உலகின் சிறந்த விமான நிறுவனமாக சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் மீண்டும் தேர்வு

உலகின் சிறந்த விமான நிறுவனமாக சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் மீண்டும் தேர்வு

கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

19 Sep 2026 - 12:57 pm

3 mins read

சிங்கப்பூரின் தேசிய விமான நிறுவனமான சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் (எஸ்ஐஏ) உலகின் சிறந்த விமான நிறுவனம் என்ற பட்டத்தை வென்றிருக்கிறது.

24 மில்லியனுக்கும் அதிகமான பயணிகள் பங்கேற்ற 2026ஆம் ஆண்டிற்கான அனைத்துலகக் கருத்துக் கணிப்பில் அது முதலிடம் பிடித்தது

முந்திய 2025ஆம் ஆண்டில் முதலாவதாக வந்தது கத்தார் ஏர்வேஸ் இம்முறை இரண்டாம் இடத்திற்குத் தள்ளப்பட்டது

 ஹாங்காங்கின் ‘கேத்தே பசிபிக் ஏர்வேஸ்’, ஜப்பானின் ‘ஏஎன்ஏ ஆல் நிப்பான் ஏர்வேஸ்’ ‘டர்க்கிஷ் ஏர்வேஸ்’ ஆகியவை முறையே மூன்று, நான்கு ஐந்தாம் இடங்களைப் பிடித்தன.

எஸ்ஐஏ நிறுவனம் 2025ஆம் ஆண்டிலும், 2024, 2022, 2021 மற்றும் 2019 ஆகிய ஆண்டுகளிலும் கத்தார் ஏர்வேசுக்கு அடுத்தபடியாக இரண்டாம் இடத்தைப் பிடித்திருந்தது. மேலும் 2023, 2018, 2008, 2007 மற்றும் 2004 ஆகிய ஆண்டுகளில் அது பட்டியலில் முதலிடத்தைப் பிடித்தது.

லண்டனைச் சேர்ந்த ‘ஸ்கைடிராக்ஸ்’ (Skytrax) ஆய்வு நிறுவனம் 2025 செப்டம்பர் முதல் 2026 ஆகஸ்ட் வரை இந்த ஆண்டுக்கான அனைத்துலகத் தரவரிசை ஆய்வை நடத்தியது. அதில் 100க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த பயணிகள், 325க்கும் மேற்பட்ட விமான நிறுவனங்களை மதிப்பிட்டனர்.

எஸ்ஐஏயின் குறைந்த கட்டணத் துணை நிறுவனமான ஸ்கூட், தொடர்ந்து ஆறாவது ஆண்டாக உலகின் சிறந்த நீண்ட தூர, மலிவுக் கட்டண விமான நிறுவனமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது. 

மேலும், ‘ஏர் ஏஷியா’ முதலிடம் பிடித்த உலகின் சிறந்த மலிவுக் கட்டண விமான நிறுவனம் பிரிவில் ஸ்கூட் இரண்டாம் இடத்தைப் பிடித்தது.

செப்டம்பர் 18ஆம் தேதி லண்டனில் நடைபெற்ற 2026 ஸ்கைடிராக்ஸ் உலக விமான நிறுவன விருதுகள் விழாவில் ஆசியாவின் சிறந்த விமான நிறுவனம், உலகின் சிறந்த இக்கானமி வகுப்பு, உலகின் சிறந்த இக்கானமி வகுப்பு உணவுச் சேவை ஆகிய விருதுகளையும் எஸ்ஐஏ பெற்றது.

உலகின் சிறந்த விமானச் சிப்பந்திகள் பிரிவில் அது இரண்டாம் இடத்தைப் பிடித்தது; இதில் கேத்தே பசிபிக் ஏர்வேஸ் முதலிடம் பெற்றது.

இந்த விருது நிறுவன ஊழியர்களின் அர்ப்பணிப்பு, தொழில்முறைச் சேவை ஆகியவற்றுக்குச் சான்றாக உள்ளது என எஸ்ஐஏ தலைமை நிர்வாக அதிகாரி கோ சூன் போங் தெரிவித்தார்.

அத்துடன், சேவை, செயல்பாடு ஆகியவற்றில் விமான நிறுவனத்தின் தரத்தை உயர்த்த தாங்கள் தொடர்ந்து உழைப்பதாகவும் திரு கோ கூறினார். விமான நிறுவனத்தின் மீதான நம்பிக்கை, ஆதரவு ஆகியவற்றுக்காக வாடிக்கையாளர்களுக்கு அவர் நன்றி தெரிவித்தார்.

2025-2026 நிதியாண்டில், எஸ்ஐஏ குழுமம் தனது அதிகபட்ச வருவாயான $20.5 பில்லியனைப் பதிவுசெய்துள்ளது.

2025 ஏப்ரல் முதல் 2026 மார்ச் வரை எஸ்ஐஏ, ஸ்கூட் ஆகிய நிறுவனங்கள் சாதனை அளவாக 42.2 மில்லியன் பயணிகளை ஏற்றிச் சென்றுள்ளன. இது முந்தைய ஆண்டைவிட 7.7 விழுக்காடு அதிகம்.

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் தனது ஏர்பஸ் ஏ350-900 விமானங்களில் புதிய முதல் வகுப்பு, பிஸ்னஸ் வகுப்பு இருக்கைகளை அறிமுகப்படுத்துவதை 2026ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டிலிருந்து 2027ஆம் ஆண்டின் முதல் காலாண்டிற்கு ஒத்திவைத்தது.

அந்தப் புதிய இருக்கைகள் 2021லேயே அடுத்த தலைமுறை போயிங் 777-9 ஜெட் விமானங்களில் அறிமுகப்படுத்தப்பட வேண்டியவை, ஆனால், அந்தப் புதிய அகலமான விமானங்களின் தயாரிப்பு தாமதமானதால் அது தள்ளிப்போனது.

குறிப்புச் சொற்கள்
சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்விமானத்துறைஆய்வுபயணிகள்