சிங்கப்பூர் குடியரசு ஆகாயப் படை, புதிய ஓடுபாதைக்கு மாறவிருக்கிறது.
வருகின்ற 2030ஆம் ஆண்டுக்குப் பிறகு பாயா லேபார் விமானப் படைத் தளம் இடமாற்றம் செய்யப்படும் திட்டத்தின் ஒரு பகுதியாக புதிய ஓடுபாதைக்கு ஆகாயப் படை மாறுவதாக தற்காப்பு அமைச்சு சனிக்கிழமை அன்று தெரிவித்தது.
சிஎன்ஏவின் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த அமைச்சின் பேச்சாளர் ஒருவர், ஆகாயப்படை தனது தற்போதைய ‘02R/20L’ என அழைக்கப்படும் ஓடுபாதையிலிருந்து சாங்கி கிழக்கு விமானப் படைத் தளத்தில் உள்ள புதிய ‘03/21’ என்ற ஓடுபாதைக்குத் தனது செயல்பாடுகளை மாற்றும் என்றார்.
கடந்த 2015ஆம் ஆண்டில் அப்போதைய தற்காப்பு அமைச்சரான இங் எங் ஹென், பாயா லேபார் விமானப் படைத் தளத்திற்குப் பதிலாக பல்வேறு சொத்துகளையும் வசதிகளையும் உள்ளடக்கும் விதத்தில் சாங்கி கிழக்கு விமானப் படைத் தளமும், தெங்கா விமானப் படைத் தளமும் விரிவுபடுத்தப்படும் என்று கூறியிருந்தார்.
ஆனால் உயர் பொறியியல் தொழில்நுட்ப திறன்களுடன் செய்ய வேண்டியிருப்பதால் இது ஒரு சிக்கலானப் பணி என்றும் அவர் குறிப்பிட்டார்.
புதிய ஓடுபாதை பற்றிய தகவல்கள் ஜூலை 23ஆம் தேதியன்று சிங்கப்பூர்ப் பொது விமானப் போக்குவரத்து ஆணையத்தால், விமானப் போக்குவரத்து தகவல் வெளியீட்டில் வெளியிடப்பட்டன. இது, சிங்கப்பூர் விமானத் தகவல்கள் இடம்பெறும் முக்கிய ஆவணமாகும்.
புதிய ஓடுபாதை செப்டம்பர் 17, 2026 முதல் செயல்படும் என்றும் பொதுமக்களுக்கு இனி அது பயன்படுத்தப்படாது என்றும் அதில் தெரிவிக்கப்பட்டது.
தற்போதைய தற்காப்பு அமைச்சரான சான் சுன் சிங், பாயா லேபார் விமானப் படைத் தளத்தின் இடமாற்றம் 2030க்குப் பிறகு திட்டமிட்டபடி செயல்படுத்தப்படும் என்றார்.
இது குறித்து நாடாளுமன்றத்தில் அவர், ஒரு விமானப் படைத் தளத்தை இடமாற்றம் செய்வது சிக்கலான பணியாக இருந்தாலும் அத்தியாவசிய உள்கட்டமைப்புகள் தயார்நிலைக்கு வரும்போது அது படிப்படியாகச் செயல்படுத்தப்படும் என்று கூறினார்.
2030ல் பாயா லேபார் விமானப் படைத் தளம் மூடப்படுவதற்கு முன்னதாக, அங்கிருந்து இயக்கப்படும் விமானங்களின் எண்ணிக்கையைப் படிப்படியாகக் குறைக்கும் திட்டங்கள் உள்ளதா என்று அவரிடம் அப்போது கேட்கப்பட்டது.
“இடமாற்றம் கட்டம் கட்டமாகச் செயல்படுத்தப்படும். பாயா லேபார் விமானப் படைத் தளத்தில் இயக்கப்படும் விமானங்களின் எண்ணிக்கையும் படிப்படியாகக் குறைக்கப்படும்,” என்று அமைச்சர் சான் அதற்கு விளக்கமளித்திருந்தார்.
