செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துவோரை வளர்ப்பதை சிங்கப்பூர் நோக்கமாகக் கொண்டுள்ளது: ஜோசஃபின் டியோ

2 mins read
b6b069ab-b7ae-4f01-9ff6-5a9828391d30
ஜூலை 22ஆம் தேதி, ரிட்ஸ்-கார்ல்டன் ஹோட்டலில் ஃபார்ச்சூன் ஆசியாவின் நிர்வாக ஆசிரியர் கிளே சாண்ட்லர், அமைச்சர் ஜோசஃபின் டியோ (வலது) பங்கேற்ற கலந்துரையாடல். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

தரவு விஞ்ஞானிகளுக்கும் இயந்திரக் கற்றல் பொறியாளர்களுக்கும் உதவும் வகையில், சட்டம், நிதி போன்ற பல்வேறு துறைகளில் செயற்கை நுண்ணறிவுத் (ஏஐ) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவோரை பெரிய அளவில் உருவாக்குவதை சிங்கப்பூர் நோக்கமாகக் கொண்டுள்ளது.

இந்தக் குழுவில் உள்ளவர்களின் எண்ணிக்கை, சிங்கப்பூர் ஏற்கெனவே வளர்த்து பணியமர்த்த இலக்கு வைத்துள்ள செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துவோர் 15,000 பேரை விட மிக அதிகமாக இருக்கும் என்று ஃபோர்ச்சுன் பிரேன்ஸ்டோம் ஏஐ மாநாட்டில் தகவல், மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சர் ஜோசஃபின் டியோ தெரிவித்தார்.

“வழக்கறிஞர்கள், கணக்காளர்கள், மருத்துவர்கள் போன்ற தொழில்களில் இருப்பவர்களைப் பற்றி நாங்கள் பேசுகிறோம். அவர்கள் ஏஐ ஆரம்பகாலமாக ஏற்றுக்கொள்பவர்களாக மாறி, பின்னர் அதை எவ்வாறு சிறப்பாகப் பயன்படுத்துவது என்பது குறித்து தங்கள் சகாக்களுக்கு கற்றுத் தருவார்கள்,” என்று திருமதி டியோ கூறினார். உற்பத்தி, சுகாதாரம், நிதிச் சேவைகள் போன்ற துறைகளில் உள்ளவர்களும் இதில் அடங்குவர்.

“அவர்களால் (ஏஐ) தங்கள் நிறுவனங்களுக்கு எவ்வாறு அதிக மதிப்பை உருவாக்க முடியும் என்பதை நிரூபிக்க முடியும். இந்த ஏஐ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவோர் குழு 15,000ஐ விட அதிகமாக இருக்க வேண்டும்,” என்றும் அமைச்சர் விவரித்தார்.

ஒரு சிறிய நாடாக, உலக அரங்கில் சிங்கப்பூர் தனது ஏஐ உத்தியை எவ்வாறு வேறுபடுத்துகிறது என்பது குறித்த கலந்துரையாடலின் ஒரு பகுதியாக, மனிதவள மேம்பாடு குறித்த ஃபார்ச்சூன் ஆசிய சஞ்சிகையின் நிர்வாக ஆசிரியர் கிளே சாண்ட்லரின் கேள்விக்கு திருமதி டியோ பதிலளித்தார்.

உள்ளூர்வாசிகளுக்கு பயிற்சி அளித்து, வெளிநாடுகளில் இருந்து பணியமர்த்துவதன் மூலம் ஏஐ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் 15,000 பேரை உருவாக்க சிங்கப்பூர் இலக்கு கொண்டுள்ளதாக டிசம்பர் 2023ல் அறிவிக்கப்பட்டது.

இந்தக் குழுவில் உள்ள தரவு மற்றும் இயந்திரக் கற்றல் விஞ்ஞானிகள், ஏஐ தொழில்நுட்பத்தை நிதர்சன உலகுக்கு ஏற்றவாறு மொழிபெயர்க்கும் முதுகெலும்பாக இருப்பார்கள்.

வேகமாக வளர்ந்து வரும் ஏஐ சந்தையில் சிங்கப்பூர் போட்டியிட முடியுமா என்று கேட்கப்பட்டபோது, வெளிநாடுகளிலும் உள்நாட்டிலும் உருவாக்கப்பட்ட ஏஐ கருவிகளுக்கு இடமிருப்பதாகத் திருமதி டியோ கூறினார்.

சிங்கப்பூரில் உருவாக்கப்பட்ட சீ-லயனை மேற்கோள் காட்டிய அமைச்சர், அதன்மூலம் மலாய், சீனம், தமிழ் உட்பட 13 மொழிகளை அங்கீகரிக்க முடியும் என்றும் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்