சிங்கப்பூரில் மீண்டும் விமானக் கண்காட்சி: டிசம்பர் 10ல் டிக்கெட் விற்பனை

1 mins read
1b7e36c1-6204-4017-9c7e-784ec62a014d
இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் இந்த விமானம் மற்றும் தற்காப்புக் கண்காட்சி, சாங்கி கண்காட்சி மையத்தில் நடைபெறவுள்ளது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

பலரும் ஆவலுடன் எதிர்பார்க்கும் விமானக் கண்காட்சி அடுத்த 2026ஆம் ஆண்டு, பிப்ரவரி 3ஆம் தேதி முதல் 8ஆம் தேதி வரை சாங்கி கண்காட்சி மையத்தில் நடைபெறவுள்ளது.

அதில் 50 நாடுகளைச் சேர்ந்த 1,000க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கெடுக்கவிருக்கின்றன.

நிகழ்ச்சியின் சிறப்பு ஏற்பாடாக முதன்முறையாக விண்வெளி மாநாடு ஒன்றும் பிப்ரவரி 2ஆம் தேதி தொடங்கி 3ஆம் தேதி வரை இரண்டு நாள்களுக்கு மரினா பேயில் உள்ள சேண்ட்ஸ் எக்ஸ்போ மற்றும் மாநாட்டு மண்டபத்தில் நடைபெறவுள்ளது. 

வின்வெளிக் கட்டமைப்பு, நீடித்த நிலைத்தன்மை, முதலீடுகள் ஆகியவற்றைப் பற்றி மாநாடு கலந்தாலோசிக்கும்.  

ஈராண்டுகளுக்கு ஒருமுறை ஏற்பாடு செய்யப்படும் விமானக் கண்காட்சி, இங்கு நடப்பது இதோடு 10வது முறையாகும்.

பிப்ரவரி 7, 8ஆம் தேதிகளில் நடக்கும் நிகழ்ச்சிகளுக்கான பொதுமக்களின் நுழைவுச்சீட்டுகள் புதன்கிழமை (டிசம்பர் 10) முதல் சிஸ்டிக் இணையத்தளத்தில் பெற்றுக்கொள்ளலாம். 

ஒரே குழுவாகச் செல்வோருக்கு வாகன நிறுத்துமிட முத்திரை உள்பட நான்கு நுழைவுச்சீட்டுகளுக்கு $250 கட்டணம் செலுத்தவேண்டும்.  

பொதுமக்கள் கலந்துகொள்ளும் இரண்டு நாள் நிகழ்ச்சி பற்றிய மேல் விவரங்கள் அடுத்த ஆண்டு வெளியிடப்படும் என்று ஏற்பாட்டாளரான எக்ஸ்பிரியா இவென்ட்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. 

கடந்த 2024ஆம் ஆண்டு நடந்த விமானக் கண்காட்சியில், 60,000 பொதுமக்கள் கலந்துகொண்டனர். ஆசியாவின் முக்கிய விமானக் கண்காட்சியாகக் கருதப்படும் இந்நிகழ்ச்சியின் முதல் நான்கு நாட்கள் வர்த்தகர்களுக்கு ஒதுக்கப்படுகிறது. இறுதி இரண்டு நாள்களில் பொதுமக்கள் கலந்துகொள்கின்றனர். 

குறிப்புச் சொற்கள்