சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் (எஸ்ஐஏ) விமானச் சேவை நிறுவனமும் அதன் குறைந்தவிலை விமானச் சேவைப் பிரிவான ஸ்கூட் விமானச் சேவையும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவற்றின் போயிங் 787 ரக விமானங்களின் எரிபொருள் விசைகளைப் பரிசோதித்துள்ளன.
அண்மையில், இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் ஏர் இந்தியா விமானம் விழுந்து நொறுங்கியதில் 260 பேர் மாண்டனர்.
அந்த போயிங் 787ரக விமானம் ஓடுபாதையிலிருந்து புறப்பட்டு மூன்று வினாடிகளுக்குள் அதன் எரிபொருள் விசை முடக்கநிலைக்குச் சென்றதாகவும் அதன் காரணமாக விமானத்தின் இரண்டு இயந்திரங்களும் செயல்படவில்லை என்றும் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதையடுத்து, சிங்கப்பூர் ஏர்லைன்ஸ், ஸ்கூட் ஆகியவை அவற்றின் விமானங்களில் உள்ள எரிப்பொருள் விசைகளைப் பரிசோதித்துள்ளன.
787 ரக விமானங்களைப் பொறுத்தவரை, சிங்கப்பூர் ஏர்லைன்சுக்கு 26 விமானங்களும் ஸ்கூட்டுக்கு 23 விமானங்களும் உள்ளன.
“எங்கள் வாடிக்கையாளர்கள் மற்றும் ஊழியர்களின் பாதுகாப்புக்கு முன்னுரிமை தருகிறோம்,” என்று எஸ்ஐஏ குழுமத்தின் செய்தித்தொடர்பாளர் செவ்வாய்க்கிழமை (ஜூலை 15) ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழிடம் தெரிவித்தார்.
ஏர் இந்தியா விபத்தைப் பொறுத்தவரை, அந்த விமானத்தின் எரிபொருள் விசை எவ்வாறு அல்லது ஏன் முடக்கநிலைக்குச் சென்றது என்பது குறித்து இந்தியாவின் விமான விபத்து புலன்விசாரணைப் பிரிவு தகவல் வெளியிடவில்லை.

