தற்காப்பு அமைச்சர் சான் சுன் சிங்கும் போக்குவரத்து தற்காலிக அமைச்சர் ஜெஃப்ரி சியாவும் சிங்கப்பூரின் பத்தாவது விமானக் கண்காட்சியை அதிகாரபூர்வமாகத் திறந்துவைத்துள்ளனர்.
சாங்கி விமானக் கண்காட்சி நிலையத்தில் செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 3) சிங்கப்பூர் விமானக் கண்காட்சி 2026 தொடங்கியது.
அதைத் தொடர்ந்து கண்காட்சிக் கூடங்களை உலக நாடுகளிலிருந்து வந்த முக்கியப் பிரமுகர்கள் பார்வையிட்டனர். கண்காட்சியில் விமானப் போக்குவரத்துத் துறை குறித்த கலந்துரையாடல்கள், விமானக் கண்காட்சிகள் என பலவற்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சிங்கப்பூரின் விமானக் கண்காட்சி வட்டாரத்தில் நடைபெறும் ஆகப் பெரிய நிகழ்ச்சிகளில் ஒன்று. இவ்வாண்டு 50க்கும் அதிகமான நாடுகளைச் சேர்ந்த 1,000 நிறுவனங்கள் கண்காட்சியில் கலந்துகொள்கின்றன.
பிப்ரவரி 7, 8ஆம் தேதிகளில் பொதுமக்கள் அண்மைய வர்த்தக, ராணுவ விமானங்களை நேரில் பார்க்க வாய்ப்பு கிடைக்கும்.
ஏர்பஸ், பொம்பார்டியர், கல்ஃப்ஸ்ட்ரீம் ஆகிய விமான உற்பத்தி நிறுவனங்களுடன் சிங்கப்பூர் குடியரசு ஆகாயப் படை, ஜெர்மன் ஆகாயப் படை, ராயல் ஆஸ்திரேலியா ஆகாயப் படை, அமெரிக்க ஆகாயப் படை ஆகியவற்றின் போர் விமானங்களையும் நேரில் காண கண்காட்சி வாய்ப்பளிக்கிறது.
சிங்கப்பூர், இந்தியா, இந்தோனீசியா, மலேசியா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளின் ஆகாயப் படைகளின் போர் விமானங்கள் நிகழ்த்தும் வான் சாகசங்களிலும் பொதுமக்கள் திளைக்கலாம்.
வார இறுதியில் நடைபெறும் விமான சாகச நிகழ்ச்சிகளுக்கான நுழைவுச்சீட்டுகளை சிஸ்டிக் இணையத்தளம் வழி பெறலாம். பெரியவர்களுக்கான நுழைவுச்சீட்டுகள் $39, மூன்றிலிருந்து 12 வயதுக்கு உட்பட்ட பிள்ளைகளுக்கான நுழைவுச்சீட்டுகள் $19.
தொடர்புடைய செய்திகள்
எக்ஸ்பீரியா இவென்ட்ஸ் நிறுவனத்தால் நிர்வகிக்கப்படும் சிங்கப்பூர் விமானக் கண்காட்சி 2026, பிப்ரவரி 3ஆம் தேதியிலிருந்து 8ஆம் தேதி வரை நடைபெறும். மேல் விவரங்களுக்கு காண்க: www.singaporeairshow.com

