சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் அதிக எண்ணிக்கையில் புதிய விமானங்களைத் தருவிக்கக் கூடும்

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் அதிக எண்ணிக்கையில் புதிய விமானங்களைத் தருவிக்கக் கூடும்

2 mins read
93596019-ed80-4468-8bc2-aa325d8453fc
விமானங்களைப் புதுப்பிக்கும் திட்டங்களைத் தொடர்ந்து மறுஆய்வு செய்வதாகச் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் தெரிவித்தது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

பாரிஸ்/ஹாங்காங்: சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் தனது அடுத்தகட்ட வளர்ச்சித் திட்டங்களின் ஓர் அங்கமாக, புதிதாக 50 மிகப்பெரிய விமானங்களை வாங்குவதற்கு ஏர்பஸ், போயிங் நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது.

400 இருக்கைகள் கொண்ட போயிங் 777X அல்லது அதைவிடச் சற்று சிறிய ஏர்பஸ் A350-1000 ஆகியவற்றை வாங்குவதன் தொடர்பில் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் பேச்சு நடத்தி வருவதாகத் தெரிகிறது. பேச்சுவார்த்தைகள் ஆரம்ப கட்டத்தில் உள்ளதாக விமானத்துறையைச் சேர்ந்த இருவர், செய்தி ஊடகங்களிடம் தெரிவித்தனர்.

பழைய விமானங்களைச் சேவையிலிருந்து அகற்றி, புதிய விமானங்களைச் சேர்க்கும் புதுப்பிப்புத் திட்டங்களைத் தொடர்ந்து மதிப்பாய்வு செய்வதாக ராய்ட்டர்ஸ், ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் ஆகியவற்றிடம் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் தெரிவித்தது. 

இது தொடர்பான கலந்துரையாடல்கள் நடைபெறுகின்றனவா என்ற கேள்விக்குப் பதிலளிக்க அது மறுத்துவிட்டது.  அதேபோல, விமானத் தயாரிப்பு நிறுவனங்களான ஏர்பஸ், போயிங் நிறுவனங்களும் கருத்துரைக்க மறுத்துவிட்டன.

நீண்ட தூரச் சேவை வழங்கும் விமானங்களை வாங்கும் மிகப்பெரிய வாடிக்கையாளர்களில் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் ஒன்றாகும்.

எண்ணெய் விலை உயர்ந்ததன் காரணமாகப் போட்டி நிறுவனங்களில் சில, தங்கள் விமானங்களின் எண்ணிக்கையைக் குறைத்துக்கொண்டாலும், சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் தொடர்ந்து தனது ஆற்றலை விரிவுபடுத்தப்போவதாக அது மே மாதத்தில் கூறியிருந்தது.

விமானத் துறையில் அனைத்துலக அளவில் தாக்கத்தை ஏற்படுத்தும் ஆற்றல் சிங்கப்பூர் ஏர்லைன்சுக்கு உள்ளது.

நுட்பமான, ரகசியமான விமானப் பேச்சுவார்த்தைகளுக்கும் இந்த விமான நிறுவனம் பெயர் பெற்றது.

எண்ணெய் விலை உயர்ந்ததால் போட்டி நிறுவனங்களில் சில, தங்கள் விமானச் சேவைகளைக் குறைத்துக்கொண்டாலும்,  சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் தொடர்ந்து தமது செயல்பாட்டுத் திறனை விரிவுபடுத்தப் போவதாகக் கடந்த மாதம் கூறியிருந்தது.

போயிங் 777 ‘மினி-ஜம்போ’ ரக விமானங்களை நீண்டகாலமாக இயக்கி வரும் எஸ்ஐஏ, அதற்கு அடுத்தபடியாக வந்த 777 எக்ஸ் ரக விமானத்தின் தொடக்கக்கால வாடிக்கையாளராகவும் இருந்து வருகிறது.

சிங்கப்பூரின் இந்தப் பேச்சுவார்த்தைகள், இன்னும் வடிவமைப்பு நிலையிலேயே உள்ள பெரிய ரக விமானங்களுக்கான தேவையைக் கணிப்பதற்கு விமானத் தயாரிப்பு நிறுவனங்களுக்கு உதவும் என்று தகவல் வட்டாரங்கள் தெரிவித்தன.

போயிங்கின் 777 எக்ஸ் விமானத்துடன் நேரடியாகப் போட்டியிடுவதற்காக, ‘ஏ350-2000’ எனப்படும் பெரிய ஏ350 ரக விமானத்தை உருவாக்கும் எண்ணத்தில் இருப்பதாக ஏர்பஸ் நிறுவனம் 2025ல் கூறியிருந்தது. இருப்பினும், அத்திட்டம் உடனடியாகச் செயல்படுத்தப்படும் என்ற செய்திகளை அது பெரிதுபடுத்தவில்லை.

குறிப்புச் சொற்கள்
விமானம்சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்போயிங்பேச்சுவார்த்தை