சிங்கப்பூருக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடையே திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு, பெட்ரோலிய எண்ணெய் போன்ற முக்கிய பொருள்கள் தொடர்ந்து விநியோகம் செய்யப்படுவதை உறுதிசெய்ய இருநாட்டுத் தலைவர்களும் உறுதிகூறியுள்ளனர்.
பிரதமர் லாரன்ஸ் வோங்கும் ஆஸ்திரேலியப் பிரதமர் ஆண்டனி அல்பனீசியும் திங்கட்கிழமை (மார்ச் 23) கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டனர்.
அதில் எரிசக்திப் பாதுகாப்பை வலுப்படுத்துவதற்கான கடப்பாட்டை இருநாட்டுத் தலைவர்களும் மறுவுறுதிப்படுத்தினர்.
திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயுவை அதிக அளவில் உற்பத்திசெய்யும் உலக நாடுகளில் ஆஸ்திரேலியா முதல் சில இடங்களை வகிக்கிறது. ஆஸ்திரேலியாவைத் தவிர கத்தார், அமெரிக்கா, ரஷ்யா ஆகிய நாடுகளும் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயுவை உற்பத்திசெய்கின்றன.
திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு அனைத்துலக நாடுகளுக்கு விநியோகம் செய்யப்படுகிறது. அந்த விநியோகத்தில் இடையூறுகள் ஏற்பட்டால் நாடுகளிடையே போட்டித்தன்மை அதிகரிக்கும். அது வட்டாரங்களைப் பெரிதளவில் பாதிக்கும்.
சிங்கப்பூரின் 95 விழுக்காட்டு மின்சாரம், அண்டை நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு போன்றவற்றைச் சார்ந்திருப்பதால் ஆஸ்திரேலியாவுடன் விநியோகத் தொடர்களை உறுதிப்படுத்திக்கொள்வது அவசியமாகிறது.
உலக அளவில் ஏற்பட்டுள்ள விநியோக இடையூறுகளால் எரிசக்தி வர்த்தகம்மீது ஏற்படக்கூடிய பாதிப்பு குறித்து சிங்கப்பூரும் ஆஸ்திரேலியாவும் ஒன்றையொன்று கலந்தாலோசிக்கும் என்றும் திரு வோங்கும் திரு அல்பனீசியும் குறிப்பிட்டனர்.
சிங்கப்பூரும் ஆஸ்திரேலியாவும் உத்திபூர்வ நம்பிக்கை, தடையற்ற சந்தைகள், விதிமுறைகள் அடிப்படையிலான வர்த்தகம் ஆகிய அடித்தளங்கள்மீது கட்டப்பட்ட நீண்டகால, வலுவான உறவைக் கொண்டுள்ளன.
தொடர்புடைய செய்திகள்
அத்தகைய பொதுவான கொள்கைகளை இந்தத் தருணத்தில் மீண்டும் உறுதிசெய்துகொள்வது முக்கியம் என்று இருநாட்டுத் தலைவர்களும் தெரிவித்தனர்.
மத்திய கிழக்கு நிலவரம் குறித்தும் அதன் மூலம் எரிசக்தி விநியோகத் தொடர்கள், எரிசக்தி விலைகள் ஆகியவை மேல் ஏற்படக்கூடிய தாக்கம் குறித்தும் கவலையுற்றிருப்பதாகச் சிங்கப்பூரும் ஆஸ்திரேலியாவும் குறிப்பிட்டன.
வட்டார அளவிலான ஒத்துழைப்பை வலுப்படுத்தி இயற்கை எரிசக்திக்கு மாறுவதைத் துரிதப்படுத்தி எரிசக்தி விநியோகத் தொடர்புகளை வலுப்படுத்த சிங்கப்பூரும் ஆஸ்திரேலியாவும் உறுதியுடன் இருப்பதாகத் திரு வோங்கும் திரு அல்பனீசியும் கூறினர்.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் செய்துகொள்ளப்பட்ட விரிவான உத்திபூர்வ பங்காளித்துவம் 2.0 திட்டத்தின்கீழ் அத்தியாவசிய விநியோகங்கள் குறித்த வர்த்தகத்துக்கான ஏற்பாடுகள் குறித்து சிங்கப்பூரும் ஆஸ்திரேலியாவும் கலந்துரையாடல்களை நடத்தவுள்ளன.
எரிசக்தி விநியோகத் தொடர்கள் தொடர்ந்து செயல்படுவதை உறுதிசெய்ய பிற வர்த்தகப் பங்காளிகளும் தங்களுடன் கைகோக்கும்படி திரு வோங்கும் திரு அலப்னீசியும் அழைப்புவிடுத்தனர்.

