ஆஸ்திரேலியாவில் விரைவில் தொடங்கப்படவிருக்கும் மேற்கு சிட்னி விமான நிலையத்தில் (Western Sydney International Airport- WSI) முதல் வெளிநாட்டு விமானமாக எஸ்ஐஏ தடம் பதிக்கிறது.
2026ஆம் ஆண்டில் அந்த விமான நிலையம் திறக்கப்படவுள்ளது. சிட்னி நகரின் இரண்டாவது விமான நிலையமான இது, நியூ சவுத் வேல்ஸின் பேட்ஜெரிஸ் கிரீக்கில் அமைந்துள்ளது. தற்போதைய சிட்னி கிங்ஸ்ஃபோர்ட் ஸ்மித் அனைத்துலக விமான நிலையம் தினமும் இரவு 11.00 மணியிலிருந்து விடியற்காலை 2.30 மணி வரை மூடப்படுகிறது. ஆனால் புதிய விமான நிலையம் 24 மணி நேரமும் செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெஸ்டர்ன் சிட்னி விமான நிலையத்தின் கட்டுமானப் பணி எண்பது விழுக்காட்டுக்கு மேல் முடிந்துள்ளது.
இந்தப் புதிய விமான நிலையத்தில் குவாண்டாஸ், ஜெட்ஸ்டார் போன்ற விமானங்களும் சேவைகளை வழங்கவிருக்கின்றன.
வெஸ்டர்ன் சிட்னி விமான நிலையத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான சைமன் ஹிக்கே, எஸ்ஐஏவுடன் செய்துகொள்ளப்பட்ட ஏற்பாடுகளைப் பற்றி விவரித்தார்.
“பின்னிரவு நேரத்தில் சேவை வழங்கக்கூடிய ஆற்றல் இருப்பதால், உதாரணமாக சிங்கப்பூர் ஏர்லைன்சின் வர்த்தகப் பிரிவு பயணிகள் சிட்னியில் தங்களுடைய முழு நாள் வேலையை முடித்துக் கொண்டு இரவில் பயணம் மேற்கொண்டு விடிவதற்குள் சிங்கப்பூரை அடைந்து அடுத்த நாள் சந்திப்புகளில் பங்கேற்கலாம்,” என்று அவர் குறிப்பிட்டார்.
விமான நிலையத்தில் ஐந்து நிமிட நேரத்தில் டாக்சி உள்ளிட்ட நவீன வசதிகளால் தங்குத் தடையற்ற பயண அனுபவத்தைப் பெறலாம் என்றும் அவர் கூறினார்.
சிங்கப்பூர் ஏர்லைன்சின் வட்டார உதவித் தலைவரான (தென்மேற்கு பசிபிக்) லூயிஸ் அருள், “சிட்னிக்கு சென்று திரும்பும் பயணிகளுக்கு வலுவானப் பயணத் தொடர்பை வழங்க வேண்டும் என்ற எங்களுடைய கடப்பாட்டை இரு தரப்பு உடன்பாடு பிரதிபலிக்கிறது” என்றார்.