சிங்கப்பூர் மீது அமெரிக்கா அண்மையில் 10 விழுக்காடு அடிப்படை வரி விதித்தது.
சிங்கப்பூரிலிருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருள்களுக்கு இந்த வரி விதிக்கப்படும்.
இது ஏப்ரல் 5லிருந்து நடப்புக்கு வந்துள்ளது.
நீண்டகாலமாகவே இரு நாடுகளுக்கும் இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் நடைமுறையில் இருந்தும் இந்நிலை ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், இந்த 10 விழுக்காடு அடிப்படை வரி தொடர்பாக அதிபர் டோனல்ட் டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசாங்கத்துடன் சிங்கப்பூர் அமைப்புகள் கலந்துரையாடி வருகின்றன.
வரிவிதிப்பு பற்றிய முழு விவரங்களைத் தெரிந்துகொள்ள அமெரிக்க அதிகாரிகளுடன் தொடர்புகொண்டிருப்பதாக என்டர்பிரைஸ் சிங்கப்பூர் அமைப்பு திங்கட்கிழமை (ஏப்ரல் 14) தெரிவித்தது.
என்டர்பிரைஸ் சிங்கப்பூர் அமைப்பு வர்த்தக, தொழில் அமைச்சின்கீழ் செயல்பட்டு வருகிறது.
உலகளாவிய நிலையில் போட்டியிட சிங்கப்பூர் நிறுவனங்களுக்கு அது உதவி வருகிறது.
தொடர்புடைய செய்திகள்
மேலும், முக்கிய அனைத்துலக வர்த்தக மையமாக சிங்கப்பூர் தொடர்ந்து திகழ அது ஆதரவு வழங்குகிறது.
வரிவதிப்பு தொடர்பாக அமெரிக்காவுடனான கலந்துரையாடல் நடைபெற்று வருவதாக வெளியுறவு அமைச்சு அறிக்கை வெளியிட்டுள்ளது.
சிங்கப்பூரைத் தவிர்த்து, மற்ற ஆசியான் நாடுகளான வியட்னாம், தாய்லாந்து, இந்தோனீசியா, மலேசியா ஆகிய நாடுகளும் வரிவிதிப்பு தொடர்பாக அமெரிக்காவுடன் கலந்துரையாடி வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தடையற்ற வர்த்தக ஒப்பந்தப் பங்காளி என்கிற முறையில், வரிவிலக்கிற்கு கோரிக்கை விடுக்கும் உரிமை சிங்கப்பூருக்கு உள்ளது.
சிங்கப்பூருடனான வர்த்தகத்தில் அமெரிக்காவுக்கு வர்த்தகப் பற்றாக்குறை ஏதும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மாறாக, 2024ஆம் ஆண்டில் சிங்கப்பூருடனான வர்த்தகத்தில் அமெரிக்கப் பொருள்களுக்கான வர்த்தக உபரி 2.8 பில்லியன் அமெரிக்க டாலராக (S$3.7 பில்லியன்) இருந்தது.
2023ஆம் ஆண்டைவிட இது 84.8 விழுக்காடு அதிகம்.

