சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவன (எஸ்ஐஏ) விமானச் சேவையின் பின்னணியில் நடப்பவற்றைத் தெரிந்துகொண்டதும் மனமகிழ்ந்தார் 16 வயது முகமது அகிஃப்.
ஆண்டுக்கு ஒரு முறை விமானப் பயணம் மேற்கொள்ளும் அவர், பல ஆண்டுகளுக்கு முன்பு சென்ற விமானப் பயணங்களின் தேதிகளைக்கூடச் சரியாக நினைவில் வைத்துள்ளார்.
எஸ்ஐஏ பயிற்சி நிலையத்தில் ‘எஸ்ஜி60’ சுற்றுலாவுக்குப் புறப்படுவதற்கு முன்பே ஒவ்வோர் அங்கத்திலும் செலவிடவுள்ள நேரத்தை அவர் உன்னிப்பாகக் கவனித்ததிலிருந்தே அவரது ஆற்றலும் ஆர்வமும் புரிந்தது.
விமானப் பயணம் சில மணி நேரங்களில் முடிந்துவிடும். ஆனால், அகிஃப்பின் வாழ்க்கைப் பயணம் அப்படியன்று.
“அவர் ஐந்து வயதில்தான் பேசத் தொடங்கினார். வாழ்க்கைப் பயணம் அவருக்குச் சவால்மிக்க பயணமாக இருந்துள்ளது,” எனக் கண்ணீர் மல்கக் கூறினார் அகிஃபின் 50 வயதுத் தாயார்.
தாயாரின் உந்துதலாலும் ரெயின்போ நிலையம் வழங்கிய திட்டங்களாலும் மேம்பட்டு இன்று தலைமைத்துவப் பண்புகள் கொண்ட மாணவ ஆலோசகராகத் திகழ்கிறார் அகிஃப். அவர் நன்றாகக் காப்பி கலப்பார், சமைக்கவும் செய்வார். எனவே எதிர்காலத்தில் உணவு, பானத் துறையில் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தால் நன்றாக இருக்கும் என்கிறார் அகிஃபின் தாயார். “எஸ்ஐஏ அதன் உணவகத்தில் அகிஃப் போன்றோருக்கு வேலை கொடுக்க வாய்ப்பிருக்கும் என நம்புகிறேன்,” என்றார் அவர்.
அகிஃப்பைப்போல, வளர்ச்சித் தேவைகள் அல்லது உடற்குறைகள் கொண்ட 1,600க்கும் மேற்பட்ட சிறுவர்களுக்கும் இளையருக்கும் உதவும் வகையில், சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் S$3 மில்லியன் நன்கொடை திரட்டியுள்ளது.
அந்த நிதியை ஜூலை 19ஆம் தேதி, சமூக உண்டியலுக்கும் ஏவ்வா (AWWA), ரெயின்போ நிலையம் ஆகிய அறநிறுவனங்களுக்கும் துணைப் பிரதமர் கான் கிம் யோங்கின் முன்னிலையில் அது வழங்கியது.
தொடர்புடைய செய்திகள்
எஸ்ஐஏ பயிற்சி நிலையத்தில் நடைபெற்ற ‘எஸ்ஜி60 எஸ்ஐஏ கேர்ஸ்’ பொது வரவேற்பு விழாவின் முக்கிய அங்கமாக நிதித் திரட்டு நடைபெற்றது.
மூன்றாம் ஆண்டாக நடைபெறும் ‘எஸ்ஐஏ கேர்ஸ்’ எனும் இந்த நிதித் திரட்டு இயக்கம், முதன்முறையாக அதன் பொது வரவேற்பு நிகழ்ச்சியை (Openhouse) இரு நாள்களுக்கு (ஜூலை 19, 20) நடத்துகிறது.
பொது வரவேற்பு நிகழ்ச்சியில் 33 சமூக சேவை அமைப்புகளிலிருந்து கிட்டத்தட்ட 900 பேரை எஸ்ஐஏ வரவேற்று, உபசரித்தது.
