சொங்சிங்: உயர்மட்டப் பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு சிங்கப்பூரும் சீனாவும் சாதனை அளவில் 27 ஒப்பந்தங்கல் திங்கட்கிழமை (டிசம்பர் 15) கையெழுத்திட்டன.
புவிசார் அரசியல் நிச்சயமற்ற தன்மைகள், விரைவான தொழில்நுட்ப மாற்றங்கள், பொருளியல் தடைகளுக்கு மத்தியில், இரு நாடுகளும் வலுவான, பரந்த உறவுகளுக்கு அழைப்பு விடுக்கும் வேளையில், சுகாதாரம், உணவு முதல் மின்னிலக்கப் பொருளியல் வரையிலான துறைகள் புதிய திட்டங்களில் உள்ளடக்கப்பட்டுள்ளன.
“சிங்கப்பூரும் சீனாவும் தொடர்ந்து ஒத்துழைப்பதற்கான வழிகளைக் கண்டுபிடிப்பது, சவால்களை எதிர்நோக்குவது, புதிய வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொள்வது ஆகியவை மிகவும் முக்கியமானது,” என்று துணைப் பிரதமரும் வர்த்தக தொழில் அமைச்சருமான கான் கிம் யோங், இருதரப்பு ஒத்துழைப்புக்கான கூட்டு மன்றத்தில் (ஜேசிபிசி) பேசினார்.
இருதரப்பு ஒத்துழைப்புக்கான கூட்டு மன்றத்தில் திரு கானுடன் இணைத் தலைவராகச் செயல்படும் சீனத் துணைப் பிரதமர் டிங் சூசியாங் தனது தொடக்க உரையில், உலகளவில் தன்னைப்பேணித் தனம் வளர்ந்து வந்தாலும், சீனாவிற்கும் சிங்கப்பூருக்கும் இடையிலான உறவு சீராக வளர்ந்துள்ளதாகவும், ஒத்துழைப்பு பயனளிக்கும் பலன்களைத் தருவதாகவும் கூறினார்.
இந்த ஆண்டின் முதல் 11 மாதங்களில் இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகம் ஓர் ஆண்டுக்கும் முந்தைய காலத்தை விட 8.8 விழுக்காடு வளர்ச்சியடைந்துள்ளது. அதே வேளையில் சிங்கப்பூருக்கும் சீனாவுக்கும் இடையிலான விமானச் சேவைகளின் எண்ணிக்கையும் கொவிட் பெருந்தொற்றுக்கு முந்தைய அளவைவிட அதிகமாக இருப்பதாகவும் திரு டிங் சூசியாங் குறிப்பிட்டார்.
கிட்டத்தட்ட மூன்று மணி நேர பேச்சுவார்த்தைக்குப் பிறகு, இரு தலைவர்களும் 27 ஒப்பந்தங்களுக்கான ஆவணங்களின் பரிமாற்றத்தைப் பார்வையிட்டனர்.
ஐந்து ஆவணங்கள் சீனா - சிங்கப்பூர் (சொங்சிங்) உத்திபூர்வ இணைப்பு குறித்த செயல்விளக்க முன்முயற்சியின் அடுத்த பத்தாண்டுகளுக்கான திட்டங்களை வகுத்தன. சுகாதாரம், கல்வி, பசுமை நிதி, மின்னிலக்க வர்த்தகம் போன்ற புதிய பகுதிகளுக்கு ஒத்துழைப்பை விரிவுபடுத்துகின்றன.
அதேவேளையில், அதன் நான்கு ஆரம்ப ஒத்துழைப்புத் துறைகளான நிதிச் சேவைகள், விமானப் போக்குவரத்து, போக்குவரத்து மற்றும் தளவாடங்கள், தகவல் மற்றும் தொடர்பு தொழில்நுட்பம் ஆகியவற்றை உருவாக்குகின்றன.
தொடர்புடைய செய்திகள்
அறிவிக்கப்பட்ட ஒப்பந்தங்கள் ஒன்றின் கீழ், சீனத் தொழில்துறை, வர்த்தக வங்கியின் சிங்கப்பூர் கிளைக்குப் பிறகு, சிங்கப்பூரின் இரண்டாவது ரென்மின்பி (சீன நாணயம்) தீர்வு வங்கியாக டிபிஎஸ் அறிவிக்கப்பட்டது.
சிங்கப்பூரில் உள்ள உற்பத்தியாளர்களிடமிருந்து சீனாவிற்கு பதப்படுத்தப்பட்ட இறைச்சி ஏற்றுமதியைச் சீராகச் செய்வதற்காக, சிங்கப்பூரின் நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற அமைச்சும் சீனாவின் பொதுச் சுங்க நிர்வாகம் ஆகியவற்றுக்கு இடையேயான ஒரு நெறிமுறையும் ஒப்பந்தம் செய்துள்ளன.
தொற்று மற்றும் தொற்று அல்லாத நோய்களைத் தடுப்பது, கட்டுப்படுத்துதல், ஆரோக்கியமாக மூப்படைதல், முதியோர் பராமரிப்புக் கொள்கை, பெண்கள், குழந்தைகள் ஆரோக்கியம் போன்ற துறைகளில் அணுக்கமாகப் பணியாற்றுவதற்காக சீனாவின் தேசிய சுகாதார ஆணையத்துடன் சிங்கப்பூர் சுகாதார அமைச்சு ஒரு புரிந்துணர்வுக் குறிப்பில் கையெழுத்திட்டது.

