மருந்துகளை மனிதர்களிடம் சோதிக்கும் மருத்துவ ஆராய்ச்சி, சான்றுகள் உருவாக்கத்தில் வட்டாரத்திலேயே மிகவும் நம்பகமான, திறமையான இடங்களில் ஒன்றாகத் திகழச் சிங்கப்பூர் இலக்கு கொண்டுள்ளதாகச் சுகாதார அமைச்சர் ஓங் யி காங் திங்கட்கிழமை (அக்டோபர் 12) தெரிவித்துள்ளார்.
இதற்காக மருந்துத் தயாரிப்பு, மருத்துவச் சோதனைகளுக்கான ஒழுங்குமுறைச் செயல்பாடுகளை விரைவுபடுத்தும் பல புதிய நடவடிக்கைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
கிராண்ட் காப்தார்ன் வாட்டர்ஃபிரன்ட் ஹோட்டலில் நடைபெற்ற முதலாவது சுகாதார ஒழுங்குமுறைக் கருத்தரங்கில் அவர் உரையாற்றினார்.
சுகாதார அறிவியல் ஆணையத்தின் முயற்சிகள் மருத்துவ மேம்பாடு, ஒழுங்குமுறை, சுகாதாரத் தொழில்நுட்ப மதிப்பீடு, நோயாளிகள் மருத்துவச் சேவைகளைப் பெறும் முறை ஆகியவற்றை இணைக்கும் என்று அமைச்சர் கூறினார்.
புதிய சுகாதார அறிவியல் ஆணையம் - பராமரிப்புத் திறன் அமைப்பு முன்னுரிமைத் தடத்தின் மூலம், தேர்வுசெய்யப்பட்ட சுகாதாரப் பொருள்கள் ஒழுங்குமுறை மதிப்பீட்டையும் சுகாதாரத் தொழில்நுட்ப மதிப்பீட்டையும் ஒரே நேரத்தில் மேற்கொள்ள முடியும். அத்துடன் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தும் மருந்து மேம்பாடு உட்படப் புதிய சிகிச்சைகளைப் பரிசீலிக்க பிரிட்டனுடன் இணைந்து புதிய ‘ஒழுங்குமுறைப் புத்தாக்கப் பாதை’ எனும் திட்டம் தொடங்கப்படுகிறது.
இந்த முயற்சிகள் மூலம் இடர் குறைந்த மூன்றாம் கட்ட மருத்துவச் சோதனைகளுக்கான அனுமதிக் காலம் 30 நாள்களிலிருந்து 15 நாள்களாகக் குறையும். மேலும், ஒழுங்குமுறை ஒப்புதலுக்குப்பின் முதல் சுகாதாரத் தொழில்நுட்ப மதிப்பீட்டு முடிவிற்கான காலம் ஓராண்டிலிருந்து ஆறு முதல் ஒன்பது மாதங்களாகக் குறையும்.
ஆராய்ச்சியிலிருந்து நோயாளிகள் மருத்துவச் சேவைகளைப் பெறும் முறை வரையிலான நடவடிக்கைகள் தொடர்பில் நிறுவனங்கள் பல அரசாங்க அமைப்புகளை அணுக வேண்டியுள்ளது. இதன் ஒவ்வொரு கட்டத்திலும் நேரம், செலவு, நிச்சயமற்ற தன்மை ஆகியவை அதிகரிக்கக்கூடும். சுதந்திரம் அல்லது தீவிரத்தைக் குறைக்காமல் இந்தப் பயணத்தைச் சீரமைக்க விரும்புவதாகத் திரு ஓங் கூறினார்.
உலக அளவில் நம்பகமான ஒழுங்குமுறை மையமாகச் சிங்கப்பூரின் நிலையை வலுப்படுத்த, ஆணையம் அனைத்துலகப் பங்களிப்புகளை உருவாக்கி வருகிறது. தடுப்பூசிகளுக்காக உலகச் சுகாதார நிறுவனத்தின் பட்டியலிடப்பட்ட அதிகாரபூர்வத் தகுதியைப் பெறச் சிங்கப்பூர் முயல்கிறது.
சுகாதார முறையை எளிமையாக்கச் சுகாதார அமைச்சின் ஒழுங்குமுறைச் செயல்பாடுகள் இரண்டு கட்டங்களாகச் சுகாதார அறிவியல் ஆணையத்திற்கு மாற்றப்படும்.
முதற்கட்டமாக அமைச்சின் செயல்பாடுகளும் ஊழியர்களும் வரும் நவம்பர் 1ஆம் தேதி மாற்றப்படுவர். தொழில்முறை வாரியங்களின் தலைமைச் செயலகப் பணிகளும் ஊழியர்களும் 2027 இறுதிக்குள் மாற்றப்படுவர். சுகாதாரத் துறை ஆலோசனைக் குழு 2027 முதல் பாதியில் அமைக்கப்படும் என்று கூறப்பட்டது.
