பல துறைகளில் வலுக்கும் சிங்கப்பூர், கம்போடியா ஒத்துழைப்பு

2 mins read
7ddbd4fd-e198-4eb1-93d5-47a9ae0d961a
சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வோங் கம்போடியத் தலைநகர் நோம் பென்னில் அந்நாட்டுப் பிரதமர் ஹுன் மானெட்டுடன் உரையாடுகிறார். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூரும் கம்போடியாவும் அரசதந்திர உறவின் 60 ஆண்டுகாலத்தை நினைவுகூரும் வகையில் பல துறைகளில் தங்கள் ஒத்துழைப்பை வலுப்படுத்த உள்ளன.

இவற்றில், எரிசக்தி புதுப்பிப்பு, உயர்தர கரியமில துறை, வேளாண் வர்த்தகம் ஆகியவை அடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை, தனது ஆக அண்மைய ஆசியான் நாடுகளின் அறிமுகப் பயணத்தில் கம்போடியத் தலைநகர் நோம் பென்னில் சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வோங் தெரிவித்தார்.

நோம் பென்னின் அரசு மாளிகையில் தமக்கு பகல் உணவு விருந்து அளித்த கம்போடியப் பிரதமர் ஹுன் மானெட்டுக்கு பிரதமர் லாரன்ஸ் வோங் நன்றி தெரிவித்தார். அப்பொழுது உரையாற்றிய பிரதமர் கடந்த 60 ஆண்டுகளில் இரு நாட்டு உறவுகள் தொடர்ந்து வலுப்பெற்று வந்துள்ளதாகக் கூறினார்.

“நமது இரு நாடுகளுக்கு இடையிலான உறவுக்கு வலுவான அடித்தளத்தை அப்போதைய பிரதமர் லீ குவான் யூ, மன்னர் நோரோடம் சிகானுக் ஆகியோர் ஏற்படுத்தினர்,” என்று விருந்துபசரிப்பில் பிரதமர் வோங் தெரிவித்தார்.

“அது இருதரப்பு மரியாதை, நம்பிக்கை, நட்பு அடிப்படையிலானது. அதுவே நமது தற்போதைய உறவு முறையை வழிநடத்திச் செல்கிறது,” என்று திரு வோங் தெரிவித்தார்.

வியட்னாமின் மிகப் பெரிய முதலீட்டு நாடாகவும் வர்த்தகப் பங்காளியாகவும் விளங்குகிறது சிங்கப்பூர். சிங்கப்பூர், கம்போடியாவுக்கு இடையிலான இரு நாட்டு வர்த்தகம் 2024ஆம் ஆண்டு $4.83 பில்லியனைத் தொட்டது என்றார் திரு வோங்.

முன்னதாக, திரு வோங் கம்போடிய மன்னர் நேரோடம் சிகாமணியைச் சந்தித்தார். அதன்பின்னர் அவர் செனட் சபைத் தலைவர் ஹுன் சென்னைச் சந்தித்தார்.

பிரதமர் திரு மானெட் உடனான சந்திப்பில் இரு தலைவர்களும் முன்னுரிமை அடிப்படையில் ஒத்துழைக்க வேண்டிய துறைகள் குறித்து விவாதித்தனர்.

இதில் முதன்மைத் துறையாக எரிசக்தி புதுப்பிப்புத் துறை அடையாளம் காணப்பட்டது. இதில் இரு நாட்டுத் தலைவர்களும் பசுமையான தொடர்புகளை, ஆசியான் நாடுகளுக்கு மத்தியில் வளர்ப்பது குறித்தும் பேசியதாக பிரதமர் விளக்கினார்.

அத்துடன், ஆசியான் நாடுகளின் மின்சார கட்டமைப்பை ஒருங்கிணைத்து நாடுகளுக்கு இடையே 2045ஆம் ஆண்டுக்குள் மின்சக்தி வர்த்தகத்தில் ஈடுபடுவதும் அடங்கும்.

குறிப்புச் சொற்கள்