“எஸ்ஐஏ என்பது தேசிய விமான நிறுவனம் மட்டுமன்று. அது தேசியச் சின்னமும்கூட. ‘எஸ்ஐஏ கேர்ஸ்’ உலகம் முழுவதும் சிங்கப்பூர்க் கொடியை உயரப் பறக்கவிடுகிறது. எஸ்ஐஏ பல நாடுகளுக்கிடையேயான பாலமாக மட்டுமல்லாமல் சமூகங்களுக்கிடையேயான பாலமாகவும் விளங்குகிறது. இதைப்போல் அனைவரையும் உள்ளடக்கும் சமூகத்தின் உருவாக்கத்துக்குப் பங்காற்ற மற்ற நிறுவனங்களையும் ஊக்குவிக்கிறேன்,” என்றார் துணைப் பிரதமர் கான்.
இந்த ஆண்டு தொடங்கிய ‘எஸ்ஜி கிவ்ஸ்’ மானியம் வழி, வெள்ளிக்கு வெள்ளி என்ற அடிப்படையில், அரசாங்கம் மேலும் S$3 மில்லியனைச் சமூக உண்டியலுக்கு நன்கொடையாக வழங்கும் என்றார் அவர்.
மாணவர்களின் பராமரிப்புக்கு நிதி பயன்படும்
‘ஏவ்வா’க்கு வழங்கப்படும் நிதி, சாதாரண பள்ளிகளில் படித்தபடி ஏவ்வா சமூக ஒருங்கிணைப்புச் சேவையில் (Community Integration Service) பங்கேற்கும் 300க்கும் மேற்பட்ட உடற்குறையுள்ள அல்லது பார்வைத் திறன் குன்றிய மாணவர்களுக்காகவும், ‘ஏவ்வா’வின் நப்பிரி, பிடோக் பள்ளிகளில் படிக்கும் மதியிறுக்கம் அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட உடற்குறைகள் கொண்ட 470க்கும் அதிகமான மாணவர்களுக்காகவும் பயன்படுத்தப்படும்.
“அந்த மாணவர்களுக்காக ‘ஏவ்வா’ வழங்கும் சிகிச்சைச் சேவைகள், சுயமாக வாழும் திறன் பயிற்சிகள், சமூகத்தில் ஒருங்கிணைக்கும் முயற்சிகள் போன்றவற்றுக்கு இந்நிதி கைகொடுக்கும்,” என்றார் ஏவ்வா தலைமை நிர்வாகி ஜே ஆர் கார்த்திகேயன்.
கிடைத்த நிதிமூலம் ரெயின்போ நிலையம், அதன் அட்மிரல் ஹில், மார்கிரெட் டிரைவ், ஈசூன் பார்க் வளாகங்களில் சிறப்புக் கல்வித் திட்டங்களை வலுப்படுத்தும். மதியிறுக்கம் அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட உடற்குறைகளைக் கொண்ட சிறுவர்கள், இளையர்கள் என ஏறக்குறைய 900 பேர் இதனால் மேம்பட்ட பராமரிப்பைப் பெறுவர்.
மொத்தம் 47 நிறுவனங்கள் குறைந்தது $20,000 நன்கொடையளித்தன. அவற்றில் 14 நிறுவனங்கள் குறைந்தது $35,000 நன்கொடையளித்தன.
“கடந்த மாதம், 40 நாடுகளில் பணியாற்றும் 1,000க்கும் மேற்பட்ட ‘எஸ்ஐஏ’ ஊழியர்கள் ‘உலகம் முழுவதும் எஸ்ஐஏ’ (SIA Around the World) திட்டத்தில் பங்கேற்று அவரவர் நாட்டில் குறைந்த வருமானத்தினர், வீடு இல்லதவர்கள் போன்றவர்களுக்கு உதவி வழங்கினர்,” என்றார் எஸ்ஐஏ குழுமத் தலைமை நிர்வாகி கோ சூன் போங்.
மூன்று மாதங்களில் எஸ்ஐஏ பங்காளிகள், பொதுமக்கள், ஊழியர்கள் ஆகியோரிடமிருந்து திரட்டப்பட்ட S$1.5 மில்லியன் நிதியுடன் வெள்ளிக்கு வெள்ளி எனும் அடிப்படையில் இருமடங்காக்கி மொத்தம் $3 மில்லியனை வழங்கியது எஸ்ஐஏ.