இவ்வாண்டு நடைபெறும் சிங்கப்பூர் விமானக் கண்காட்சிக்குச் செல்பவர்கள் பொதுப் போக்குவரத்து ஏற்பாடுகளில் மாற்றத்தையும் எதிர்பார்க்கலாம். சில சாலைகள் மூடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கண்காட்சியைக் காண மக்கள் அலையெனத் திரள்வர் என்று எதிர்பார்க்கப்படுவதால் இந்த நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.
இந்த மாற்றங்கள் ஏறத்தாழ இரண்டரை வாரங்களுக்கு நடப்பில் இருக்கும் என்று கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யும் எக்ஸ்பீரியா இவென்ட்ஸ் தெரிவித்தது.
சாலைகள் மூடல், போக்குவரத்து மாற்றங்கள் ஜனவரி 26ஆம் தேதி தொடங்கும்.
அவை பிப்ரவரி 12ஆம் தேதி காலை 6 மணி வரை நீடிக்கும்.
வான்வெளி, தற்காப்புக் கண்காட்சி இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படுகிறது.
இவ்வாண்டு அது பிப்ரவரி 3ஆம் தேதியிலிருந்து 8ஆம் தேதி வரை சாங்கி கண்காட்சி மையத்தில் நடைபெறும்.
கண்காட்சியில் ஏறத்தாழ 50 நாடுகளைச் சேர்ந்த 1,000க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கெடுக்கும்.
கண்காட்சியின் புதிய அம்சமாக விண்வெளி உச்சநிலை மாநாடு சேர்க்கப்படுகிறது.
தொடர்புடைய செய்திகள்
கண்காட்சியின் முதல் நான்கு நாள்களில் துறை சார்ந்த வருகையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர். கடைசி இரண்டு நாள்களில் பொதுமக்கள் அனுமதிக்கப்படுவர்.

