விமானச் சேவை தரவரிசையில் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் முதலிடம்

1 mins read
f672967d-fa96-4d88-83b9-f2496195f8b0
நைக்கி, ஸ்டார்பாக்ஸ், பிஎம்டபிள்யூ, விசா, சாம்சுங், மாஸ்டர்கார்ட் போன்ற பன்னாட்டு நிறுவனங்களைவிட சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் தரவரிசையில் சிறந்த நிலையில் உள்ளது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

உலகின் தலைசிறந்த விமானச் சேவை நிறுவனமாகச் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் மீண்டும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமன்றி, ஃபார்ச்சூன் சஞ்சிகையில் இடம்பெறும் உலகளவில் பெரிதும் வியந்து போற்றப்படும் நிறுவனங்களுக்கான தரவரிசையில் அது 24வது இடத்தில் உள்ளது.

2025ஆம் ஆண்டில் அத்தரவரிசையில் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் 28வது இடத்தில் இருந்தது.

28வது முறையாக இத்தரவரிசை வெளியிடப்பட்டுள்ளது.

உலகளாவிய நிலையில் 3,380 நிர்வாகிகள், இயக்குநர்கள் மற்றும் பாதுகாப்புப் பகுப்பாய்வாளர்கள் ஆகியோரிடம் ஆய்வு நடத்தி அதன்மூலம் கிடைத்த தரவுகளைக் கொண்டு தரவரிசை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஆய்வில் பங்கெடுத்தோர் தங்களுக்கு மிகவும் பிடித்தமான 10 நிறுவனங்களைத் தேர்ந்தெடுத்தனர்.

நிர்வாகத் தரம், புத்தாக்கம், உலகளாவிய நிலையில் போட்டித்தன்மை உட்பட ஒன்பது அம்சங்களைக் கொண்டு நிறுவனங்கள் மதிப்பீடு செய்யப்பட்டன.

ஒரே ஓர் ஆசிய நிறுவனம் மட்டும் ஒட்டுமொத்த தரவரிசையில் சிங்கப்பூர் ஏர்லைன்சைக் காட்டிலும் சிறந்த நிலையில் உள்ளது.

இத்தரவரிசையில் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு ஓரிடம் பின்னால் டொயோட்டோ மோட்டோர்ஸ் உள்ளது.

நைக்கி, ஸ்டார்பாக்ஸ், பிஎம்டபிள்யூ, விசா, சாம்சுங், மாஸ்டர்கார்ட் போன்ற பன்னாட்டு நிறுவனங்களைவிட சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் ஒட்டுமொத்த தரவரிசையில் சிறந்த நிலையில் உள்ளது.

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ், இத்தரவரிசையில் உள்ள முதல் 50 இடங்களில் இடம்பெறும் ஓரே சிங்கப்பூர் நிறுவனமாகும்.

குறிப்புச் சொற்கள்