சிங்கப்பூர் ஏர்லைன்சும் ஏர் இந்தியாவும் வணிக ஒத்துழைப்புக் கட்டமைப்பு உடன்பாட்டைச் செய்துகொண்டுள்ளன.
உறுதியான கூட்டுத் தொழில் உடன்பாடுகள்மூலம் தங்களுக்கு இடையிலான நீண்டகாலப் பங்காளித்துவத்தை மேலும் வலுப்படுத்த இந்த உடன்பாடு வழிவகுக்கும்.
இதன்மூலம் சிங்கப்பூர்-இந்தியா இடையிலான தொடர்பை மேம்படுத்தி, வாடிக்கையாளர்கள் பயன்பெறும் வகையில் கூடுதல் தெரிவுகளை வழங்குவதற்கான வழிமுறைகள் ஆராயப்படும்.
மும்பையில் வெள்ளிக்கிழமை (ஜனவரி 16) நடந்த நிகழ்வில் எஸ்ஐஏ தலைமை நிர்வாக அதிகாரி கோ சூன் ஃபோங்கும் ஏர் இந்தியா தலைமை நிர்வாக அதிகாரியும் மேலாண்மை இயக்குநருமான கேம்பெல் வில்சனும் இந்த உடன்பாட்டில் கையெழுத்திட்டனர்.
ஒழுங்குமுறை அனுமதிகளுக்கும் உறுதியான கூட்டுத் தொழில் உடன்பாடுகளுக்கும் உட்பட்டு, தங்களது சேவைகளை விரிவுபடுத்தவும் மேம்படுத்தவும் அவ்விரு விமான நிறுவனங்களும் இலக்கு கொண்டுள்ளன. கூடுதல் வழித்தடத் தெரிவுகள், இடையறாத் தொடர்புகள், ஒருங்கிணைக்கப்பட்ட பயணத்தின்மூலம் இரு விமானச் சேவை நிறுவனங்களின் விமானங்களுக்கும் முன்பதிவு செய்ய வாடிக்கையாளர்களை அனுமதித்தல் ஆகியவற்றுக்கும் அவை நோக்கம் கொண்டுள்ளன.
சிங்கப்பூர், இந்தியா தவிர்த்து வேறு பல, தேர்ந்தெடுக்கப்பட்ட சந்தைகளில் தங்களது ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதற்கான வாய்ப்புகள் குறித்து ஆராயவும் அவ்விரு நிறுவனங்களும் திட்டமிட்டுள்ளன.
இதுபற்றிக் கருத்துரைத்த திரு கோ, “சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் - ஏர் இந்தியா இடையிலான இந்த உடன்பாடு, எங்களது வெற்றிகரமான பங்காளித்துவத்தின் இயல்பான பரிணாமம். இது உண்மையான மதிப்பை உருவாக்கி, வாடிக்கையாளர்களுக்கு மேம்பட்ட பயன்களை வழங்கும். இந்த வெற்றிகரமான, உத்திமுறை ஒத்துழைப்பானது சிங்கப்பூருக்கும் இந்தியாவிற்கும் இடையிலான தொடர்பை வலுப்படுத்தும். இரு நாடுகளிலும் விமானப் போக்குவரத்தும் சுற்றுலாத் துறையும் வளர்ச்சியடைய ஆதரவளிக்கும்,” என்றார்.
இந்த உடன்பாட்டின்மூலம் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் உடனான தங்களது மதிப்புமிக்க, நீண்டகாலப் பங்காளித்துவத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்வதில் மகிழ்ச்சி அடைகிறோம் என்று திரு வில்சன் கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
தற்போது, சிங்கப்பூர் ஏர்லைன்சும் ஏர் இந்தியாவும் 20 நாடுகள், 61 வட்டாரங்களில் உள்ள இடங்களுக்கு குறியீட்டுப் பகிர்வு (codeshare) ஒப்பந்தத்தைச் செய்துகொண்டுள்ளன.

