தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

புகையுடன் தரையிறங்கிய சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம்

2 mins read
e49d1db6-9b68-4cab-b10b-b39c977bb153
தாமதத்திற்காகத் தன் பயணிகளிடம் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் மன்னிப்பு கேட்டுக்கொண்டது - கோப்புப்படம்

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் (எஸ்ஐஏ) விமானம் ஒன்று அதன் சக்கரங்களிலிருந்து புகை கிளம்பியபடி, திங்கட்கிழமை (ஆகஸ்ட் 12) ஜப்பானின் நரிட்டா அனைத்துலக விமான நிலையத்தில் தரையிறங்கியது.

நிறுத்துவிசையில் (பிரேக்) ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறே அதற்குக் காரணம் எனக் கூறப்பட்டது.

சாங்கி விமான நிலையத்திலிருந்து ஞாயிற்றுக்கிழமை கிளம்பிய SQ638 விமானம், திங்கட்கிழமை காலை நரிட்டா விமான நிலையத்தில் தரையிறங்கியபோது அதன் நிறுத்துவிசையில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதாக எஸ்ஐஏ பேச்சாளர் தெரிவித்தார்.

கிரேட்டர் தோக்கியோ பகுதிக்கு அவ்விமானம் சேவையாற்றுகிறது.

அந்த போயிங் 787 விமானத்தில் 260 பயணிகளும் 16 ஊழியர்களும் இருந்தனர். யாரும் காயமுற்றதாகத் தெரிவிக்கப்படவில்லை.

நரிட்டா விமான நிலையத்திலிருந்த பொறியியல் குழு அக்கோளாற்றைச் சரிசெய்து, வேறு ஒரு சக்கரத்தைப் பொருத்திவிட்டதாக அப்பேச்சாளர் கூறினார்.

இச்சம்பவத்தால் திங்கட்கிழமை காலை 11.10 மணிக்கு நரிட்டாவிலிருந்து சிங்கப்பூர் கிளம்ப வேண்டிய SQ637 விமானம், இரு மணி நேர தாமதத்திற்குப் பிறகு, பிற்பகல் 1.28 மணிக்குப் புறப்பட்டது.

தாமதத்திற்காகத் தன் பயணிகளிடம் எஸ்ஐஏ மன்னிப்பு கேட்டுக்கொண்டது.

இதனிடையே, சம்பவம் தொடர்பில் காலை 7.45 மணியளவில் தனக்குத் தகவல் கிடைத்ததாக நரிட்டா நகரத் தீயணைப்புத் துறை தெரிவித்தது என்று ஜப்பானிய ஊடகச் செய்திகள் கூறுகின்றன.

அதனையடுத்து, SQ638 விமானம் தரையிறங்கிய ஓடுபாதை கிட்டத்தட்ட 50 நிமிடங்களுக்கு மூடப்பட்டது.

விமான நிலையத்திற்குக் கிட்டத்தட்ட 20 தீயணைப்பு வண்டிகள் அனுப்பிவைக்கப்பட்டதாக நரிட்டா தீயணைப்புத் துறையும் ஜப்பானின் நில, உள்கட்டமைப்பு, போக்குவரத்து, சுற்றுப்பயண அமைச்சும் தெரிவித்தன.

தீச்சம்பவம் எதுவும் நிகழாதபோதும், விமானம் இழுத்துச்செல்லப்பட்டபின் ஓடுபாதையில் சக்கரத்தின் துண்டுச்சிதறல்கள் காணப்பட்டன.

குறிப்புச் சொற்கள்