சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் குழுமம் அடுத்த மூன்று நிதியாண்டுகளில் அதன் பங்குதாரர்களுக்குச் சிறப்பு ஈவுத்தொகையை வழங்கவிருக்கிறது.
ஏர் இந்தியா பங்காளி நிறுவனத்தால் ஏற்பட்ட இழப்புகள், பிற காரணங்கள் ஆகியவற்றால் வருவாய் குறைந்தபோதும் சிறப்பு ஈவுத்தொகையைச் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் கொடுக்கிறது.
சிங்கப்பூர் ஏர்லைன்சின் வருவாய் அல்லது நிகர லாபம் ஆண்டுக்கு ஆண்டு அடிப்படையில் 67.8 விழுக்காடு குறைந்தது. நிதியாண்டின் முதல் பாதியில் செப்டம்பர் 30ஆம் தேதி நிலவரப்படி நிகர லாபம் $239 மில்லியனாகப் பதிவானது.
விஸ்தாரா என்ற மற்றோர் இந்திய விமான நிறுவனம், ஏர் இந்தியாவுடன் இணைந்ததைத் தொடர்ந்து சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் ஏர் இந்தியாவின் நிதிச் செயல்பாட்டுக்குக் கடந்த ஆண்டு டிசம்பரிலிருந்து கணக்கெடுக்கத் தொடங்கியது.
இவ்வாண்டு ஜூன் மாதம் 241 பேர் மாண்ட விமான விபத்தை அடுத்து ஏர் இந்தியா நிறுவனம் சிங்கப்பூர் ஏர்லைன்சிடமிருந்து நிதியுதவியையும் நாடியது.
இந்நிலையில், சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் அதன் பங்குதாரர்களுக்குப் பத்து விழுக்காட்டு சிறப்பு ஈவுத்தொகையைக் கொடுக்கவிருப்பதாகத் தெரிவித்தது.
அடுத்த மூன்று நிதியாண்டுகளில் அந்தத் தொகை ஏறக்குறைய $900 மில்லியன் என்று கூறப்பட்டது.

