சிங்கப்பூர் அனைவருக்குமான நாடு என்பதை வலியுறுத்தி, ஆண்டுதோறும் ஏற்பாடு செய்யப்படும் ஊதா வண்ண அணிவகுப்பு (Purple Parade) நிகழ்வு சன்டெக் சிட்டி வளாகத்தில் சனிக்கிழமை (அக்டோபர் 25) ஏற்பாடு செய்யப்பட்டது. 13ஆம் ஆண்டாக நடைபெறும் இந்நிகழ்ச்சியில் 15,000க்கும் மேற்பட்ட மக்கள் ஒன்று திரண்டனர். பிரதமர் லாரன்ஸ் வோங் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சிறப்பித்தது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது .
சிங்கப்பூரின் 60ஆம் ஆண்டு (எஸ்ஜி 60) நிறைவுக் கொண்டாட்டங்களின் அங்கமான நிகழ்ச்சியில் நடந்த 60 படைப்புகளில் பல கலைஞர்கள் பங்கேற்றனர். அவற்றோடு 60 காட்சிக்கூடங்களும் அமைக்கப்பட்டிருந்தன. அவை அனைத்தும் உடற்குறையுள்ளோர் அல்லாதோர் என இருபிரிவினருக்கும் பேதமின்றி நாடு விளங்கவேண்டும் என்ற இலக்கை பறைசாற்றின. மேலும் 30 வகையான அணிவகுப்புகள் ஒன்றாக வலம் வந்ததும் குறிப்பிடத்தக்கது.
அடித்தளங்களில் இருந்து உருவாக்கப்பட்டுள்ள இயக்கம் ’பர்பல் பரேட்’ என்ற சமூக அமைப்பு. அதனுள் உடற்குறையுள்ளவர்கள், அவர்களுக்கான அமைப்புகள், வர்த்தக நிறுவனங்கள், பொது முகவைகள், தொண்டூழியர்கள் என பலர் அங்கம் வகிக்கின்றனர்.
சன்டெக் சிட்டியின் நடுநாயகமாக அமைந்துள்ள அதன் அடையாளமான (Fountain of Wealth) செல்வ வளத்தைக் குறிக்கும் நீர் வீழ்ச்சியின் அருகே 1000 பங்கேற்பாளர்களுடன் நிகழ்ச்சி தொடங்கிவைக்கப்பட்டது. தொடக்க நிகழ்வில் 50 அமைப்புகளுடன் மத்திய சிங்கப்பூர் வட்டார மேயர் டெனிஸ் புவா, தஞ்சோங் பகார் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ரெச்சல் வோங் ஆகியோர் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சியில் முதன்முதலாக, சிங்கப்பூரின் ஐந்து மாவட்டங்களின் பிரதிநிதிகள் ஒற்றுமையை உணர்த்த ஒன்றாக அணிவகுத்துச் சென்றனர்.
உடற்குறையுள்ளோரும் ஆர்வத்துடன் பங்கேற்ற நான்கு மணிநேர ஆடல், இசை நிகழ்ச்சியில் நிதி திரட்டும் நடத்தப்பட்டது.
சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வோங், அவரது தேசிய தின உரையில் ‘நாம் முதல்’ சமூகத்தை உருவாக்க அறைகூவல் விடுத்திருந்தார். ஒருவருக்கொருவர் பரிவையும் அன்பையும் வெளிப்படுத்துவதன் முக்கியத்துவத்தை அவர் குறிப்பிட்டிருந்தார். அதற்கேற்ப அனைவரும் பகிரும் விழுமியங்களுடன் துடிப்புமிக்க நாடுதழுவிய அடையாளமாகத் திகழும் பர்பல் பரேட் இயக்கத்தை பிரதமர் பாராட்டினார்.

