சிங்கப்பூர் ஆயுதப் படையும் சீனாவின் மக்கள் விடுதலை ராணுவமும் இணைந்து செப்டம்பர் 1ஆம் தேதியிலிருந்து இரண்டு வார இருதரப்பு ராணுவப் பயிற்சியை மேற்கொள்ளவிருக்கின்றன.
கொவிட்-19 கிருமிப்பரவலினால் 2019ஆம் ஆண்டுக்குப் பிறகு நடத்தப்படவிருக்கும் அத்தகைய முதல் பயிற்சி அது.
‘எக்சர்சைஸ் கார்ப்பரேஷன்’ எனும் அப்பயிற்சி 2009ஆம் ஆண்டு தொடங்கியது. தற்போது அது ஐந்தாவது முறையாக இடம்பெறுகிறது.
‘பயங்கரவாதத்திற்கு எதிரான நகர்ப்புற நடவடிக்கைகள்’ என்ற கருப்பொருளில் நடைபெறும் இந்தப் பயிற்சியில் மீட்புச் சூழலுக்கு ஆதரவு வழங்கும் நிபுணத்துவ பரிமாற்றங்கள், உத்திபூர்வப் பயிற்சிகள் போன்றவற்றில் ராணுவ வீரர்கள் ஈடுபடுவார்கள் என்று தற்காப்பு அமைச்சின் அறிக்கை கூறியது.
இருவழித் தொடர்புகள், இருதரப்பு நிபுணத்துவ உறவை வலுப்படுத்தவும், மக்களிடையிலான இணைப்பை வளர்க்கவும், இரண்டு ராணுவங்களுக்கு இடையே பரஸ்பர நம்பிக்கையையும் புரிந்துணர்வையும் அதிகரிக்கவும் வகைசெய்யும் என்று அமைச்சு குறிப்பிட்டது.
அந்தப் பயிற்சி, மற்ற நாடுகளுடன் பரஸ்பர ஒத்துழைப்பை மேம்படுத்த சிங்கப்பூர் ராணுவம் மேற்கொண்டுவரும் முயற்சிகளின் ஒரு பகுதி என்று அமைச்சு தெரிவித்தது.
அப்பயிற்சி சிங்கப்பூருக்கும் சீனாவுக்கும் இடையிலான நட்பார்ந்த இருதரப்புத் தற்காப்பு உறவை மறுஉறுதிப்படுத்துவதாகவும் அது கூறியது.