ஒரு பேராளர் குழுவுக்குத் தலைமை தாங்கி, புருணைக்குச் சென்றிருக்கும் பிரதமர் லாரன்ஸ் வோங், புருணை தலைநகர் பண்டார் ஸ்ரீ பகவானில் திங்கட்கிழமை (நவம்பர் 3) அன்று நடைபெற்ற 11வது சிங்கப்பூர்-புருணை இளம் தலைவர்கள் திட்டத்தின் மதிய விருந்தில் கலந்துகொண்டார்.
புருணை பிரதமர் சுல்தான் ஹசனல் போல்கியா அளித்த அந்த மதிய விருந்தில் பிரதமருடன் சிங்கப்பூர் பேராளர்களும் கலந்துகொண்டனர்.
அதன் தொடர்பில் தமது ஃபேஸ்புக் பக்கத்தில் பிரதமர், “புருணையும் சிங்கப்பூரும் உண்மையிலேயே சிறப்பான உறவைப் பகிர்ந்துகொள்கின்றன. இது நமது நாடுகள் தலைமுறை தலைமுறையாகத் தலைவர்களிடையே கட்டியெழுப்பியுள்ள ஆழமான நம்பிக்கை மற்றும் நெருக்கமான தனிப்பட்ட உறவுகளைப் பிரதிபலிக்கிறது.
“இன்று முன்னதாக புருணையின் பிரதமர் சுல்தான் ஹாஜி ஹசனல் போல்கியாவுடன் ஒரு சந்திப்பில் பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதித்தோம். பின்னர் நடைபெற்ற மதிய விருந்திலும் பங்கேற்றதில் நான் பெருமைப்படுகிறேன். எங்களுடைய நீடித்த பங்காளித்துவத்தை மீண்டும் உறுதிப்படுத்தும் ஓர் அன்பான, அர்த்தமுள்ள உரையாடலை நாங்கள் மேற்கொண்டோம். எங்கள் புருணை நண்பர்களுடன் ஒரு முழு நாள் கலந்துரையாடல்கள் மற்றும் பரிமாற்றங்களை எதிர்பார்க்கிறேன்,” என்று பதிவிட்டுள்ளார்.
பிரதமர் வோங்குடன், தேசிய வளர்ச்சி அமைச்சர் சீ ஹொங் டாட், சுகாதார மற்றும் மனிதவள மூத்த துணை அமைச்சர் கோ போ கூன், தகவல், மின்னிலக்க மேம்பாட்டு மற்றும் கல்வி துணை அமைச்சர் ஜாஸ்மின் லாவ், நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற மற்றும் கலாசார, சமூக, இளையர்துறை அமைச்சுகளின் மூத்த நாடாளுமன்றச் செயலாளர் கோ ஹன்யான், கல்வி மற்றும் தேசிய வளர்ச்சி அமைச்சுகளின் மூத்த நாடாளுமன்றச் செயலாளர் சையது ஹருன் அல்ஹப்ஷி ஆகியோரும் புருணை சென்றுள்ளனர்.

