சிங்கப்பூர் விமானக் கண்காட்சியின் இரண்டாவது நாளில் பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன.
அவற்றில் அவசரநிலை மருத்துவச் சேவைக்கான வான்வழி டாக்சிகளைப் பயன்படுத்துவது குறித்து ஆராய்வதும் அடங்கும்.
இது எந்த அளவுக்குச் சாத்தியம் என்பதை அறிந்துகொள்ள வான்வெளி தொடர்பான சாதனங்களை உற்பத்தி செய்யும் வெர்டிக்கல் ஏரோஸ்பேசும் உள்துறைக் குழு அறிவியல், தொழில்நுட்பப் பிரிவும் இணைந்து செயல்படும்.
இதுகுறித்து சோதனைத் திட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
செயல்முறை, ஒழுங்குமுறைத் தேவைகளுக்கு உட்பட்டு அவசரநிலை மருத்துவச் சேவைக்கான விரிவான அணுகுமுறை உருவாக்கப்படும்.
இந்தச் சோதனைத் திட்டம் இவ்வாண்டு ஏப்ரல் வரை நடத்தப்படும்.
இதன்மூலம், அவரசநிலையின்போது நோயாளிகளுக்குத் தகுந்த உதவியை வழங்கி ஏற்படும் விளைவுகளை இந்த வான்வழி டாக்சிகள், தற்போது நடப்பில் உள்ள அணுகுமுறையுடன் ஒப்பிடும்போது எவ்வாறு மேம்படுத்தக்கூடும் என்பதை அறிந்துகொள்ள இச்சோதனைத் திட்டம் கைகொடுக்கும்.
சியாமன் ஏர்லைன்ஸ் விமானங்களின் இயந்திரங்களுக்கான பராமரிப்புப் பணிகள், இயந்திரங்களை முழுமையாக மாற்றியமைக்கும் பணிகள் ஆகியவற்றை எஸ்டி எஞ்சினியரிங் சிங்கப்பூரில் பராமரிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
அடுத்த பல ஆண்டுகளுக்கு சியாமன் ஏர்லைன்ஸ் விமானங்களின் இயந்திரங்களை அந்நிறுவனம் பழுதுபார்க்கும்.
இந்தப் பங்காளித்துவம் எஸ்டி எஞ்சினியரிங்கின் விரிவாக்கத்தைப் பிரதிபலிக்கிறது.
இதற்கிடையே, சீனாவைச் சேர்ந்த நிறுவனமான ஷான்சி விக்டரி ஜெனரல் ஏவியேஷன், ஆறு தீயணைப்பு விமானங்களைக் கொள்முதல் செய்துள்ளது.
இதற்கான ஒப்பந்தம் சிங்கப்பூர் விமானக் கண்காட்சியின்போது கையெழுத்திடப்பட்டது.
மீட்புப் பணிகள், காட்டுத் தீ அணைப்புச் சேவை போன்ற சேவைகளை வழங்கும் அந்நிறுவனம், இதுகுறித்து கோமாக் நிறுனத்துடன் செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 3) உடன்பாடு செய்துகொண்டது.
ஷான்சி விக்டரி ஜெனரல் ஏவியேஷன் நிறுவனம் கொள்முதல் செய்துள்ள கோமாக் சி909 ரக விமானத்தின் மாதிரி, சிங்கப்பூர் விமானக் கண்காட்சியில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.
அந்த ரக விமானத்தில் பத்து டன் தண்ணீர், தீயணைப்புப் பைகள் ஆகியவற்றுடன் 19 பயணிகளையும் ஏற்றிச் செல்லலாம்.
மலிவுக் கட்டண விமானச் சேவை நிறுவனமான டைகர்ஏர் தைவான், நான்கு ஏர்பஸ் ஏ320நியோ விமானங்களைக் கொள்முதல் செய்துள்ளது.
இதற்கான ஒப்பந்தம் புதன்கிழமை கையெழுத்திடப்பட்டது.
ஒவ்வொரு விமானத்திலும் 232 இருக்கைகள் இருக்கும்.
இதன்மூலம் கூடுதல் பயணிகளை டைகர்ஏர் தைவான் ஏற்றிச் செல்லவதுடன் தனது பயணக் கட்டமைப்பை விரைவாக விரிவுபடுத்தலாம்.
பிரான்சின் வான்வெளித் துறை நிறுவனங்களுக்கான சங்கம் சிங்கப்பூரில் வட்டார அலுவலகத்தைத் திறப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது சிங்கப்பூரின் வான்வெளித் துறைக்கும் பிரெஞ்சு வான்வெளித் துறைக்கும் இடையே பாலமாக அமையும் என்று தெரிவிக்கப்பட்டது.
ஒழுங்குமுறை அம்சங்கள் தொடர்பாகவும் கட்டமைப்பை விரிவுபடுத்த நடத்தப்படும் நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யவும் பிரெஞ்சு நிறுவனங்களுக்கும் சிங்கப்பூர் நிறுவனங்களுக்கும் இந்த அலுவலகம் உதவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

