சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானத்தில் கோளாறு; ஐந்து மணி நேரமாக உள்ளேயே தவித்த பயணிகள்

2 mins read
cfb5855a-4341-4bf1-887c-947bd9583d41
பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு ஹோட்டலில் தங்குமிட வசதியும் நிலவழிப் போக்குவரத்து வசதியும் ஏற்பாடுசெய்து தரப்பட்டதாக எஸ்ஐஏ தெரிவித்தது. - படம்: பிஸ்னஸ் டைம்ஸ்

தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஜனவரி 10ஆம் தேதி ஜப்பானின் ஹொக்கைடோ தீவிலுள்ள நியூ சித்தோஸ் விமான நிலையத்திலிருந்து கிளம்பிய சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம் மீண்டும் அங்கேயே திரும்ப நேர்ந்தது.

இதனால், 300க்கும் மேற்பட்ட பயணிகள் பல மணி நேரமாக விமானத்தினுள்ளேயே இருக்க நேரிட்டது.

சம்பவ நாளன்று காலை 10.14 மணிக்கு (சிங்கப்பூர் நேரப்படி காலை 9.14) சப்போரோ நகரிலிருந்து அந்த எஸ்கியூ661 விமானம் கிளம்பியதாக எஸ்ஐஏ நிறுவனம், ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் தெரிவித்தது.

கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்திற்குப் பிறகு அந்த ஏ350-900 விமானம் தொழில்நுட்பக் கோளாற்றால் புறப்பட்ட இடத்திற்கே திரும்பியது.

காலை 11.30 மணியளவில் அங்குத் தரையிறங்கிய விமானம், பொறியாளர்கள் சோதிப்பதற்காகப் பாதுகாப்பான இடத்திற்குக் கொண்டுசெல்லப்பட்டது. அவ்விமானத்தில் 301 பயணிகள் இருந்ததாக எஸ்ஐஏ பேச்சாளர் தெரிவித்தார்.

பிரச்சினையைக் கண்டறிய கூடுதல் நேரம் தேவைப்பட்டதால் பிற்பகல் 2.15 மணியளவில் அவ்விமானச் சேவை ரத்துசெய்யப்பட்டது.

விமானத்தினுள் சிறிது நேரத்திற்குக் குளிரூட்டி வேலை செய்யவில்லை என்று பயணி ஒருவர் கூறியதாக ஷின் மின் நாளிதழ் செய்தி குறிப்பிட்டது.

விமான நிலைய முனையத்திற்குச் செல்லும் இணைப்புப் பேருந்துகளுக்காக விமானத்திலேயே காத்திருந்த பயணிகளுக்குச் சிற்றுண்டியும் உணவும் வழங்கப்பட்டதாக எஸ்ஐஏ பேச்சாளர் கூறினார்.

சப்போரோவில் இது உச்ச பயணக் காலம் என்பதால் குறைவான இணைப்புப் பேருந்துகளே இருந்தன. இதனால், கடைசித் தொகுதிப் பயணிகள் மாலை 5 மணிக்குத்தான், அதாவது கிட்டத்தட்ட ஐந்து மணி நேரத்திற்குப் பிறகே விமானத்திலிருந்து வெளியேற முடிந்ததாகக் கூறப்பட்டது.

பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு ஹோட்டலில் தங்குமிட வசதியும் நிலவழிப் போக்குவரத்து வசதியும் ஏற்பாடு செய்து தரப்பட்டதாக எஸ்ஐஏ தெரிவித்தது.

பின்னர் மறுநாள் 11ஆம் தேதி சப்போரோவிலிருந்து காலை 10.57 மணிக்கு மாற்று விமானத்தின்மூலம் கிளம்பிய பயணிகள், மாலை 6.24 மணிக்குச் சிங்கப்பூரை வந்தடைந்தனர்.

சிங்கப்பூரில் இறங்கி, வேறு விமானத்தில் பயணம் செய்யவிருந்த இடைவழிப் பயணிகள் மீண்டும் பயணச்சீட்டு வாங்க உதவியதாகவும் எஸ்ஐஏ தெரிவித்தது.

குறிப்புச் சொற்கள்