கேன்பரா: சிங்கப்பூரும் ஆஸ்திரேலியாவும் தற்காப்பில் தொடங்கி வர்த்தகம் வரை பல்வேறு அம்சங்களில் அவற்றின் ஒத்துழைப்பை வலுப்படுத்திக்கொள்ளவிருக்கின்றன.
இருநாடுகளும் 60 ஆண்டுகால அரசதந்திர உறவைப் பறைசாற்றும் நேரத்தில் மேம்படுத்தப்பட்ட விரிவான உத்திபூர்வ பங்காளித்துவ (சிஎஸ்பி 2.0) உடன்பாட்டை புதன்கிழமை (அக்டோபர் 8) செய்துகொண்டன.
ஆஸ்திரேலியத் தலைநகர் கேன்பராவில் கையெழுத்திடப்பட்ட சிஎஸ்பி 2.0 உடன்பாடு, தற்காப்பு, விநியோகத் தொடர், பசுமை, மின்னிலக்கப் பொருளியல்கள், உணவுப் பாதுகாப்பு, இயற்கை எரிசக்தி, புத்தாக்கம், செயற்கை நுண்ணறிவு போன்ற பல்வேறு அம்சங்களில் இருநாட்டு ஒத்துழைப்பை வலுப்படுத்துகிறது.
சிங்கப்பூரும் ஆஸ்திரேலியாவும் இதற்குமுன் 2015ஆம் ஆண்டு விரிவான உத்திபூர்வ பங்காளித்துவ உடன்பாட்டைச் செய்துகொண்டன.
அதன்மேல் உருவாக்கப்பட்ட சிஎஸ்பி 2.0 உடன்பாட்டில் 80 திட்டங்கள், 20 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள், 11 புதிய கலந்துரையாடல்கள் ஆகியவை அடங்கும்.
அமைதி, நிலைத்தன்மை ஆகியவற்றை உள்ளடக்கிய இருதரப்பு ஒத்துழைப்பு, இருநாட்டுப் பொருளியல்களை ஒன்றிணைப்பது, கரிம வெளியேற்றத்தை முழுமையாகக் குறைப்பதற்கான இலக்கை எட்டுவது ஆகிய ஐந்து முக்கிய அம்சங்கள் கலந்துரையாடலில் உள்ளடங்கும்.
சிங்கப்பூரும் ஆஸ்திரேலியாவும் செய்துகொண்ட முதல் சிஎஸ்பி உடன்பாடு இருநாடுகளுக்கும் நல்ல அனுகூலங்களைக் கொடுத்திருப்பதாகப் பிரதமர் லாரன்ஸ் வோங் கூறினார்.
உலகின் முதல் மின்னிலக்க, பசுமைப் பொருளியலுக்கான ஒப்பந்தங்கள் ஆகியவற்றை செய்வதற்கான வழியைக் கண்டறிவது அவற்றுள் ஒன்று என்றார் அவர்.
தொடர்புடைய செய்திகள்
இருநாடும் அனுபவிக்கும் பலனைத் தாண்டி உலகளவில் பன்முகத்தன்மை கொண்ட கொள்கை வலுப்பெறுவதற்கு இது ஓர் உதாரணம்.
“நாம் இதுபோன்று ஒன்றிணைந்து செயல்படும்போது இருதரப்பு திட்டங்களை மட்டும் அல்ல, பன்முகத்தன்மை கொண்ட கட்டமைப்பைக் கட்டிக்காக்கவும் வலுப்படுத்தவும் செய்கிறோம்,” என்று திரு வோங் குறிப்பிட்டார்.
சிஎஸ்பி 2.0 உடன்பாட்டுக்கான பணிகள் ஏற்கெனவே தொடங்கிவிட்டன என்ற பிரதமர் வோங், திரு ஆல்பனீசுடன் இணைந்து சிங்கப்பூருக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடையில் நடைபெறும் பத்தாவது தலைவர்கள் சந்திப்பில் கலந்துகொண்டார்.
“பல நாடுகள் ஏற்றுமதி, இறக்குமதிகள்மீது தடைகளை விதித்தன. அது சிங்கப்பூருக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இக்கட்டான காலமாக இருந்தது. இருநாடுகளும் ஒன்று மற்றதன்மீது வைத்துள்ள நம்பிக்கையால் விநியோகத் தொடரைத் தொடர்ந்து செயல்படுத்தினோம்,” என்றார் பிரதமர் வோங்.
சிங்கப்பூரும் ஆஸ்திரேலியாவும் இணையம், மின்னிலக்கமயமாதல், செயற்கை நுண்ணறிவு ஆகிய புதிய, உருமாறிவரும் அம்சங்களிலும் ஒத்துழைப்பை வலுப்படுத்தும் என்றார் அவர்.