, வடிவமைப்புப் பல்கலைக்கழகம் (எஸ்யுடிடி) வழங்கும் ‘42 எஸ்ஜி’ எனும் கணினி நிரலாக்கப் பொதுப் பாடத்திட்டத்தை உலக அளவில் விரைவாக நிறைவுசெய்தோரில் சிங்கப்பூர் மாணவர்கள் மூவர் அடங்குவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

திரு ஜெஃப்ரி கோ, திருவாட்டி வெண்டி ஹுவாங், திரு ஷா ஓ’லியரி ஆகியோரே அம்மூவர்.

இப்பாடத்திட்டத்தை ஓராண்டுக்குள் நிறைவுசெய்த முதல் 50 பேர் பட்டியலில் இவர்களும் இடம்பெற்றுள்ளனர். இவர்கள் பத்து மாதங்களுக்குள் பொதுப் பாடத்திட்டத்தில் தேர்ச்சி பெற்றுவிட்டனர்.

இந்தக் கணினி நிரலாக்கப் பாடத்திட்டத்துக்கான மொத்தமுள்ள 21 நிலைகளில் ஒன்பது நிலைகள் பொதுப் பாடத்திட்டத்தின்கீழ் வருகின்றன.

இதில் விரைந்து தேர்ச்சி பெற்ற மூவரைத் தவிர எஞ்சியுள்ள 170க்கு மேற்பட்டோர் 2025ஆம் ஆண்டுப் பிற்பாதிக்குள் அந்த ஒன்பது நிலைகளை நிறைவுசெய்வர் என்று எதிர்பார்க்கப்படுவதாக பல்கலைக்கழகம் கூறியது.

2013ஆம் ஆண்டு பாரிசில் நிறுவப்பட்ட ‘ஈகோல் 42’ (Ecole 42) எனும் கணினி நிரலாக்கப் பள்ளியை மாதிரியாகக்கொண்டு 2023 செப்டம்பரில் ‘42 எஸ்ஜி’ தொடங்கப்பட்டது. இரு கல்விக்கூடங்களுமே கணினி நிரலாக்கம், இணையப் பாதுகாப்பு, கணினிக் கட்டமைப்புக்கான உள்கட்டமைப்பு, தரவு அறிவியல் உள்ளிட்ட பல்வேறு பாடங்களைக் கற்பிக்கின்றன.

‘42 எஸ்ஜி’ பாடத்திட்டத்தை 18 வயதுக்கு மேற்பட்ட யாரும் இலவசமாகப் பயிலலாம். இதில் கற்பிக்கும் ஆசிரியர்களோ வரையறுக்கப்பட்ட பாடத்திட்டமோ கிடையாது. இதில் சேர்வதற்குக் குறிப்பிட்ட கல்வித்தகுதியும் இல்லை.

தகுதித் தேர்வில் மாணவர்களுக்கு இரண்டு மணி நேர நினைவாற்றல், அறிவாற்றல் சோதனைகள் நடத்தப்படும். தேர்வு பெற்றவர்கள் இரண்டாம் கட்டமாக அடிப்படை நிரலாக்கக் கல்வியைக் கூட்டாகப் பயில்வர். அதிலும் தேர்ச்சி பெற்றவர்கள் ‘42 எஸ்ஜி’ பாடத்திட்டத்தில் பயிலலாம்.

21 நிலைகளையும் மாணவர்கள் கட்டாயம் நிறைவுசெய்ய வேண்டியதில்லை. எப்போது வேண்டுமானாலும் விலகிக்கொள்ளலாம்.

அவர்களது சான்றிதழில் அவர்கள் நிறைவுசெய்த நிலையும் அதுவரை பெற்ற மதிப்பெண்களும் குறிக்கப்பட்டிருக்கும்.

17 நிலைகளை நிறைவுசெய்தால் அது இளநிலைப் பட்டக்கல்விக்குச் சமமாகும். 21 நிலைகளை முடித்தால் முதுநிலைப் பட்டம் பெற்றதற்குச் சமம்.

உலகெங்கும் 31 நாடுகளில் 54 கல்விக்கழகங்கள் இத்தகைய பாடத்திட்டத்தை வழங்குகின்றன.

குறிப்புச் சொற்கள்