2024 முதலாம் காலாண்டின் வலுவான வளர்ச்சியால் ஜூன் மாதம் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் (எஸ்ஐஏ) பயணிகள் எண்ணிக்கையும் விமானச் சரக்கு தேவையும் பெரிய அளவில் அதிகரித்துள்ளது.
ஜூன் 30 வரையுள்ள முதல் மூன்று மாதங்களில் எஸ்ஐஏ மற்றும் அதன் மலிவுக்கட்டண விமானமான ஸ்கூட் ஆகியவற்றில் பயணம் செய்த பயணிகளின் எண்ணிக்கை 9.6 மில்லியனை எட்டியது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அது 2023 ஆண்டு இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில், 13.8 விழுக்காடு அதிகம் என்றும் மார்ச் 31 உடன் முடிவடைந்த நான்காம் காலாண்டுடன் ஒத்திருந்தது என்றும் கூறப்பட்டது.
இருப்பினும் இந்தப் புதிய எண்ணிக்கை கொவிட்-19 பெருந்தொற்றுக்கு முன்பிருந்த மாதாந்தர எண்ணிக்கையை விட குறைவு.
2020 ஜனவரியில் இந்த விமானங்களில் பயணம் செய்தோர் எண்ணிக்கை 3.38 மில்லியன். அதே ஆண்டு ஜூன் மாதத்தில் அந்த எண்ணிக்கை 3.19 மில்லியன்.
இடையாண்டு பள்ளி விடுமுறை காலத்திலும் வடக்கு அரைக்கோளம் கோடைகால பயணப் பருவத்திலும் விமானப் பயணங்களுக்கான தேவை அதிகரித்தது.
துடிப்பான மின் வர்த்தகம், துறைமுக போக்குவரத்து நெரிசல், கடல்வழி அஞ்சல் ஆகியவற்றின் காரணமாகவும் விமானச் சரக்கு அளவும் அதிகரித்தது.
கொவிட் பெருந்தொற்றுக்குப் பிறகு எஸ்ஐஏ தொடர்ந்து மீண்டு வருகிறது. நாட்டின் பொருளியல் வளர்ச்சி இரண்டாம் காலாண்டில் அதிகரித்து, 2024ல் பொருளியல் வளர்ச்சி 1 விழுக்காட்டுக்கும் 3 விழுக்காட்டுக்கும் இடைப்பட்டிருக்கும் என்ற முன்னுரைப்பை வெளிப்படுத்தியது.
தொடர்புடைய செய்திகள்
சிங்கப்பூரில் பிப்ரவரி மாதம் நடந்த டெய்லர் சுவிஃப்ட் இசை நிகழ்ச்சி உட்பட 2024ல் நடந்த பெரிய நிகழ்ச்சிகளால், வெளிநாட்டுப் பயணிகளும் வருகையாளர்களும் சாங்கி விமான நிலையத்தை அதிகம் பயன்படுத்தினர் என்று புளூம்பர்க் செய்தி தெரிவித்தது.